தமிழ்நாடு சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்ட குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், சட்டப்பேரவை அரங்கியில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவப்படத்தை திறந்து வைத்தார். பின்னர், சிறப்புரை ஆற்றிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், “அறியாமைக்கும், ஏழ்மைக்கும் எதிராக குரல் கொடுத்த கருணாநிதி இந்தியத் தலைவர்களில் குறிப்பிடத்தகுந்தவர்” என்று புகழாரம் சூட்டினார்.
சென்னை மாகாணத்தில் 1921ஆம் ஆண்டு ஜனவரி 12ம் தேதி சட்டமன்றம் தொடங்கிவைக்கப்பட்டது. அதனால், தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது.
தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.
சட்டப்பேரவை அரங்கில் சபாநாயகரின் இருக்கைக்கு இடதுபுறம் அமைக்கப்பட்டிருந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உருவப் படத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்.
யானை சிலை மீது கருணாநிதி கைவைத்து நிற்பது போன்ற உருவப்படம் சட்டமன்றத்தில் திறந்துவைக்கப்பட்டது. படத்திற்குக் கீழே ‘காலம் பொன் போன்றது, கடமை கண் போன்றது’ என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது.
முன்னதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் சட்டப்பேரவை நூற்றாண்டு விழா தொடங்கியது. விழாவிற்கு வருகை தந்திருந்தவர்களை வரவேற்று சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு வரவேற்புரையாற்றினார்.
சபாநாயகர் அப்பாவு உரை
விழாவில் சபாநாயகர் அப்பாவு பேசியதாவது: “1921ம் ஆண்டு தொடங்கப்பட்ட அன்றைய சென்னை மாகாண அவையில், இன்றைய ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, கேரளா, தெலங்கானா, ஒடிசா ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளும் இடம்பெற்றிருந்தன.
அதனால், இந்தப் பேரவையே இந்தியாவின் தென் மாநிலங்களின் தாய் சட்டப்பேரவையாக விளங்குகிறது. இப்படியான பெருமைவாய்ந்த சட்டமன்றத்தின் நூற்றாண்டு விழாவினை தொடக்கிவைக்கவும், இந்த பேரவையில் 5 முறை முதலமைச்சராகப் பொறுப்பேற்று இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வகையில் சிறப்பாகச் செயல்பட்ட முத்தமிழறிஞர் கலைஞரின் திருவுருவப் படத்தினை திறந்து வைக்கவும் வருகை தந்துள்ள குடியரசுத் தலைவருக்கு மீண்டும் ஒரு முறை நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.
இந்தியாவில் உள்ள அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் சுதந்திர தினத்தில் கோட்டையில் கொடியேற்றும் உரிமையைப் பெற்றுத் தந்தவர் கலைஞர் வங்காள மொழி அறிஞர் கூறுகையில், நாங்கள் இன்று ஆங்கிலம் படித்து உலகம் முழுவதும் சென்று பயனடைகிறோம் என்றால் அதற்குக் காரணம் கலைஞரின் உறுதியான மொழி கொள்கைதான் என்றும் இதுபோன்ற தலைவர் எங்கள் மாநிலத்தில் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இப்படி இந்தியா முழுவதும் பல்வேறு தலைவர்களால் பாராட்டப்பட்ட தலைவர்தான் கலைஞர், அதனால் தான், அவரது மறைவிற்கு நாடாளுமன்ற உறுப்பினர் அல்லாத, தலைவரான கலைஞருக்கு இரு அவைகளிலும் அடித்தட்டு மக்களுக்காக உழைத்தவர் என்று புகழாரம் சூட்டி இரங்கல் தீர்மானம் நிறைவேற்றி நாடாளுமன்றம் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
தான் சந்தித்த தேர்தலில் ஒரு முறைகூட தோல்வியைச் சந்திக்காமல் 13 முறை வென்று இந்த பேரவையின் உறுப்பினராகவும், ஐந்து முறை முதலமைச்சராகவும் இருந்து பேரவைக்கு பெருமை சேர்த்தவர் முத்தமிழறிஞர் கலைஞர். சமூக நீதி காவலராக, பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு, அருந்ததியருக்கான உள் ஒதுக்கீடு, இஸ்லாமியருக்கான உள் ஒதுக்கீடு, பெண்களுக்குச் சொத்தில் சம உரிமை, மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகளுக்கான உரிமைகள் என அனைத்தையும் நிறைவேற்றிக் காட்டி இந்தியாவிற்கே முன்னோடி தலைவராக இருந்தவர் முத்தமிழறிஞர் கலைஞர்” என்று பேசினார்.
