தமிழ்நாடு சட்டப்பேரவை நான்கு நாட்கள் விடுமுறைக்கு பிறகு புதன்கிழமை (மே 4) மீண்டும் கூடியது. இன்றைய சட்டப்பேரவைக் கூட்டத்தில் இந்து சமய அறநிலையத் துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் மானியக் கோரிக்கைகள் விவாதம் விவாதம் நடைபெற்றது.
தருமபுரம் ஆதீனம் பட்டினப் பிரவேசம் தடை சர்ச்சை; அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம்
இன்று தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தில், தருமபுரம் ஆதீனம் பட்டினப் பிரவேசம் நிகழ்சியில், ஆதீனத்தின் பல்லக்கை மனிதர்கள் தோளில் சுமந்து செல்வதற்கு எதிர்ப்புகள் எழுந்ததையடுத்து, மயிலாடுதுறை கோட்டாட்சியர் தருமபுரம் ஆதீனம் பட்டினப் பிரவேசத்துக்கு தடை விதிக்கப்பட்டது குறித்து அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தது.
தமிழக சடப்பேரவையில் பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:
ஆதீனத்தில் வசிக்கும் 72 பேர் விருப்பப்படிதான் தருமபுரம் ஆதீனத்தை பல்லக்கில் தூக்கி செல்வதாக கூறுகின்றனர். தோளில் தூக்கிச் செல்வதில் மரியாதை குறைவு ஏதும் கிடையாது. பாரம்பரியமாக நடைபெற்று வரும் தருமபுர ஆதீனத்தை பல்லக்கில் தூக்கும் நிகழ்விற்கான தடையை நீக்க வேண்டும் என்றார்.
தருமபுரம் ஆதீனத்துடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசி நல்ல முடிவு காண்பார் - அமைச்சர் சேகர் பாபு
இது தொடர்பாக இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு அளித்த விளக்கம் அளித்து பேசுகையில், பட்டினப் பிரவேசம் குறித்து ஆதீனங்களுடன் 3 மணி நேரத்துக்கு மேல் ஆலோசனை நடத்தப்பட்டது. பல்லக்கில் தூக்கும் நிகழ்வு மே 22ஆம் தேதிதான் நடைபெறும். எனவே, இது குறித்து வரும் 22ஆம் தேதி வரை கால அவகாசம் உள்ளதால், தருமபுரம் ஆதீனத்துடன் தமிழக முதல்வர் பேசி, விரைவில் நல்ல முடிவு எட்டப்படும். சிலர் தாங்கள் செய்த தவறுக்காக பல்லக்கில் தூக்கும் நிகழ்வு ரத்து செய்யப்பட்டதை அரசியலாக்கப் பார்க்கிறார்கள்” என்று கூறினார்.
இதனைத் தொடர்ந்து, பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் நத்தம் விஸ்வநாதன், திமுக தலைமையிலான அரசு மதச்சார்பற்ற அரசு எனக் கூறிவரும் நிலையில், பண்டிகைகள் குறித்து அவர் தெரிவித்த சில கருத்துகளை சபாநாயகர் அவைக் குறிப்பில் இருந்து, சபாநாயகர் நீக்கினார். அப்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, நத்தம் விஸ்வநாதன் தவறாக எதையும் குறிப்பிடவில்லை என்று கூறினார்.
இதற்கு விளக்கம் அளித்த முதல்வர் மு.க. ஸ்டாலின், திமுக ஆன்மீகத்திற்கு எதிரான கட்சி என திட்டமிட்டு நாடு முழுவதும் அவதூறு பரப்பப்படுவதாக ஆவேசமாகக் கூறினார். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி வழியில் திராவிட மாடல் ஆட்சியை வழங்கி வருவதாக மு.க. ஸ்டாலின் கூறினார். தங்களின் கூட்டணிக்கு மதச்சார்பற்ற கூட்டணி என்று பெயரிட்டு அப்படியே செயல்பட்டு வருவதாகவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார்.
இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு வெளியிட்ட சிறப்பு அறிவிப்புகள்
இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சர் சேகர் பாபு பேசியதாவது:
“*இந்து சமய அறநிலையத்துறைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி காலம் பொற்காலமாக இருக்கும்
*ராமேஸ்வரம், மதுரை, திருவண்ணாமலை கோவில்களில் முழு நேர அன்னதான திட்டம் செயல்படுத்தப்படும்.
*அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலங்களை மீட்டெடுக்கும் வேட்டை தொடரும்.
*திமுக ஆட்சி முடிவதற்குள் 15 ஆயிரம் கோவில்களில் குடமுழுக்கு பணி நிறைவடையும்.
*கோயில்களில் அன்னை தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர்களை ஊக்குவிக்க சிறப்பு கட்டண சீட்டுகள் அறிமுகம்"
*அர்ச்சனை கட்டணத்தில் அர்ச்சகருக்கு 60% பங்கு தொகையாக வழங்கப்படும்.
*தமிழர் பண்பாடு, கலாச்சாரத்தை விளக்கும் வகையில் கலை நிகழ்ச்சிகள் நடத்த கலாச்சார மையம் அமைக்கப்படும்.” என்று கூறினார்.
கோட்டூர்புரத்தில் ரூ.150 கோடியில் ஒருங்கிணைந்த தகவல் தொழில்நுட்ப தனித்துவ வளாகம் - அமைச்சர் மனோ தங்கராஜ்
இந்து சமய அறநிலையத்துறை, தகவல் தொழில் நுட்பத்துறைகளின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. இதுகுறித்து பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ், கோட்டூர்புரத்தில் ரூ.150 கோடியில் ஒருங்கிணைந்த தகவல் தொழில்நுட்ப தனித்துவ வளாகம் அமைக்கப்படும் என்று கூறியுள்ளார்.
தகவல் தொழில்நுட்பம் மற்றும் வணிகச் செயல்முறை மேலாண்மை நிறுவனங்களை மேம்படுத்த புதிய கொள்கை அமைக்கப்படும் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.
நீட் விலக்கு மசோதா உள்துறை அமைச்சத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது - முதல்வர் ஸ்டாலின்
நீட் விலக்கு மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற ஆளுனர், உள்துறை அமைச்சகத்திற்கு மசோதாவை அனுப்பியுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் வகையில், சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுனருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று நீட் விலக்கு மசோதா தொடர்பாக சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் “நீட் விலக்கு மசோதாவை குடியரசு தலைவருக்கு கவர்னர் அனுப்பி வைத்துள்ளார். நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் அனுப்பியுள்ளதாக, அவரின் தனி செயலாளர் தெரிவித்துள்ளார்” என்று கூறினார்.
மேலும், “நீட் தேர்வுக்கு விலக்கு பெறுவதற்கான நமது போராட்டம் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. மசோதாவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற மத்திய அரசிடம் வலியுறுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் நாம் கூட்டாக மேற்கொள்ள வேண்டும்” என்று கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.