scorecardresearch

சட்டசபை ஹைலைட்ஸ்: சேது சமுத்திர திட்டம் … அமைச்சர் உதயநிதி முதல் பேச்சு

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 3வது நாள் கூட்டத்தில் இன்று சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது, அமைச்சரான பிறகு உதயநிதியின் முதல் பேச்சு என இன்றைய சட்டப்பேரவை நிகழ்வுகளில் இடம்பெற்றது.

சட்டசபை ஹைலைட்ஸ்: சேது சமுத்திர திட்டம் … அமைச்சர் உதயநிதி முதல் பேச்சு

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 3வது நாள் கூட்டத்தில் இன்று சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது, அமைச்சரான பிறகு உதயநிதியின் முதல் பேச்சு என இன்றைய சட்டப்பேரவை நிகழ்வுகளில் இடம்பெற்றது.

சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற தீர்மானம்

சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி சட்டப்பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கொண்டு வந்த தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானத்துக்கு எதிர்க்கட்சிகளான அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க ஆதரவு தெரிவித்தது.

சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (ஜனவரி 12) தனித் தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது நடந்த விவாதத்தில் பங்கேற்று பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் நாகை மாலி, “தமிழ்நாட்டு மக்களின் நீண்ட கால கனவாக இருந்த சேது சமுத்திர திட்டத்தை ஒன்றிய அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். தமிழ்நாட்டு மக்கள் தொடர்ச்சியாக பல எண்ணற்ற போராட்டங்களை நடத்தி வந்துள்ளோம்” என்று கூறினார்.

இந்த தீர்மானம் குறித்து மனித நேய மக்கள் கட்சி உறுப்பினர் ஜவாஹிருல்லா பேசுகையில், “தமிழருக்கு மிகப்பெரிய அளவில் உதவக்கூடிய சேது சமுத்திர கால்வாய் திட்டத்திற்கு ஒன்றிய அரசு முட்டுக்கட்டை போடக்கூடாது. அதை செயல்படுத்த தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் முயற்சியை மனதார வரவேற்கின்றேன்” என்று கூறினார்.

சேது சமுத்திரத் திட்டம் குறித்தான தீரமானம் குறித்து பேசிய பா.ஜ.க எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன், “இந்த அரசின் தனித் தீர்மானத்தின் மீது ஆதரவா இல்லையா என்று மட்டுமே பேச வேண்டும். உறுப்பினர்கள் ராமாயணத்தை பற்றி எல்லாம் பேசி வருகிறார்கள். உறுப்பினர்கள் விமர்சித்து பேசியதை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்” என்றார்.

அப்போது, குறுக்கிட்டுப் பேசிய முதல்வர் ஸ்டாலின், “மதத்தையோ தெய்வத்தையோ விமர்சித்து யாரும் பேசவில்லை” என்று கூறினார். பின்னர், தொடர்ந்து பேசிய நயினார் நாகேந்திரன், “சேது திட்டம் வருமேயானால் எங்களைவிட மகிழ்ச்சியடைபவர்கள் யாரும் இல்லை. மண் எடுக்க எடுக்க சரிந்து கொண்டே இருக்கும். ராமர் பாலம் சேதப்படுத்தாமல் திட்டத்தை நிறைவேற்றினால் ஆதரிக்கிறோம். சேது சமுத்திர திட்டம் நிறைவேற்ற சட்டசபையில் பாஜக ஆதரவு தரும்” என்று கூறினார்.

இதையடுத்து, அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், “2000 ஆண்டுகளுக்கு முன்பே கடல் வாணிபத்தில் சிறந்து விளங்கியவர்கள் தமிழர்கள். சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி முதல்வர் கொண்டு வந்த தனித் தீர்மானத்திற்கு தி.மு.க ஆதரவு அளிக்கிறது” என்று கூறினார்.

மேலும், அ.தி.மு.க, காங்கிரஸ், பா.ம.க உள்ளிட்ட கட்சிகள் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற கொண்டு வரப்பட்ட தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.

சேது சமுத்திரத் திட்டம் விரைவில் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி தான் கொண்டு வந்த தீர்மானம் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், “சேது சமுத்திர திட்டம் செயல்படுத்தப்பட்டால் கப்பல்களின் பயண நேரம் பெரும் அளவில் குறையும். தமிழ்நாடு, அண்டை மாநில துறைமுகங்களின் சரக்குகளை கையாளும் திறன் அதிகரிக்கும். சிறு, சிறு துறைமுகங்களை உருவாக்க முடியும். கடல்சார் பொருள் வர்த்தகம் விரிவடையும்” என்று கூறினார். இதையடுத்து, இந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாட்டில் 28.88 கால்நடைகளுக்கு தடுப்பூசி

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தமிழகத்தில் 28.88 லட்சம் கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என பதிலளித்தார். தமிழ்நாடு அரசு வழங்கும் கால்நடை மருந்துகளுக்கு தட்டுப்பாடுகள் இல்லை. ஒன்றிய அரசிடம் இருந்து வர வேண்டிய கால்நடை மருந்துகளுக்கு தான் தட்டுப்பாடு உள்ளது எனவும் விளக்கம் அளித்தார்.

இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி, “தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டை வழக்கம் போல காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடத்த வேண்டும். ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்யும் முறையை மாற்ற வேண்டும் என்று கூறினார்.