இதையடுத்து, குடியரசுத் தலைவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கே.ராஜன் எழுதிய “early writing system a journey from graffiti to brahmi” புத்தகங்கத்தை நினைவுப் பரிசாக வழங்கினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருக்கமான பேச்சு
சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவிற்கு முன்னிலை வகித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரை ஆற்றினார். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: “வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்படவேண்டிய நாளாக இந்த ஆகஸ்ட் 2ம் நாள் இனி வரும் நாட்களில் சிறப்புப் பெற்றிருக்கிறது.
மகளிருக்கு வாக்குரிமை அளிக்கும் சட்டத்தை முதன்முதலாக நிறைவேற்றிய பெருமை சென்னை மாகாண சட்டமன்றத்திற்கு உரியது. இதுபோல, பார் போற்றும் தீர்மானங்களை நிறைவேற்றிய பெருமை இச்சட்டமன்றத்திற்கு உண்டு.
முதலமைச்சராக எதிர்க்கட்சித் தலைவராக, அமைச்சராக, சட்டமன்ற உறுப்பினராக பல்வேறு பணிகளில் சிறப்பாகப் பணியாற்றிப் பெருமை சேர்த்தவர் முத்தமிழறிஞர் கலைஞர்.
இந்தியாவின் முதல் குடிமகனான குடியரசுத் தலைவர், தமிழன்னையின் தலைமகனான கலைஞரின் திருவுருவப் படத்தை திறந்துவைத்ததை எண்ணி தமிழ்நாட்டின் முதலமைச்சராக மகிழ்கிறேன்; கலைஞரின் மகனாக நெகிழ்கிறேன்.” என்று உருக்கமாகப் பேசினார்.
ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரை
சட்டப்பேரவை நூற்றாண்டு விழா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பேசியதாவது: “சட்டசபை நூற்றாண்டு விழாவில் பங்கேற்க வந்துள்ள அனைவரையும் வரவேற்கிறேன். இந்த முக்கியமான நாளில் சட்டசபைக்கு தங்கள் முக்கிய பங்களிப்பை அளித்த அனைத்து முக்கிய தலைவர்களுக்கும் நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டை வளர்ச்சியை மிகுந்த மாநிலமாக மாற்றியதில் இவர்களின் பங்கு முக்கியமானது. இந்த மாநிலத்தின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் சட்டசபை மெட்ராஸ் சட்டசபை என்ற பெயரில் 1921ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டது. முதல் சட்டசபையே பின்தங்கியவர்களுக்கும் பெண்களும் வாய்ப்பை அளிக்கும் வகையில் செயல்பட்டது.
தமிழ்நாடு சட்டசபை பனகல் அரசர், ராஜாஜி, டி. பிரகாரம், காமராஜர், பக்தவச்சலம், அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா எனப் பல தலைவர்களைக் கண்டுள்ளது.
இந்தியாவின் முதல் சட்டசபை பெண் உறுப்பினர் முத்துலட்சுமி ரெட்டி மெட்ராஸ் மாகாணத்தில் இருந்துதான் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. தமிழ்நாடு கண்ட மிக முக்கிய தலைவர்களில் ஒருவர் அறிஞர் அண்ணா என்று அழைக்கப்படும் சி.என்.அண்ணாதுரை. மிகச் சிறந்த பேச்சாற்றலைக் கொண்ட அண்ணாவின், 'கடமை கண்ணியம் கட்டுப்பாடு' என்ற வாசகம் புகழ்பெற்றது. அண்ணா மெட்ராஸ் மாகாணம் என்ற பெயரைத் தமிழ்நாடு என்று மாற்றினார்.
இந்தியாவிலேயே பழமையான சட்டசபை என்ற சிறப்பை தமிழ்நாடு சட்டசபை பெற்றுள்ளது. சமூக நீதியை வென்றெடுக்கவும் தீண்டாமையை ஒழிக்கவும், பெண்கள் வாழ்வை முன்னேற்றவும் கல்வியை மேம்படுத்தவும் மூன்றாம் பாலித்தவருக்கான உரிமையை உறுதி செய்வது எனப் பல முக்கிய சட்டங்கள் இங்கு நிறைவேற்றப்பட்டுள்ளது இந்திய அரசியல்வாதிகளில் குறிப்பிடத்தக்கவராகவும் தனித்துவம் மிக்கவராகவும் திகழ்ந்தவர். தமிழ்நாட்டின் மண்ணின் மைந்தரான கருணாநிதியின் படம் சட்டசபையில் திறக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் முன்னேறிய மாநிலங்களில் தமிழ்நாடு முக்கிய இடம் வகிக்கிறது.
