‘வாக்குச்சாவடிக்கு வராத வாக்காளர்’ முறையை கைவிடுக: மு.க ஸ்டாலின் கோரிக்கை

‘வாக்குச்சாவடிக்கு வராத வாக்காளர்’ முறை, ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையில், ஒரு சமமான, நேர்மையான தேர்தல் களத்தை நிச்சயம் உருவாக்காது.

dmk, mk stalin conduct grama sabha meeting, mk stalin grama sabha meeting in violation of ban, கிராம சபைக் கூட்டம், திமுக தலைவர் முக ஸ்டாலின் மீது வழக்குப் பதிவு, police fir registered on mk stalin, தடையை மீறி கிராம சபை கூட்டம், thiruvallur, korattur, grama sabha meeting, gandhi jayanthi

மூத்தகுடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள தபால் வாக்கு முறையை தேர்தல் ஆணையம் திரும்பப்பெற வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.

இதுதொடர்பாக மு. க ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில்,

“தகுதியும் உரிமையும் கொண்டவர்கள் என அடையாளப்படுத்தப்பட்டிருக்கும் வாக்காளர்கள், வாக்குச்சாவடிகளில் உள்ள வெளிப்படையான வாக்குப்பதிவு முறையைச் சீர்குலைக்கும் வகையில், ‘3.10.2020 அன்று அறிவிக்கப்பட்ட பிஹார் மாடல் தேர்தல் நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்’ என்று அனைத்து மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கும் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையைப் பார்த்து, சுதந்திரமான நேர்மையான தேர்தல் ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்திருப்போர் பேரதிர்ச்சிக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

நடந்து முடிந்த பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் குறித்து, அம்மாநிலத்தில் தனிப்பெரும்பான்மையுள்ள கட்சியாக வெற்றி பெற்றுள்ள ராஷ்டிரிய ஜனதா தளம், தேர்தல் ஆணையத்தின் மீது முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளை நடுநிலையோடு பரிசீலனை செய்து பார்த்ததற்குப் பிறகு, பிஹாரில் பாஜக கூட்டணியின் வெற்றியே, இன்றைக்கு நாட்டு மக்களின் சந்தேகத்திற்கு உள்ளாகியுள்ளது.

தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள இந்த சுற்றறிக்கை, ‘பூனைக் குட்டி வெளியே வந்து விட்டது’ என்பதை அறிவிப்பது மட்டுமின்றி,பிஹார் தேர்தலில் பாஜக கூட்டணியின் வெற்றிக்கு என்ன காரணம் என்ற திரைமறைவு மர்மமும் வெளிப்பட்டு விட்டது!

தேர்தல் ஆணையம் சொல்லும் ‘பிஹார் மாடல்’ தேர்தல் என்பது என்ன? பாஜக கூட்டணிக்கு ஆதரவாக, வாக்குப்பதிவில் சாதகமான சூழலை உருவாக்க, அம்மாநிலத் தேர்தலில் ‘வாக்குச்சாவடிக்கு வராத வாக்காளர்கள்’ என்ற புதிய வகை வாக்குப்பதிவுமுறை கண்டுபிடிக்கப்பட்டுத் திணிக்கப்பட்டது.

மூத்த குடிமக்களும், மாற்றுத்திறனாளிகளும் இதில் அடங்குவார்கள். ஆனால், இவர்கள் குறித்த தனி வாக்காளர் பட்டியல் கிடையாது. வாக்காளர் பட்டியலில் இடம்பெறும் வயதும், வாக்காளரே தாமாகவே கொடுப்பதுதான். அதற்கு உரிய ஆவணங்களைச் சரிபார்த்து வாக்குப் பட்டியலில் வயது குறிப்பிடப்படுவதும் இல்லை.

