திருச்சியில் கலைஞர் பெயரில் நூலகம் அமைக்கப்படும். கோவையில் கலைஞர் நூலகம் கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை அறிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு உரையாற்றினார். அப்போது அவர், ’தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் வளர்ந்து வருகிறது.
கடந்த 2022 ஆம் ஆண்டில் ஆண்டிற்கான ஏற்றுமதி குறியீட்டில் இந்தியாவிலேயே தமிழ்நாடு நம்பர் 1 மாநிலமாக முன்னேறியுள்ளது. மோட்டார் வாகனங்கள் மற்றும் மின்னணு உதிரி பாகங்கள் உற்பத்தியில் முன்னணி மாநிலமாக இருக்கிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும். ஆண்டுக்கு சுமார் 3 கோடி பயணிகள் வந்து செல்லும் வகையில் இந்த விமான நிலையம் அமைக்கப்படவுள்ளது.
மேலும் தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் வசிப்பவர்களும் நூலகங்கள் மூலம் பயன்பெற வேண்டும் என்ற நோக்கில், சங்கம் வைத்து மாத்தமிழ் வளர்த்த மதுரையில் 15-7-2023 அன்று கலைஞர் நூற்றாண்டு நூலகம் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, கோயம்புத்தூர் மக்களுக்கும், இளைய தலைமுறைக்கும் பயன்படும் விதமாக ஒரு மாபெரும் நூலகம் மற்றும் அறிவியல் மையம், முத்தமிழறிஞர் கலைஞர் பெயரில் அமைக்கப்படும் என்று இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவித்தோம். அதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.
அந்த வரிசையில் திருச்சி மாநகரில், உலகத்தரம் வாய்ந்த மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கலைஞர் பெயரால் அமைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். பல்வேறு வசதிகளை உள்ளடக்கி, தமிழ்நாட்டின் நெற்களஞ்சியப் பகுதியில் ஓர் அறிவுக் களஞ்சியமாக அது அமைந்திடும், என மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“