scorecardresearch

சட்டசபை ஹைலைட்ஸ்: ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா; துரைமுருகன் – நயினார் நாகேந்திரன் வாக்குவாதம்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா மீண்டும் நிறைவேற்றப்பட்டது, அவை முன்னவர் அமைச்சர் துரைமுருகன் மற்றும் பா.ஜ.க சட்டமன்றக் கட்சித் தலைவர் இடையே நடந்த காரசார விவாதம் ஆகியவை இன்றைய சட்டப் பேரவை நிகழ்வுகளில் இடம் பிடித்துள்ளன.

TN Assembly highlights, DMK, MK Stalin, சட்டசபை ஹைலைட்ஸ், ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா, துரைமுருகன் - நயினார் நாகேந்திரன் வாக்குவாதம், TN Assembly, Online rummy ban bill, Duraimurugan and Nainar Nagenthiran speech
சட்டசபை ஹைலைட்ஸ்: மு.க. ஸ்டாலின், நயினார் நாகேந்திரன், துரைமுருகன்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா மீண்டும் நிறைவேற்றப்பட்டது, அவை முன்னவர் அமைச்சர் துரைமுருகன் மற்றும் பா.ஜ.க சட்டமன்றக் கட்சித் தலைவர் இடையே நடந்த காரசார விவாதம் ஆகியவை இன்றைய சட்டப் பேரவை நிகழ்வுகளில் இடம் பிடித்துள்ளன.

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஒரு நாள் விடுமுறைக்குப் பிறகு, இன்றைய அலுவல்கள் சபாநாயகர் அப்பாவு தலைமையில் தொடங்கியது. முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ப. தங்கவேலு, த.மாரிமுத்து, உபயதுல்லா, கு.சீனிவாசன், பின்னணி பாடகி வாணி ஜெயராம் மறைவுக்கு பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி ஆணவக் கொலை: இ.பி.எஸ் கவன ஈர்ப்பு தீர்மானம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், காதல் திருமணம் செய்த ஜெகன் என்ற இளைஞரை பெண் வீட்டார் ஆணவக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக சட்டப் பேரவையில், எதிர்க்கட்சித் தலைவர் இ.பி.எஸ் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இ.பி.எஸ் கொண்டு வந்த தீர்மானத்துக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை பதிலளிப்பார் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

ஜெகனின் கொலை தொடர்பாக பேசிய முதல்வர், “கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். கைதாகியோரில் அதிமுக அவதானப்பட்டி நிர்வாகியும் இருக்கிறார். திமுக ஆட்சி புரியும் மண் சமூகநீதி காத்த மண். சமூக நல்லிணக்கத்தை பேணிக்காக்க ஒவ்வொரு உறுப்பினரையும் நான் கேட்டுக்கொள்கிறேன்.

மனிதநேயத்தையும், சமூக நல்லிணக்கத்தையும் காக்க நாம் அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒன்றிணைய வேண்டும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காவேரிப்பட்டினம், திட்டம்பட்டி ஜெகன் (வயது 28), மார்ச் 21-ம் தேதி 01.30 மணியளவில் கே.ஆர்.டி அணை சாலையில் சென்றபோது, சங்கர் என்ற அதிமுக கிளை செயலாளர் உட்பட 3 பேரால் தாக்கப்பட்டதில் ஜெகன் உயிரிழந்தார்

இதுகுறித்து காவேரிப்பட்டினம் காவல் துறையினர் விசாரணை நடத்தியதில், கல்லூரியில் படித்து வந்த மாணவி சங்கரின் மகள் சரண்யாவை, டைல்ஸ் பாதிக்கும் தொழிலாளி ஜெகன் காதல் திருமணம் செய்துகொண்டுள்ளார். இந்த காதல் திருமணத்தில் விருப்பம் இல்லாத சங்கர் உட்பட அவரின் ஆதரவாளர்கள் கொலையை நடத்தியுள்ளனர். இவர்கள் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்” என பேசினார்.

காஞ்சிபுரம் பட்டாசு ஆலை வெடி விபத்து; செல்வப்பெருந்தகை கவன ஈர்ப்பு தீர்மானம்

காஞ்சிபுரம் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 9 பேர் உயிரிழந்தது குறித்து காங்கிரஸ் கட்சி சார்பில், ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. செல்வப்பெருந்தகை சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார். உத்திரமேரூர் தொகுதி எம்.எல்.ஏ. சுந்தரும் பட்டாசு ஆலை விபத்து தொடர்பாக கோரிக்கை வைத்தார்.