அதைப் போல, தேர்தல் ஆணையம் ஒருவரை மாற்றுத்திறனாளி என்று எந்த வகையில் வகைப்படுத்துகிறது என்பதற்கான எவ்வித விதிமுறைகளும் வகுக்கப்படவில்லை. எல்லாவற்றையும் விட, யார் யாரெல்லாம் இப்படி வாக்களிக்கத் தகுதி படைத்தவர்கள் என்று முன்கூட்டியே தேர்தல் ஆணையம் ஒரு பட்டியலைத் தயார் செய்து அறிவிக்காது.

இவ்வளவு குழப்பங்களும் குளறுபடிகளும் சந்தேகங்களும் நிறைந்த புதிய ‘தபால் வாக்களிப்பு’ முறையை அறிமுகப்படுத்தி; ’80 வயதுக்கு மேற்பட்டோர் எல்லாம் மூத்த குடிமக்கள். அவர்கள் தபால் வாக்குகள் பதிவு செய்யலாம்’ என்று தேர்தல் ஆணையம் அக்டோபர் 2019-ல் கூறியது.

ஆனால், பிஹார் தேர்தலுக்கு முன்பு, எந்தவித முகாந்திரமும் இன்றி, இந்த ’80 வயதுக்கு மேல்’ என்பதை, ’65 வயதுக்கு மேல் உள்ளவர்களும் தபால் வாக்கு அளிக்கலாம்’ என்று திடீரென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த அறிவிப்பைக் கண்டு, நாடு முழுவதும் ஜனநாயகத்தில் பெரும் நம்பிக்கை வைத்துச் செயல்படும் அனைத்துக் கட்சிகளும் வெகுண்டு எழுந்தன. திமுகவும் இந்த அறிவிப்பைக் கடுமையாக எதிர்த்தது.

நானே 13.7.2020-ல், இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையத்திற்குக் கடிதம் எழுதி, அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தாமல், உள்நோக்கத்துடன், தன்னிச்சையாக வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன்.

பலத்த எதிர்ப்பின் விளைவாக, 65 வயதுக்கு மேல் உள்ளவர்களும் தபால் வாக்கு அளிக்கலாம் என்ற அறிவிப்பைக் கைவிட்டு, மீண்டும் ’80 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு மட்டுமே தபால் வாக்குகள் பதிவு செய்யும் வாய்ப்பு’ என்று தேர்தல் ஆணையம் 16.7.2020 அன்று அறிவித்தது.

அந்த ‘பீகார் மாடல்தான்’, பிஹாரில் ஜனநாயகத்தின் சுவாசக்காற்றை மாசுப்படுத்தி, நாடு முழுவதும் இன்றைக்கு பாஜகவின் பீகார் தேர்தல் வெற்றி குறித்து மிகப்பெரிய ஐயப்பாட்டை, அதிர்ச்சி தரத்தக்க குற்றச்சாட்டுகளை பொதுவெளிக்குக் கொண்டு வருவதற்கு அடிப்படையாக அமைந்து விட்டது.

இப்படியொரு ‘பிஹார் மாடல் தேர்தல் நடைமுறைகளைக் கடைப்பிடியுங்கள்’ என்றுதான், இந்தியத் தேர்தல் ஆணையம் வலியுறுத்துகிறது. வாக்குச்சாவடிக்கு வராத வாக்காளர்களுக்கு வழங்கப்படும் இந்தப் புதிய ‘தபால் வாக்கு முறை’ என்பது, பூத் லெவல் அதிகாரி (Booth level Officer), அந்த வாக்குச்சாவடிக்கு உட்பட்ட 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமகன் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர் வீட்டுக்குப் போவார். அவரிடம் தபால் வாக்குச் சீட்டைக் கொடுப்பார். அவருடைய வாக்குகளைப் பதியப் பெற்று, அந்த வாக்குச்சீட்டைத் திரும்ப வாங்கி வந்து, சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரியிடம் (Returning Officer) ஒப்படைப்பார்.

