அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் நடந்த மோதல் தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி மற்றும் முதல்வமைச்சர் மு.க. ஸ்டாலின் இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது. அப்போது, இ.பி.எஸ் கேள்விக்கு, “உங்களைப்போல, உங்களைப் போல நாங்கள் அடிச்சிக்கல…” என்று மு.க. ஸ்டாலின் அதிரடியாக பதிலளித்துள்ளார்.
தமிழகத்தில் 2023-24ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் கடந்த மார்ச் 20-ந்தேதி தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து மார்ச் 21-ந்தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், துறை ரீதியான மானியக் கோரிக்கை விவாதங்கள் நடந்து வருகிறது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (ஏப்ரல் 20) காவல் துறை சம்பந்தமாக விவாதம் நடைபெற்றது. அப்போது மானிய கோரிக்கை மீது பேசிய அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன், காவல் துறையினர் வேறு இடங்களுக்கு பணி இடமாற்றம் செய்து தூக்கி அடிக்கப்படுகிறார்கள் என்று குறிப்பிட்டுப் பேசினார்.
அப்போது, குறுக்கிட்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காவல் துறையினர் எல்லாம் தூக்கி அடிக்கப்படுகிறார்கள் என ஒரு குற்றச்சாட்டை உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் வைத்துள்ளார். யார் அப்படி தூக்கி அடிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று ஆதாரத்துடன் கூறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
ஆதாரத்தோடு சொல்லுங்கள் அதை வேண்டாம் என்று நாங்கள் சொல்லவில்லை. குறைகளை சொன்னால் அதனை நிவர்த்தி செய்ய வேண்டும் என்றுதான் மக்கள் தங்களை இங்கு உட்கார வைத்து இருக்கிறார்கள். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தாராளமாக குறை சொல்லுங்கள். ஆனால், ஆதாரத்துடன் சொல்லுங்கள் அதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதியளித்தார்.
அப்போது குறுக்கிட்டு பேசிய அ.தி.மு.க. கொறடா எஸ்.பி.வேலுமணி, உறுப்பினர் கேள்வி எழுப்பி இருக்கிறார். முதலமைச்சர் அதற்கு பதில் தெரிவித்து உள்ளார் அத்துடன் முடிந்துவிட்டது என கூறினார்.
இதையடுத்து, தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முடிந்து விட்டது என அ.தி.மு.க. கொறடா கூறுகிறார். ஆனால், மீண்டும் அதே கேள்வியை தான் உறுப்பினர் எழுப்புகிறார். எதை கூறுவதாக இருந்தாலும் எதிர்கட்சியினர் ஆதாரத்துடன் கூறட்டும் என தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்டு பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, தி.மு.க. ஆட்சி அமைத்த பிறகு காவல் துறை குடும்பத்தினரிடம் இருந்து மூன்று முறை மனுக்கள் பெறப்பட்டுள்ளது. அதற்கு இன்னும் தீர்வு கிடைக்கவில்லை. அவர்களின் குடும்ப சுற்றுச்சூழல் காரணமாக அவர்களின் குழந்தைகள் கல்வி கற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதை குறிப்பிட்டுதான் அ.தி.மு.க. உறுப்பினர் பேசினார் என்று எடப்பாடி பழனிசாமி விளக்கினார்.
இதற்கு பதிலளித்துப் பேசிய, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “எதிர்கட்சித் தலைவரும் முதலமைச்சராக இருந்தவர்தான். காவல் துறையை கையில் வைத்துக்கொண்டிருந்தவர் தான். அவருக்கு தெரியாதது எதுவும் இருக்காது. ஏதேனும், தவறுகள் நடைபெற்று இருந்தால் மாற்றப்படுவார்கள். ஆனால், பொள்ளாச்சி ஜெயராமன் கூறுவது போல் தூக்கி அடிப்பது அரசியல் ரீதியாக செய்வது என்பதை இந்த அரசு செய்யாது” என்று திட்டவட்டமாக கூறினார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (ஏப்ரல் 20) கேள்வி நேரம் முடிந்ததும், நேரமில்லா நேரத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, “தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துள்ளது என்று விமர்சித்துப் பேசினார். மேலும், பெண் காவலர் ஒருவருக்கு ஏற்பட்ட பாலியல் விவகாரம் உள்ளிட்ட சம்பவங்களை சுட்டிக்காட்டி கடுமையாகப் பேசத் தொடங்கினார்.
தொடர்ந்து, கடந்த ஆண்டு ஜூலை 11-ந்தேதி ராயப்பேட்டை அ.தி.மு.க. தலைமை அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். ஆதரவாளர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடைபெற்றது.
அப்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “அ.தி.மு.க.வின் தலைமை அலுவலகத்தை சிலர் திட்டமிட்டு தாக்க முயற்சித்தனர். தகுந்த பாதுகாப்பு வழங்கக் கோரி காவல் துறையில் புகார் அளித்தோம். ஆனால் காவல் துறை பாதுகாப்பு வழங்கவில்லை” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், “யார் அத்து மீறியது என்பதை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டியது காவல் துறை பொறுப்பு. யார் வெறியாட்டம் நடத்தினார்கள் என்பதை தனி மேடை போட்டு கூட பேசத் தயாராக இருக்கிறேன்” என்று பேசினார்.
இதில் பதில் அளித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், “அ.தி.மு.க. அலுவலகத்தில் நடந்த பிரச்சினை உட்கட்சி விவகாரம். அலுவலகத்திற்கு உள்ளே நடந்தவைக்கு காவல்துறை பொறுப்பல்ல. இருப்பினும், வெளியே பாதுகாப்பு அளிக்கப்பட்டது. இவ்விவகாரத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உரிய விசாரணை நடக்கிறது. கோர்ட்டிலும் வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இவ்வழக்கில் 16 பேர் கைது செய்யப்பட்டனர்” என்று தெரிவித்தார்.
அப்போது, எடப்பாடி பழனிசாமி இதே போல சூழ்நிலை தி.மு.க-வில் நடந்தபோது, அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில், காவல் துறை பாதுகாபு அளிக்கப்பட்டது என்று கூறினார்.
இதற்கு பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், உங்களைப் போல, நாங்கள் அடித்துக்கொள்ளவில்லை என்று அதிரடியாக பதில் அளித்தார்.
தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் நீங்க என்ன செஞ்சீங்க? நாங்க வந்துதான் நடவடிக்கை எடுத்துட்டு இருக்கிறோம் என்று ஆவேசமாக பதில் கூறினார்.
இதையடுத்து, அ.தி.மு.க உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“