தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (ஏப்ரல் 12) கேள்வி நேரம் முடிந்ததும், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, விருத்தாசலத்தில் படிக்கும் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி உரிமையாளரான தி.மு.க கவுன்சிலர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “விருத்தாசலத்தில் படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அந்த பள்ளியின் உரிமையாளரான தி.மு.க. கவுன்சிலர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
பின்னர், சட்டப்பேரவையில் அ.தி.மு.க உறுப்பினர்கள் பேசும்போது நேரலை செய்யப்படுவதில்லை என்று குற்றம் சாட்டினார். எடப்பாடி பழனிசாமி பேசுவதை நேரலை செய்யாததால் அதிருப்தி அடைந்த அ.தி.மு.க உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் 5 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். வயிறு வலியால் அந்த சிறுமி துடித்துள்ளது. மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது அந்த சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானது தெரியவந்தது. பெற்றோர்கள் அளித்த புகாரை பதிவு செய்தும் எப்.ஐ.ஆர் எதுவும் போடவில்லை. நேற்றைய தினம் இரவு குழந்தையின் பெற்றோர்கள் புகார் அளித்தனர்.
இந்த அரசானது ஆட்சிக்கு வந்ததில் இருந்து பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவது அதிகரித்து வருகிறது. 5 வயது சிறுமி பள்ளி தாளாளரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளது. பிஞ்சு குழந்தையை அந்த பள்ளியின் உரிமையாளரே பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியுள்ளார். அவர் ஆளுங்கட்சியை சேர்ந்தவர் என்பதால் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. பெற்றோர் புகார் அளித்து 13 மணிநேரம் கழித்துதான் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். ஆனால், தகவல் கிடைத்ததுமே கைது செய்துவிட்டதைப் போல் முதல்வர் பேசியுள்ளார். உளவுத்துறை மூலம் உடனே தகவல் கிடைக்கவில்லை என்பதே திறமையற்ற ஆட்சி நடக்கிறது என்பதற்குச் சாட்சி.
இது குறித்து ஜீரோ ஹவர்ஸில் இதுபற்றி பேச நான் எழும்பியதுமே நேரலையை ரத்து செய்துவிட்டனர். அதற்கு முன்னும், பின்னும் காட்டுகின்றார்கள். முதல்வரின் பதில், சிறப்பு தீர்மானமெல்லாம் காட்டுகின்றார்கள். நான் பேசிய பேச்சை மட்டும் கட் செய்துள்ளனர். அதனால், வெளிநடப்பு செய்து உள்ளோம். சட்டசபையில் நேரலை என வாக்குறுதி கொடுத்தனர். அதை நிறைவேற்றினர். ஆனால், பிரதான எதிர்கட்சியினர் பேசுவதை காட்டவில்லை. இதனால் சட்டசபையில் ஜனநாயகம் இல்லை. சபை நடுநிலையாகச் செயல்படவில்லை
எதிர்கட்சியினர் கேள்வி கேட்பதை ஒளிபரப்பாமல், அமைச்சர்கள், முதல்வர் பதில் சொல்வதை மட்டுமே ஒளிபரப்புகின்றனர். இது என்ன ஜனநாயகம்? பிரதான எதிர்கட்சியினர் பேசுவதையும் ஒளிபரப்ப வேண்டுமே? அ.தி.மு.க ஆட்சியில் இருந்த போது எல்லோர் பேசுவதும் ஒளிபரப்பு செய்யப்பட்டது” என்றும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
அதன்பின்னர் சட்டசபையில் நேரலை தொடர்பாக காரசாரமாக விவாதம் நடைபெற்றது. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, நான் பேசுவதை நேரலை செய்வதில் என்ன பிரச்சனை? என கேள்வி எழுப்பினார். அப்போது சபாநாயகர் அப்பாவு பேசும்போது, நேரலை வழங்குவதில் உள்நோக்கம் எதுவும் இல்லை என்றும், சட்டப்பேரவை நிகழ்ச்சி நிரலில் இடம்பெறும் கவன ஈர்ப்புகள் இனி நேரலை செய்யப்படும் என்றும் அறிவித்தார்.
அ.தி.மு.க உறுப்பினர்கள் பேசும்போது நேரலை செய்யப்படுவதில்லை என்று எடப்பாடி பழனிசாமியின் புகார் குறித்து பேசிய அப்பாவு பேசினார். அப்போது, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டை தொடந்து சட்டப்பேரவை நிகழ்ச்சி நிரலில் இடம்பெறும் கவன ஈர்ப்புகள் இனி நேரலை வழங்கப்படும் எனவும் நேரலை வழங்குவதில் உள்நோக்கம் எதுவும் இல்லை எனவும் சபாநாயகர் அப்பாவு கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“