ஒருவேளை பூத் லெவல் அதிகாரி போகும் போது அந்த வாக்காளர் வீட்டில் இல்லை என்றால், மீண்டும் ஐந்து நாட்களுக்குள் அந்த வீட்டுக்குச் சென்று, தபால் வாக்குகளைச் சேகரிக்க வேண்டும். இப்படிச் சேகரிக்கப்பட்ட தபால் வாக்குகள் பற்றிய விவரங்கள், தேர்தல் அதிகாரியிடம் பூத் லெவல் அதிகாரி கொடுத்து வைத்துள்ள தபால் வாக்குகளின் விவரங்கள், முன்கூட்டியே அரசியல் கட்சிகளுக்குத் தெரியப்படுத்தப்பட மாட்டாது.

வாக்களிப்பது ஒருவருடையை ரகசியமான தனிப்பட்ட உரிமை. அதைப் பாதிக்கும் வகையில், நேரடியாகத் தபால் வாக்குச் சீட்டுக்களைக் கொண்டு போய்க் கொடுத்து, வாக்குகள் பதிந்து பெறுவது என்பது, ரகசியமான, சுதந்திரமான வாக்கெடுப்பு முறையையும், ஜனநாயகத்தையும், பார்வைக்கு வைக்கப்படும் கடைப் பொருள்களாக்கி, கேலிக்கூத்தாக்கி விடும்.

இதனால், சுதந்திரமான, நேர்மையான, நியாயமான தேர்தலை, அடியோடு நாசப்படுத்தும் கடும் விளைவுகள் குறித்துக் கவலைப்படாமல், இந்தியத் தேர்தல் ஆணையமே, அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான, இதுமாதிரியொரு திரைமறைவுப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் வாக்களிப்பு முறையை ஊக்குவிப்பது கவலையளிக்கிறது.

போலி வாக்குகள் பதிவு செய்யவும், வாக்காளர்கள் மீது தங்களது செல்வாக்கைப் பயன்படுத்தி, ஆளுங்கட்சிக்கு வேண்டிய தேர்தல் அதிகாரிகள் வாக்குகளைப் பெறவும், ரகசிய வாக்களிப்பு முறையைப் பாழ்படுத்தவும், துணை போகும் இந்த ‘வாக்குச்சாவடிக்கு வராத வாக்காளர்’ முறை, ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையில், ஒரு சமமான, நேர்மையான தேர்தல் களத்தை நிச்சயம் உருவாக்காது.

தேர்தலில் அனைத்துக் கட்சிகளுக்கும் சமகளம் உருவாக்கப்பட வேண்டும் என்பதே தேர்தல் ஆணையத்தின் முதன்மைப் பணி மற்றும் நோக்கம். அதுதான் ஜனநாயகத்தின் ஆணிவேரைப் பாதுகாக்கும் முக்கியப் பணி.

அந்தப் புனிதமான தேர்தல் கடமையைத் தாரைவார்த்து விட்டு, ஒவ்வொரு தேர்தலிலும் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் என்று வாக்களிக்க வராத 15 சதவீதத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை, ஜனநாயக விரோதமாக பாஜகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும் பகிரங்கமாக அபகரித்துக் கொள்ளும் இந்த முயற்சிக்குத் தேர்தல் ஆணையமே துணை போவது, ஜனநாயகத்தின் கண்களில் மண்ணைத் தூவும் பேராபத்தான போக்கு என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த 3.10.2020-ம் தேதியிட்ட சுற்றறிக்கை, உச்ச நீதிமன்றம் இதுவரை பல்வேறு தீர்ப்புகள் மூலம் உறுதிப்படுத்தி வந்துள்ள சுதந்திரமான, நேர்மையான, நியாயமான தேர்தலுக்கு விரோதமானது. ஒருவர் வாக்கு செலுத்துவதை, இன்னொருவர் பார்க்கக் கூடாது என்பது தேர்தலின் அடிப்படை அம்சம். அந்த வகையில் வாக்குச்சாவடிகளில் நடைபெறும் வாக்குப்பதிவின் ரகசியத்தை, அந்த போற்றத்தக்க ஜனநாயக முறையின் உயிர்நாடியை நசுக்கும் செயலாக ‘வாக்குச்சாவடிக்கு வராத வாக்காளர்களுக்கு’ தபால் வாக்கு அளிக்கும் நடைமுறை இருக்கிறது. இது கரோனாவை விடக் கொடுமையானது!