இந்தியாவில் இருக்கும் பழைமையான சட்டசபைகளில் தமிழக சட்டசபையும் ஒன்று. தமிழ்நாட்டிற்கு 5 முறை முதல்வராக இருந்து, தேர்தலில் ஒரு முறை கூட தோல்வியைச் சந்திக்காதவர். கை ரிக்ஷா, பதில் சைக்கிள் ரிக்ஷா, குடிசைக்குப் பதில் பதிலாகக் குடியிருப்புகள் வழங்கியவர். 14 வயதில் அரசியலில் நுழைந்த கருணாநிதி, 13 முறை சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். 1957ஆம் ஆண்டு முதல் தான் உயிரிழக்கும் வரை சட்டசபையில் உறுப்பினராக இருந்தவர்.
பல துறைகளிலும் தனித்துவம் மிக்க அறிவுடன் திகழ்ந்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. பிச்சைக்காரர் மறுவாழ்வு திட்டம். கை ரிக்ஷாவுக்கு பதில் சைக்கிள் ரிக்ஷா வழங்கிய திட்டம், குடிசை மாற்று வாரியம், பெண்களுக்குச் சொத்துரிமை, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், இலவச டிவி, தீண்டாமை கொடுமையை ஒழிக்கச் சமத்துவபுரம், இலவச கேஸ் வழங்கும் திட்டம் என பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்திய மக்களின் முதல்வராக இருந்தவர் கருணாநிதி.
70 ஆண்டுக் காலம் அரசியலில் இருந்த கருணாநிதி இந்தியாவின் அனைத்து குடியரசுத் தலைவர்களுடனும் நெருக்கமான உறவைக் கொண்டிருந்தவர் கருணாநிதி. மற்ற சட்டசபை உறுப்பினர்களுக்கு அவர் ஒரு முன்னுதரனமாக இருந்தவர். கடந்த 2017இல் கருணாநிதியைப் பிரதமர் மோடி சந்தித்தார். அந்த வரலாற்று முக்கியமான சந்திப்பில் நானும் உடன் இருந்தேன். 16ஆவது தமிழ்நாடு சட்டசபைக்குத் தேர்வாகியுள்ளவர்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்துள்ளார். இருப்பினும், அனைவரும் பொதுமக்களின் நலனுக்காக உழைக்க வேண்டும்” என்று பேசினார்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை
தமிழ்நாடு சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், சட்டப்பேரவை அரங்கில் முதலமைச்சர் மு.கருணாநிதியின் உருவப்படத்தை திறந்து வைத்து பேசிய அவர், “அறியாமைக்கும், ஏழ்மைக்கும் எதிராக குரல் கொடுத்த கருணாநிதி இந்தியத் தலைவர்களில் குறிப்பிடத்தகுந்தவர்” என்று புகழாரம் சூட்டினார்.
இந்த விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பேசியதாவது: “தமிழில் சில வார்த்தைகளுடன் எனது உரையைத் தொடங்க விரும்புகிறேன்.
இன்றைய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வில் கருணாநிதியின் திருவுருவப்படத்தை திறந்து வைத்ததில் மகிழ்ச்சியடைகிறேன். உண்மையில் இது ஒரு முக்கியத்துவம் மிக்க நாள்! முன்னர், மெட்ராஸ் சட்டமன்ற கவுன்சில் என்று பெயரிடப்பட்டிருந்த அவையின் நூற்றாண்டு விழாவை நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். ஆகஸ்ட் மாதம் என்பது நமது தேசிய நாட்காட்டியில் சிறந்ததொரு மாதமாகும். ஏனெனில், இது நமது சுதந்திர தினத்தின் ஆண்டு நிறைவையும் குறிக்கிறது. விடுதலைக்குப் பிறகான ஆண்டுகளில், தேசம் பல துறைகளில் பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளது. மக்களும் தலைவர்களும் இணைந்து மேற்கொண்ட பணிகளினால் இது சாத்தியமானது.
மெட்ராஸ் சட்டமன்ற கவுன்சிலின் வரலாறு, 1861 ஆம் ஆண்டு காலத்தையது என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆலோசனை அமைப்பாக அக்காலத்தில் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு தான், 1921 ஆம் ஆண்டில், சட்டத்தை இயற்றும் சட்டப்பேரவையாக உருவாக்கப்பட்டது. காலனித்துவ ஆட்சியின் கீழ், அத்தகைய அமைப்பு செயல்படுவதற்கு, பல வரையறைகளும், சவால்களும் நிச்சயம் இருந்தன.
