தமிழக சட்டமன்றத் தேர்தல் பிரசாரம் இன்று மாலை 7 மணியுடன் நிறைவடைய இருந்ததால், அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் இறுதிகட்ட தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டனர்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தான் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பின்னர் பேசிய ஸ்டாலின் “அதிமுக ஆட்சியில் தமிழக சீரழிந்துவிட்டது; அதிமுகவை போன்று திமுகவை மிரட்ட முடியாது. உங்களுக்காக உழைக்க எனக்கு உத்தரவிடுங்கள். 12,000 கி.மீ பயணம் செய்து மக்களை சந்தித்தேன். மக்களின் கோப அலையை சுனாமியாக கண்டேன். மக்களவைத் தேர்தலில் ஜீரோ அளித்தது போல வரும் தேர்தலில் அதிமுகவுக்கு ஜீரோ அளித்தால் நாம்தான் ஹீரோ. ஏப்ரல் 6ம் தேதி தமிழர்களின் 10 ஆண்டு ஏக்கம் தீரும் நாள்; மே 2 தமிழகத்தின் மாபெரும் வளர்ச்சி தொடங்கும் நாள்… திமுக அணி அமோக வெற்றி பெறும்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டாக்டர் எழிலனுக்கு ஆதரவாக ட்விட்டரில், “முத்தமிழறிஞர் கலைஞரை கண்ணின் இமைபோல் காத்த மருத்துவர் எழிலன். கொரோனா பேரிடரில் கழகத்தின் களவீரர்கள் பலரை காத்தவர் மருத்துவர் எழிலனுக்கு வாக்களியுங்கள்” என்று வாக்கு சேகரித்தார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தான் போட்டியிடும் எடப்பாடி தொகுதியில் இறுதி கட்ட பிரசாரத்தை நிறைவு செய்தார். சாலைவழியாக பிரசார வாகனத்தில் இருந்தபடி இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்.
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தான் போட்டியிடும் கோவை தெற்கு தொகுதியில் இறுதிக்கட்ட பிரசாரத்தை மேற்கொண்டார். சமகவைச் சேர்ந்த நடிகை ராதிகா கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசனை ஆதரித்து பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார். அதிமுக திமுக மாறி மாறி 50 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளார்கள். அங்கே தலைவர்கள் யாரும் இல்லை. மக்கள் நீதி மய்யம் வரவேற்பு பெற்றுள்ளது. கமல்ஹாசனி டார்ஸ் லைட் சின்னத்திற்கு வாக்களிக்க கோரி பிரசாரம் செய்தார்.
அதே போல, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தேனியில் இரட்டை இலைக்கு சின்னத்தில் சாலைகளில் பிரசார வாகனத்தில் இருந்தபடி வாக்கு சேகரித்து பிரசாரம் செய்தார்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தான் போட்டியிடும் கோவில்பட்டி தொகுதியில் இறுதிகட்ட பிரசாரத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர், கோவில்பட்டியில் பட்டாசு தொழிலாளர்களுக்கு தனி வாரிய அமைக்கப்படும். செவ்வந்தி, பிச்சி, போன்ற மலர்கள் இந்த பகுதியில் அதிக விளைவதால், மதுரை, திண்டுக்கல் பகுதியில் உள்ளதுபோல, பூ மார்க்கெட் அமைக்கப்படும் என்று தனது வாக்குறுதிகளைக் கூறி வாக்கு சேகரித்தார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தான் போட்டியிடும் திருவொற்றியூர் தொகுதியில் இறுதிக் கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், ஜெகத்கஸ்பர் போன்றவர்கள் என்னை பாஜகவின் பி டீம் என்றார்கள். ஆனால், பாஜகவின் மெயின் டீமே திமுகதான். அரவக்குறிச்சியில் அண்ணாமலைக்கு எதிராக திமுக வேட்பாளரை திமுக தலைமை பிரசாரம் செய்ய வேண்டாம் என்று கூறிவிட்டதாக குற்றம் சாட்டினார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் பிரசாரம் ஏப்ரல் 4ம் தேதி மாலை 7 மணியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, ஏப்ரல் 6ம் தேதி காலை 7 மணி முதல் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தமிழகம் முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.