வாக்குச் சீட்டுகளை மூத்த குடிமக்கள் வீட்டுக்குக் கொண்டு செல்லும் ‘பூத் லெவல் ஆபிசர்’, பிறகு அதைச் சேகரிக்கப் போகும் தேர்தல் ஊழியர்கள் அறிகுறி இல்லாத கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தால், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் உயிருக்கு என்ன பாதுகாப்பு? என்ன உத்தரவாதம்? அந்த வாக்காளருக்கே இப்படியொரு தொற்று இருந்தால், அங்கு போகும் தேர்தல் ஊழியர்களுக்கு என்ன பாதுகாப்பு? வாக்குச்சாவடிக்கு வராத வாக்காளர்களுக்கு, தபால் வாக்குக்காக, தனியாக வாக்குச்சீட்டுகளை அச்சடிப்பது யாருடைய வரிப்பணம்?

ஆகவே, இந்தப் புதிய தபால் வாக்கு அளிக்கும் முறை, இந்தியத் தேர்தல் ஜனநாயகம் இதுவரை வலியுறுத்தி வந்த சுதந்திரமான, நேர்மையான தேர்தலுக்கு விரோதமானது என்பதை விட, மக்கள் வரிப்பணத்தைத் தேவையில்லாமல் விரயம் செய்து, பாஜகவுக்கோ, அதன் கூட்டணிக் கட்சிகளுக்கோ, உதவிட முனையும் போக்காகும்.

சமமற்ற தேர்தல் களத்தை உருவாக்கிட, தேர்தல் முடிவுகளைத் திரித்துச் சிதைத்திட, இந்தியத் தேர்தல் ஆணையமே களமிறங்குவது நம் தேர்தல் ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை மிகப்பெரிய அளவில் சேதப்படுத்திவிடும். அதுமட்டுமின்றி, மக்களின் விலைமதிப்பற்ற, ரகசிய வாக்குப்பதிவு முறையைச் சவக்குழியில் தள்ளி, புதைத்து விடும் பேராபத்தை ஏற்படுத்தி விடும்.

ஆகவே, ‘வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வராதவர்கள்’ என்று கூறி; 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கும், சலுகை அளிப்பது போன்று ‘தபால் வாக்களிக்கும்’ முறை என்ற ‘பாசக் கயிறை’ அறிமுகப்படுத்தி, தமிழ்நாட்டில் பாஜகவுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் துணை போகும் பாரபட்சமான முயற்சிகளில், நடுநிலைமையுடன் செயல்பட வேண்டிய இந்தியத் தேர்தல் ஆணையம் ஈடுபட வேண்டாம் என்றும் அந்த அறிவிப்பை முதலில் கைவிட்டு, மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கு 3.10.2020 அன்று அனுப்பியுள்ள சுற்றறிக்கையைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு, தேர்தல் நடைமுறைகளுக்கு மாறான ‘தபால் வாக்கு அளிக்கும்’ வாய்ப்பினை, எவ்வித வெளிப்படையான நடைமுறைகளும் இன்றிக் கொடுப்பது குறித்து, முதலில் நாடாளுமன்றத்தில் விவாதித்து, பிறகு அதைச் செயல்படுத்தும் நடைமுறைகள் குறித்து அனைத்து அரசியல் கட்சிகளின் கருத்துகளைக் கேட்டறிய வேண்டும். இந்த மாற்றங்கள் ஆரோக்கியமான தேர்தல் ஜனநாயகத்தை அதன் எதிர்காலத்தை வலுப்படுத்தும் நோக்கில் இருக்க வேண்டும் என்று இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையத்தை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்”.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tn assembly election senior citizen disabilities postal ballot m k stalin election news

Next Story
‘கொரோனா இல்லை சான்று’ கட்டாயம் : சபரிமலை பக்தர்களுக்கு தமிழக அரசின் வழிமுறை
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express