நிதி பற்றாக்குறையை 2 ஆண்டுகளில் குறைத்துள்ளதாக நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பதில்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தின் போது பதிலளித்த மாநில நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், “கடன் பெறுவது ஒன்றும் பக்கெட்டில் தண்ணீர் ஊற்றுவது போல் இல்லை, மொத்த கடன் எவ்வளவு, எவ்வளவ் திருப்பி செலுத்துகிறோம் என்பதை பொறுத்து தான் கடன் மாறுபடும் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து, இரண்டு ஆண்டுகளில் வருவாய் பற்றாக்குறையை 30 ஆயிரம் கோடியாக குறைத்துள்ளதாகவும், நீங்கள் 10 ஆண்டுகளில் வருவாய்ப் பற்றாக்குறையை ஏன் குறைக்க முடியவில்லை என்றும் அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கேள்வி எழுப்பினார்.

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை மீண்டும் கொண்டுவந்த மு.க. ஸ்டாலின்

இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு சட்டப் பேரவையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவைக் கொண்டு வந்து பேசினார்.

அப்போது பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டால்ன், “ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை 131 நாட்கள் கழித்து திருப்பி அனுப்பியுள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி. மாநிலத்தின் ஆளுகை எல்லைக்குள் உள்ள மக்களை காக்க மாநில அரசுக்கு உரிமை உண்டு, மீண்டும் சொல்கிறேன் மாநில அரசுக்கு உரிமை உண்டு. இதில் பணத்தை இழந்து, இதுவரை 41 பேர் உயிரை மாய்த்துள்ளனர். மிகவும் கனத்த இதயத்துடன் இங்கு நிற்கிறேன். இந்த சட்டம் அறிவால் மட்டுமல்ல இதயத்தால் உருவாக்கப்பட்டது என முதலமைச்சர் பேசினார்.

தமிழக வாழ்வுரிமை கட்சி எம்.எல்.ஏ வேல்முருகன், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி எம்.எல்.ஏ ஈஸ்வரன், மனிதநேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ நாகை மாலி, விசிக கட்சி எம்.எல்.ஏ ஆளூர் ஷாநவாஸ் ஆகியோர் இந்த தீர்மானத்தை வரவேற்று பேசினார்கள்.

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா: துரைமுருகன் – நயினார் நாகேந்திரன் வாக்குவாதம்

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா குறித்து பா.ஜ.க சார்பில் அக்கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேசினார்.

மசோதா குறித்து பேசிய நயினார் நாகேந்திரன், கணத்த இதயத்தோடு தீர்மானத்தை அறிமுகப்படுத்தி திரும்பவும் கவர்னருக்கு அனுப்ப வேண்டும் என்பதால் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. முதலில் பேசும்போது கவர்னர் பற்றி எதுவும் பேசக்கூடாது என்று சொன்னீர்கள் என்று கூறினார்.

அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு: மசோதா பற்றிதான் பேசுகிறார்களே தவிர, தனிப்பட்ட முறையில் யாரும் விமர்சனம் செய்யவில்லை, பண்ணியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்கி உள்ளோம் என்று கூறினார்.

இடையில் குறுக்கிட்டு பேசிய அவை முன்னவர் துரைமுருகன், உங்கள் பெருந்தன்மை, முதல்வர் பெருந்தன்மையில் கவர்னரை பற்றி பேசக்கூடாது என்பதை இந்த மசோதாவில் சொல்லி உள்ளீர்கள். ஆனால், அரசியல் சட்டப்படி சட்டமன்றம் நிறைவேற்றியதை காத்திருக்க வைத்திருக்க கூடாது என்பதை ஆயிரம் தீர்ப்புகளில் சொல்லி உள்ளார்கள்.

அவர் செய்தது மகா பெரிய தப்பு என்பதை சொல்லி விமர்சித்து பேசுவதற்கு அரசுக்கு எல்லா உரிமையும் உள்ளது. ஆனாலும், நீங்கள் சொல்கிறீர்கள் என்பதால் அதை அடக்கி நெஞ்சோடு நிறுத்தி வாயோடு பேசுகிறோம் அதோடு விடுங்கள்.” என்று கூரினார்.

