தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் விசிகவிற்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இதில் மொத்தம் 4 தனி தொகுதிகள், 2 பொது தொகுதிகள் ஆகும். திருப்போரூர் - எஸ்.எஸ்.பாலாஜி, நாகப்பட்டினம் - ஆளூர் ஷா நவாஸ், காட்டுமன்னார் கோயில் (தனி) - சிந்தனை செல்வன், வானூர் (தனி) - வன்னி அரசு, அரக்கோணம் (தனி) - கௌதம சன்னா, செய்யூர் (தனி) - பனையூர் பாபு ஆகிய தொகுதிகளில் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். திருமாவின் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
காட்டுமன்னார்கோவில் (தனி) தொகுதியில் விசிக வேட்பாளர் சிந்தனை செல்வன் 86056 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் தொடர்ந்து 2 முறை அ.தி.மு.க. வெற்றி பெற்று முருகுமாறன் எம்.எல்.ஏ.வாக இருந்து வந்தார். இந்த தொகுதியை இந்த முறை விசிக கைப்பற்றியுள்ளது.செய்யூர் தனி தொகுதியில் போட்டியிட்ட விசிகவின் பனையூர் பாபு வெற்றி பெற்றார்.நாகை சட்டசபை தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் முகமது ஷநவாஸ் வெற்றி பெற்றார். அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் தங்க கதிவரனை விட 7,238 வாக்குகள் கூடுதலாக பெற்றார்.செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் தொகுதியில் பாமகவின் ஆறுமுகத்தை பானை சின்னத்தில் போட்டியிட்ட விசிக வேட்பாளர் பாலாஜி 1,609 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.
பொதுத்தொகுதியில் போட்டியிட்ட 2 இடங்களில் விசிக வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. விசிக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடாமல் தனிச் சின்னமான பானை சின்னத்தில் போட்டியிட்டது. குறைந்த நாட்களில் புதிய சின்னத்தை மக்கள் மத்தியில் கொண்டு சென்று, பொது தொகுதியில் வெற்றிபெற்றுள்ளது.
சட்டசபை தேர்தல் வெற்றி குறித்து திருமாவளவன் தனது டிவிட்டர் பக்கத்தில், அபாண்டமான பழி மற்றும் அநாகரிகமான அவதூறுகளுக்கிடையில் போதிய பொருளாதார வலிமையுமின்றி புத்தம்புதிய சின்னமொன்றில் போட்டியிட்டு ஆறில் நான்கு வெற்றி பெற்றிருப்பது விசிகவுக்கான மாபெரும் அங்கீகாரம். இது வெறுப்பு அரசியலுக்கு எதிராக விழுந்த பேரிடி. வாக்களித்த மக்களுக்கு மனமார்ந்த நன்றி என பதிவிட்டுள்ளார்.
14 நாட்கள் இடைவெளியில் அறிமுகமான சின்னம். விடுதலைச் சிறுத்தைகளின் பானை சின்னம். சாதி மதவெறியர்கள் பரப்பிய அவதூறுகளை நொறுக்கித் தவிடு பொடியாக்கிவிட்டு வெற்றி இலக்கை எட்டுகிறது பானை என மற்றொரு ட்வீட்டில் திருமா தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் 10 ஆண்டுகளுக்கு பிறகு விசிக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவைக்குள் நுழைகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.