தமிழ்நாட்டில் வடசேரி, மைக்கேல்பட்டி, சேத்தியாத்தோப்பு ஆகிய இடங்களில் நிலக்கரிச் சுரங்கம் அமைப்பதற்கு எதிராக சட்டப்பேரவையில், தி.மு.க., காங்கிரஸ், அ.தி.மு.க., பா.ம.க., வி.சி.க சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
இந்த தீர்மானத்தின் மீது பேசிய பா.ஜ.க உறுப்பினர்கள், தமிழக அரசு தனியாருக்கு தாரைவார்ப்பது பற்றி பேசியதைக் குறிப்பிட்டு பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, சாத்தான் வேதம் ஓதுகிறது… தனியாருக்கு தாரைவார்ப்பது பற்றி பா.ஜ.க பேசுகிறது என்று சாடினார்.
தமிழ்நாட்டில் புதியதாக நிலக்கரிச் சுரங்கம் அமைப்பதற்கு எதிராக சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட கவனஈர்ப்பு தீர்மானம் குறித்து பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் பேசினார்.
சட்டப்பேரவையில் பா.ஜ.க உறுப்பினர் வானதி சீனிவாசன் பேசுகையில், “எல்லாரும் எங்கள் கவர்மெண்ட்டை எதிர்த்துதான் கொடுத்திருக்கிறார்கள். நீங்கள் பேசுகிறீர்களா என்று கேட்டீர்கள். எல்லாரும் சேர்ந்து கவர்மெண்ட்டை திட்டினதால், பதில் சொல்வதற்கும் கொஞ்சம் நேரத்தைக் கொடுங்கள்.
ஒரு மனிதனுக்கு சோறு வேண்டுமா, கரண்ட் வேண்டுமா என்று கேட்டால் சோறுதான் முக்கியம். அதில் மாற்றுக் கருத்தே இல்லை. குறிப்பாக தமிழகத்தில் டெல்டா பகுதிகள் விவசாய ரீதியாக எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பகுதி என்பது அனைவரும் உணர்ந்த விஷயம்.
இதற்கு முன்பாக, முந்தைய அ.தி.மு.க அரசு அந்த பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்திருக்கிறது. ஆனால், ஒரு ஏலம் வருகிறபோது, எந்தவொரு அரசாங்கத்தின் சட்டத்திற்கு கீழ், மத்திய அரசின் சட்டமாகவே இருந்தாலும், நிலம் என்று வரும்போது, உள்ளூரில் இருக்கக்கூடிய வருவாய்த்துறையின் அனுமதி, அவர்களுக்கான தகவல் இதையெல்லாம் தெரிவித்த பிறகுதான், அரசாங்கம் நடவடிக்கை எடுக்க முடியும். அதனால், இந்த மாதிரி நடவடிக்கைகள் வருகின்றபோது, வருவாய்த்துறை அந்த மாவட்டத்தினுடைய நிர்வாகம் எந்த மாதிரியான நடவடிக்கைகளை எடுத்தார்கள். ஏன் இந்த விஷயத்தில் முன்னாடியே அவர்கள் மத்திய அரசுக்கு தகவல் சொல்லவில்லை. இரண்டாவது, இங்கே நிறைய பேர் பேசும்போது, கார்ப்பரேட்டுக்கு கொடுத்துவிடுவார்கள், அம்பானி, அதானி என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தார்கள். 2011-ல், ஜனவரி 4-ம் தேதி இன்றைய முதல்வர் அன்றைக்கு துணை முதல்வராக இருந்தபோது, 100 கோடி ரூபாய் முதலீட்டில் கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் லிமிட்டேட் நிறுவனத்தோடு ஒரு ஒப்பந்தத்தைப் போட்டு, 1,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். 3,600 கோடிக்கு ரூபாய் நமக்கு வணிக ரீதியாக பலன் கிடைக்கும். சி.என்.ஜி-யை உருவாக்குவதற்கு தமிழகத்திற்கு வாய்ப்பு கிடைக்கும் என சொல்லி அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள். அந்த அறிக்கை இன்னும் இருக்கிறது” என்று கூறினார்.
