கள்ளக்குறிச்சியில் விஷச் சாராய குடித்து தற்போதுவரை 52 பேர் உயிரிழந்தனர். இந்த வகாரம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது. இவ்வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
அ.தி.மு.கவினர் உள்பட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்தனர். நேற்று தமிழக சட்டமன்ற கூட்டத் தொடர் தொடங்கிய நிலையில் அ.தி.மு.கவினர் இவ்விவகாரத்தை எழுப்பி கேள்வி எழுப்பினர். இந்த விவகாரம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டு நேற்று விவாதம் நடத்தப்பட்டது. இவ்விவகாரத்தை கண்டித்து அ.தி.மு.கவினர் கருப்பு சட்டை அணிந்து சட்டமன்றத்திற்கு வந்தனர்.
இந்நிலையில் இன்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் கருப்பு சட்டை அணிந்து சட்டமன்றத்திற்கு வந்தனர். இன்று காலை 9.30 மணிக்கு பேரவை தொடங்கிய நிலையில் கருப்பு சட்டை அணிந்து வந்தனர். தொடர்ந்து பேரவை நிகழ்வுகள் தொடங்கியது.
கள்ளக்குறிச்சி விவகாரத்தை விவாதிக்கக் கோரி கேள்வி நேரத்தில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட நிலையில், சபாநாயகர் அனுமதி அளிக்காததால் பேரவையில் இருந்து அ.தி.மு.கவினர் வெளிநடப்பு செய்தனர். நேற்று, இவ்விவகாரம் தொடர்பாக அமளி ஏற்பட்ட நிலையில் அதிமுக உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“