தொடர்ந்து பேசிய நயினார் நாகேந்திரன், “நிச்சயமாக ஆன்லைன் சூதாட்டத்தை ஒழித்தே ஆக வேண்டும் அதில் எந்த மாற்றமும் கிடையாது. ஆன்லைன் சூதாட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் பேசியதைத்தான் முதலமைச்சர் சுட்டிக்காட்டி உள்ளார்.

இன்னொரு வல்லுநர் குழு அமைத்து இதை எப்படி செய்தால் ஆளுநர் அனுமதிப்பார் என்பதை கருத்தில் கொண்டு மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்ற வேண்டும் அதற்கு முழு ஒத்துழைப்பு தருவோம் என்று நயினார் நாகேந்திரன் கூறினார்.

அப்போது அவை முன்னவர், துரைமுருகன் பேசுகையில், “சார் அவரு கருத்து அந்த கட்சியில் இருந்து அவ்வுளவுதான் சொல்ல முடியும் அதில் குறுக்கே பாயக்கூடாது” என்று கூறினார்.

இவ்வாறு ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா தொடர்பாக அவை முன்னவரும் அமைச்சருமான துரைமுருகன் மற்றும் பா.ஜ.க எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் இடையே வாக்குவாதம் நடைபெற்றது.

சட்டப்பேரவையில் எகிறிய இ.பி.எஸ் – ஓ.பி.எஸ் தரப்பு

முதல்வர் கொண்டு வந்த இந்த ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக முழுமையாக நாங்கள் வரவேற்று அமர்கின்றோம் என்று ஓ. பன்னீர்செல்வம் பேசினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த முன்னாள் முதல்வரும் அ.தி.மு.க இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ஒரு கட்சிக்கு ஒருவர் மட்டும் என்ற அடிப்படையில் நீங்கள் பேச அழைத்தீர்கள். அ.தி.மு.க எங்கள் அணிதான் நான் தான் எதிர்கட்சி தலைவராக இருக்கின்றேன். எங்களின் சார்பான தளவாய் சுந்தரம் பேசினார்.

அதன்பிறகு, மறுபடியும் இப்படி பேச விட்டால் என்ன இது, எந்த விடத்தில் இருக்கிறது. பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்கள் எங்களிடம் தான் இருக்கிறார்கள். என்று எடப்பாடி பழனிசாமி பேச மற்ற அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று கூச்சலிட்டனர். இதற்கு பதில் அளித்த சபாநாயகர் அப்பாவு அவர்களை அமர சொல்லுங்கள் உங்களது சந்தேகங்களுக்கு நான் பதில் அளிக்கிறேன் என்று கூறினார்.

இதைத் தொடர்ந்து பேசிய சபாநாயகர், முன்னாள் முதல்வர் என்ற முறையில் அவர் பேசுவதற்கு அனுமதி கேட்டார் அதனால் கொடுக்கப்பட்டது. நீங்கள் பேசக்கூடாது என்று சொல்ல முடியாது. ஆனால் இதை ஒப்புக்கொள்ளாத ஈபிஎஸ் தரப்பு சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை பொறுத்துதான் அனைத்தும் நடக்கிறது என்று சொல்லி மீண்டும் கூச்சலிட தொடங்கினர்.

தொடர்ந்து பேசிய சபாநாயகர் அப்பாவு, நீங்கள் பிரதான எதிர்க்கட்சி தலைவர் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. அவர் தனது கருத்தை பதிவு செய்திருக்கிறார். நீங்கள் உங்களது கருத்தை பதிவு செய்திருக்கிறீர்கள். இது முக்கியமான ஒரு மசோதா. இவ்வாறு அவர் பேசிக்கொண்டிருக்கும்போது மீண்டும் இ.பி.எஸ் – ஒ.பி.எஸ் தரப்பினர் கூச்சலிட்டனர். இதனால் சட்டமன்றத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது, அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி மற்றும் ஒ.பி.எஸ் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன் ஆகிய இருவரும் ஆக்ரோஷமாகப் பேசினார்கள். இருவரும் இருக்ககையை விட்டு எழுந்து நின்று சத்தம்போட்ட நிலையில், தனது ஆதரவாளர் மனோஜ் பாண்டியன் கையை பிடித்து இழுத்து ஒ.பி.எஸ் தடுத்தார்.

ஓ.பி.எஸ்.ஐ பேச அனுமதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

இதைத் தொடர்ந்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொண்டுவந்த ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா தமிழ்நாடு சட்டப் பேரவையில் மீண்டும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tn assembly highlights online rummy ban bill duraimurugan and nainar nagenthiran speech

Best of Express