அப்போது குறுக்கிட்ட சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, அதற்கு பதில் சொல்லியிருக்கிறார்கள். அதனால், இந்த டெல்டா விவகாரம் பற்றி மட்டும் பேசுங்கள். இந்த விஷயத்துக்கு மட்டும் வாங்க. பழையதை அவைக் குறிப்பில் இருந்து நீக்குங்கள் என்று அறிவுறுத்தினார்.
தொடர்ந்து பேசிய வானதி சீனிவாசன், “டெல்டா விஷயத்தைப் பொறுத்த வரைக்கும், இந்த மூன்று பிளாக்குகளை நிலக்கரிக்காக இந்த மாதிரி ஏலத்துக்கு கொடுத்ததை மாற்ற வேண்டும். இதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று பா.ஜ.க சார்பில், நாங்கள் நிலக்கரித் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியிருக்கிறோம். அதை வலியுறுத்தவும் செய்வோம். நன்றி” என்று கூறி அமர்ந்தார்.
இதையடுத்து, சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவை பேசுவதற்கு அழைத்தார்.
அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், “தமிழ்நாட்டின் உணவு உற்பத்தி பகுதிகளில் முக்கியாமானதாக இருக்கக்கூடிய காவிரி டெல்டா பகுதிகளில், ஒன்றிய அரசின் நிலக்கரி அமைச்சகத்தின் மூலமாக பழுப்பு நிலக்கரி எடுப்பதற்கான ஏல அறிவிப்பு பெரும் அதிர்ச்சியையும் அதிர்வலைகளையும் காவிரி டெல்டா பகுதிகளிலும் அதையொட்டி இருக்கக்கூடிய கடலூர் பகுதிகளிலும் உருவாக்கியிருப்பதை மாமன்ற உறுப்பினர்கள், இந்த அவையினுடைய கவனத்திற்கு, அரசினுடைய கவனத்திற்கு கொண்டுவந்திருக்கிறார்கள்.
அவையில் இருக்கக்கூடிய உறுப்பினர்கள் தெரிவித்திருக்கக்கூடிய கருத்துகள், அவர்களுடைய உணர்வுகளோடு முதலமைச்சர் ஒன்றியிருக்கிறார்கள் என்பதை நீங்கள் மிக நன்றாக அறிவீர்கள்.
எனவேதான், ஒன்றிய நிலக்கரி அமைச்சகத்தின் மூலமாக, ஏலம் விடப்பட்டிருக்கக்கூடிய 101 வட்டாரங்களில் சேத்தியாதோப்பு கிழக்கு, மைக்கேல்பட்டி, வடசேரி, ஆகிய மூன்று தொகுதிகள் தமிழ்நாட்டில் அமைந்திருக்கக்கூடிய பகுதிகள் என்பதை அறிந்தவுடன், முதலமைச்சர் ஸ்டாலின் நேற்றே உடனடியாக பிரதமருக்கு கடிதம் எழுதி, இத்தகைய அறிவிப்பினை நிலக்கரி அமைச்சகம் ஏல அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசிடம் அவர்கள் எந்தொவொரு அனுமதியும் பெறவில்லை. தமிழ்நாடு அரசுடன் அவர்கள் எந்தவொரு கலந்தாலோசனையும் நடத்தவில்லை. அவர்களாகவே இத்தகைய அறிவிப்பை தன்னிச்சையாக செய்திருப்பது கெடுவாய்ப்பாக அமைந்திருக்கிறது என்று முதலமைச்சர் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
இந்த பகுதிகள் எல்லாம் காவிரி டெல்டா பகுதிகளையொட்டி அமைந்திருக்கிற பகுதிகள்.மைக்கேல்பட்டி காவிரி டெல்டா பகுதிகளையொட்டி அமைந்திருக்கிற பகுதிகள் நெல் சிறப்பாக விளையக்கூடிய பகுதிகள் என்பது அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.