சாதி, சமூகம் மற்றும் பிற அம்சங்களின் அடிப்படையில் ஏராளமான தனித்தனி தொகுதிகள் இருந்தன. ஓரளவேயாக இருந்த போதிலும், அது ஒரு பொறுப்பான அரசாங்கத்தை நோக்கிய நகர்வாகும். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு நடைமுறையில் இருந்த ஜனநாயகம், அதன் நவீன வடிவத்தில், மீண்டும் திரும்பியது.
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரப்பிரதேசம், தெலுங்கானா, ஒடிசா, லட்சத்தீவு ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய மெட்ராஸ் பிரசிடென்சியின் மக்களால் இந்தப் புதிய தொடக்கம் வரவேற்கப்பட்டது. விடுதலைப் போராட்ட இயக்கத்தால் வடிவமைக்கப்பட்ட இந்தப் பகுதிகளைச் சேர்ந்த மக்களின் கனவுகளும், விருப்பங்களும் புதிய சட்டமன்றம் மூலம் வெளிப்பட முடிந்தது. மக்கள் தங்கள் கனவுகளை நனவாக்கும் ஒரு தளமாக, ஆரம்ப கட்டத்தில் மக்கள் வாக்குகளை வென்ற நீதிக்கட்சி இருந்தது.
சட்டமன்ற கவுன்சில், பின்வரவிருக்கும் காலத்திற்கான பல சட்டங்களை இயற்றியது. அதன் ஆரம்ப காலகட்டங்களில் அவை பல மாற்றங்களைச் சந்தித்தன. ஜனநாயக உணர்வு மாநில சட்டமன்றத்தின் வழிகாட்டும் ஒளிவிளக்காக உள்ளது. சமூகத்தின் நலிவுற்ற பிரிவினருக்கு அதிகாரம் அளிப்பதற்கும், ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கும் நாடு முழுவதும் பிரதிபலித்த பல முற்போக்குச் சட்டங்களின் நீரூற்றாக இந்தச் சட்டங்கள் இருந்தன என்று சொல்வது தவறல்ல. மெட்ராஸ் சட்டமன்றம், ஒரு முழுமையான பிரதிநிதித்துவ ஜனநாயக வடிவ ஆட்சியாளுமைக்கான விதைகளை விதைத்தது. நாட்டு விடுதலைக்குப் பிறகு இதற்கான பலன்கள் கிடைத்தன.
ஆளுகையில் கவனம் செலுத்தி ஏழைகளை மேம்படுத்துவதற்கும், சமூகத் தீமைகளை ஒழிப்பதற்கும், ஜனநாயகத்தின் வேர்களை ஊன்றி வளரச் செய்த பெருமை இந்த சட்டமன்றத்திற்கு உண்டு. வறுமைக் கோட்டில் வாழ்ந்த மக்களின் நலனை இலக்காகக் கொண்டு, இப்பகுதியில், அரசியலும் நிர்வாகமும் நேர்மறையான, பகுத்தறிவு வாய்ந்த உள்ளடக்கம் கொண்டதாக உருவாயின. தேவதாசி முறையை ஒழித்தல், விதவை மறுமணம், பள்ளிகளில் மதிய உணவு, நிலமற்றவர்களுக்கு விவசாய நிலம் விநியோகம் ஆகியவை சமூகத்தை மாற்றியமைத்த சில புரட்சிகர எண்ணங்களாகும். இங்கு யார் ஆட்சி செய்தாலும் மாநிலத்தின் நலன் என்ற கருத்தாக்கமே இந்த சட்டமன்றத்தில் ஆழமாக வேரூன்றியுள்ளது.
தமிழ்நாட்டு மக்களின் முற்போக்குச் சிந்தனையை எடுத்துக்காட்டுகின்ற வகையில், மிகச்சிறந்த தமிழ்க்கவிஞர் மகாகவி சுப்பிரமணிய பாரதியின் ஒரு சில வரிகளை இங்கே நான் மேற்கோள் காட்ட விரும்புகிறேன்:
“மந்திரம் கற்போம் வினைத்தந்திரம் கற்போம்
வானை யளப்போம், கடல் மீனை யளப்போம்
சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்
சந்தித்தெரு பெருக்கும் சாத்திரம் கற்போம்”
என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பேசினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.