போதைப்பொருள் தடுப்பில் புதிய வரலாறு படைத்துள்ளது இந்த ஆட்சி – மு.க. ஸ்டாலின்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பல்வேறு சட்டமன்ற உறுப்பினர்கள் பேசினர். அப்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, “கடந்த நவம்பர் மாதம் சர்வதேச மதிப்பில் விலை உயர்ந்த போதைப் பொருள் பிடிபட்டதாக கடலோர காவல் படை அதிகாரி தெரிவித்துள்ளார். அவை சோதனைக்கு அனுப்பப்பட்டு இருக்கின்றது. அதனுடைய உண்மை நிலை என்ன? முதலமைச்சர் அறிவிக்க வேண்டும்” என்றார்.

இதற்கு பதிலளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், “போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையை பொறுத்தவரை இந்த ஆட்சி ஒரு புதிய வரலாற்றை படைத்திருக்கிறது. தமிழ்நாட்டில் ஆபரேஷன் கஞ்சா வேட்டை நடத்தப்பட்டது. 2022 முதல் போதை பொருள் தடுப்பு நடவடிக்கைக்காக தமிழ்நாட்டில் மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கூட்டத்தை நடத்தி இருக்கிறார்கள். தமிழ்நட்டில் 12,294 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 250 எதிரிகள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

இந்த ஆண்டு ஜனவரி 3-ம் தேதி நானே உயர் அதிகாரிகளுடன் மாவட்ட எஸ்.பி-களோடு ஆய்வு நடத்தி கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டேன். தி.மு.க ஆட்சியில் தீவிரமாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்வதோடு வழக்குகளை திறம்பட நடத்தி தண்டனை பெற்றுத் தருவது நடந்திருக்கிறது. இதுவரை தமிழ்நாட்டில் மாவட்ட ஆட்சியர்களோடு முதலமைச்சர் ஆலோசனை நடத்தி ஆய்வு செய்யவில்லை. அது இப்போதுதான் நடக்கிறது.

இந்த ஆட்சியில் நடத்தப்பட்டது போல கஞ்சா குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பத்தாண்டு கால உங்களுடைய ஆட்சியில் நடத்தப்படவே கிடையாது. அ.தி.மு.க ஆட்சியில் நோய் போல வளர்ந்து வந்தது. இப்போது சட்டமன்ற உறுப்பினராக இருக்கக்கூடியவர் அப்போது அமைச்சராக இருந்தவர், டி.ஜி.பி-யை விசாரிக்க நீதிமன்றமே கூறியுள்ளது. அ.தி.மு.க ஆட்சியில் போதை பொருட்களை தடுக்காததால் இப்பொழுது நாங்கள் இவ்வளவு நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அவசியத்திற்கு ஆளாகி இருக்கிறோம்” என்று கூறினார்.

தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு 84 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளது – செந்தில்பாலாஜி

திமுக ஆட்சி பொறுப்பேற்றதற்கு பின்பாக பள்ளிகள், கோயில்களுக்கு அருகில் இருந்த 84 மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளன என சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலளித்துள்ளார். கோயில், பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் டாஸ்மாக் கடைகள் இருந்தால் மாற்றி தரப்படும். புகார் தெரிவித்த 2 நாட்களுக்குள் டாஸ்மாக் கடைகள் மாற்றி தரப்படும் எனவும் கூறினார்.

அமைச்சரான பின் உதயநிதியின் முதல் பேச்சு

சட்டப்பேரவை கூடியவுடன் திருப்பூரில் விளையாட்டு மைதானம் அமைப்பது குறித்து சட்டப்பேரவை உறுப்பினர் செல்வராஜின் கேள்விக்கு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலளித்தார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முதல்முறையாக சட்டப்பேரவையில் பதிலளிக்க எழுந்தபோது, தி.மு.க உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் கைதட்டி உற்சாகப்படுத்தினர்.

இதையடுத்து, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லூரியில் 8 ஏக்கர் பரப்பளவில் ரூ. 18 கோடி மதிப்பில் புதிய மாவட்ட விளையாட்டு வளாகம் அமைக்கப்பட்டு வருகின்றது. இதில், பார்வையாளர்கள் அமரும் வகையிலான திறந்தவெளி விளையாட்டு அரங்கம், உடற்பயிற்சி கூடம், 400 மீட்டர் தடகள ஓடு பாதை, கால்பந்து மைதானம், டென்னீஸ், கையுந்துப் பந்து, கூடைப்பந்து ஆகிய விளையாட்டுகளுக்கான ஆடுகள் வசதிகள் உருவாக்கப்படும். அதேபோல், திறந்தவெளி மைதானத்திற்கான கட்டுமானப் பணிகள் பொதுப்பணித்துறையால் நவம்பர் 2021 முதல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

தற்போது 60 விழுக்காடு பணிகள் முடிவடைந்துள்ளது. ஏப்ரல் 2023-க்குள் மற்றும் கைப்பந்து ஆடுகளப் பணிகள் முடிப்பதற்கான நடவடிக்கைகள் பார்வையாளர்கள் அமரக்கூடிய கேலரி, 400 மீ தடகள் பாதை, கால்பந்து மைதானம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்று கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tn assembly highlights setu samudhram project mk stalin minister udhayanidhi first speech

Best of Express