முதலமைச்சர் எழுதியிருக்கிற கடிதத்தில், தெளிவாகக் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறபோது, நம்முடைய, வேளாண் பாதுகாப்புச் சட்டம், அந்தச் சட்டத்தின்படி, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தின் 2-வது அட்டவணையில் குறிப்பிட்டுள்ள இடங்களில் எந்தவொரு புதிய திட்டங்களையும் புதிய செயல்பாட்டையும் தொடங்கக் கூடாது என்று ஒதுக்கப்பட்டுள்ளது. 2வது அட்டவணையில் தடை செய்யப்பட்ட திட்டங்களில் நிலக்கரி படுகைகள், மீத்தேன், ஷேல் எரிவாயு, ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட எண்ணெய் எரிவாய் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தல், துளையிடுதல், பிரித்தெடுத்தல் ஆகியவை அடங்கும். தற்போது வெளியிடப்பட்ட டெண்டரில், நிலகரி படுகை, மீத்தேன் சுரண்டலும் குறிப்பிடப்படுகிறது. எனவே, தமிழ்நாட்டின் பாதுகாக்கப்பட்ட வேளான் மண்டலத்தின் மேம்பாட்டுத் திட்டத்தின் தடைகளில் அடங்கும். ஆகவே, இந்த ஏல அறிவிப்பு வெற்றிகரமாக செயற்முறைப்பட்டு இடங்கள் அடையாளம் காணப்பட்டாலும், சுரங்கத் திட்டத்தை மேற்கொள்ள முடியாது என்பதைக் குறிக்கிறது. எனவே, தமிழ்நாட்டில் அடையாளங் காணப்பட்ட வட்டாரங்களைப் பொறுத்தவரை இந்த ஏல நடைமுறை வீணான செயலாகும். அறிவிப்பு வெளியிடுவதற்கு முன்பே தமிழ்நாடு அரசுடன் கலந்தாலோசித்திருந்தால், இந்த பிரச்னைகளை தெளிவுபடுத்தி இருக்கலாம், அதோடு, இதனால், ஏற்பட்ட தேவையற்ற குழப்பத்தை தவிர்த்திருக்கலாம் என்று முதலமைச்சர் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
எனவே, இந்த சூழ்நிலையில், அவை விவசாய நிலங்களாக இருப்பதாலும், தமிழ்நாட்டின் உணவுப் பாதுகாப்பு பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாலும், தமிழ்நாட்டில் உள்ள மூன்று சுரங்க வட்டாரங்கள், வடசேரி, மைக்கேல்பட்டி, சேத்தியாத்தோப்பு கிழக்கு ஆகிய மூன்றையும் நிலக்கரிச் சுரங்க ஏலத்தினுடைய 7வது / 17வது தவணைகளில் இருந்து முற்றிலுமாக விலக்கிட வேண்டும் என்றும் அதற்கான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார்.
அதே போல, எதிர்காலத்திலே, இது போன்ற நிகழ்வுகளில் இந்த அறிவிப்புகளுடைய வெளியிடுகிறபோது, மாநில அரசுகளோடு கலந்தாலோசிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, இத்தகைய நிலைமையில் பிரதமர் தலையிட்டு சரி செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் தெரிவித்திருக்கிறார்.
ஏல அறிவிப்பு வந்தவுடன் முதலமைச்சர் வேகமாக செயல்பட்டு பிதமருக்கு கடிதம் எழுதியிருக்கிறார்கள் என்பதை நன்றாக அறிவீர்கள். கடிதம் சென்ற உடன் தமிழகத்தின் உயர் அதிகாரிகள், நிலக்கரி அமைச்சகத்தின் உயர் அதிகாரிகளைத் தொடர்புகொண்டு, இந்த கடிதத்தின் வாயிலாக அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்து, மேல்நடவடிக்கைகளை உடனடியாகக் கைவிட வேண்டும். இந்த மூன்று பகுதிகளுக்கும்ம் உடனடியாக விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி இருக்கிறார்கள்.
அதே போல, திருவாரூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணத்தில் இருந்த விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, இந்த திட்டத்தை தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்று திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார்.
தி.மு.க நாடளுமன்றக் குழு தலைவர் டி.ஆர். பாலு நிலக்கரித் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷியைத் தொடர்புகொண்டு, அவரை நேரடியாக சந்தித்து, முதலமைச்சரின் கடிதத்தின் சாராம்சத்தை விளக்கி, விலக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்திட நேரம் கேட்டிருக்கிறார். அவர் தொலைபேசியில், ஒன்றிய அமைச்சரிடத்தில் பேசினார். ஒன்றிய அமைச்சர் வெளியூரிலே இருந்த காரணத்தால், அவர்களை சந்திக்க முடியாவிட்டாலும், அவரிடத்தில் விளக்கம் கொடுத்திருக்கிறார்.
தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்றைக்கு இது குறித்த கவன ஈர்ப்பு தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் கொண்டுவந்திருக்கிறார்கள். ஆகவே, தமிழ்நாடு அரசு, குறிப்பாக முதலமைச்சர் ஸ்டாலின், இந்த செய்தியைக் கேள்விப்பட்டபோது உடனடியாக கடிதம் எழுதியதோடு நிறுத்திவிடாமல், எல்லா வகையிலும் இந்த பிரச்னையில் தமிழ்நாட்டினுடைய நிலைப்பாட்டை எடுத்துச் சொல்லி, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்கள், அதையொட்டி இருக்கக்கூடிய வேளாண் விளைநிலங்களில் இந்த திட்டத்தை தமிழ்நாடு அரசு ஒருபோது அனுமதிக்காது என்பதை திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறது என்பதை இந்த அவைக்கு கவனப்படுத்த விரும்புகிறேன்.
அதே போல, முன்னாள் அமைச்சர் காமராஜ் பேசுகிறபோது, 2006-ம் ஆண்டு பற்றி எல்லாம் நீங்கள் குறிப்பிட்டு சொன்னீர்கள். நான் அதிகமாக அதற்குள் போக விரும்பவில்லை. காரணம் இது அரசியலுக்காகக் கொண்டு போகவில்லை. நீங்கள் கொண்டுவந்திருக்கக்கூடிய சட்டத்தில் நீங்கள் எதையெல்லாம் விட்டுவிட்டு கொண்டுவந்திருக்கிறீர்கள் என்று மனசாட்சியோடு நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். அந்த சட்டம் இந்த அவையிலே கொண்டுவந்தபோது, நீங்கள் இருக்கக்கூடிய அதே எதிர்க்கட்சிகளின் வரிசையில் நான்தான் அந்த சட்ட முன் வடிவு குறித்துப் பேசினேன். அதற்கு அன்றைய வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் பதில் சொன்னார். ஆனால், நீங்கள் என்னென்ன எல்லாம் நீங்கள் விட்டுவிட்டுச் செய்தீர்கள் என்பதை நான் இந்த அவைக்கு கொண்டுவர விரும்பவில்லை. இந்த நேரம் அது இந்த அவைக்கு தேவையில்லை. அதை நான் அரசியலாக்க விரும்பவில்லை. இன்னும் சொல்லவேண்டும் என்றால், நம்முடைய கவனம் திசைதிரும்பிப் போய்விடும். எனவே, அதே பதிலைத்தான் வானதி சீனிவாசனுக்கும் நான் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.
தனியாருக்கு நீங்கள் கொடுத்துவிட்டீர்கள் என்று சொன்னது ரொம்ப வேடிக்கையாக இருக்கிறது. சாத்தான் வேதம் ஓதுகிறது என்று சொல்வார்கள். நீங்கள் வந்து தனியாருக்கு கொடுப்பதைப் பற்றியெல்லாம், பா.ஜ.க இந்த இடத்தில் வந்து பாடம் நடத்துகிறதே அதைத்தான் நான் அப்படிப் பார்க்கிறேன். கொஞ்சம், ஒரு விரலை நீட்டிப் பார்க்கும்போது உங்களை நோக்கி திரும்பக் கூடிய மூன்று விரல்களைப் பார்த்தால், தனியாருக்கு தாரை வார்ப்பதைப் பற்றியெல்லாம் நாம் பேசுகிறோமே என்று நீங்கள் நினைத்துக் கொள்ளலாம். இந்த பிரச்னையில் இருந்து நான் திசைதிருப்ப விரும்பவில்லை. ஆனால், ஒன்றை மாத்திரம் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். முதலமைச்சர் சார்பில் நான் தெரிவிக்க விரும்புவது, எந்தக் காலத்திலும் எந்த சூழ்நிலையிலும் தமிழ்நாட்டின் நெற்களஞ்சியங்களாக, நமக்கு உணவு அளிக்கக்கூடிய அன்னை பூமியாக இருக்கக்கூடிய டெல்டா மாவட்டங்களில் ஒருபோதும் இத்தகைய திட்டங்களை தமிழ்நாடு அரசு அனுமதிக்காது என்று திட்டவட்டமாக அரசின் சார்பாக நான் உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன்” என்று கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.