தமிழ்நாடு சட்டப்பேரவை 2023-24-ம் ஆண்டுகான பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் 20-ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்றுடன் (ஏப்ரல் 21) நிறைவு பெறுகிறது.
கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்றுவந்த உடல்நிலை குணமான நிலையில், ஈரோடு கிழக்குத் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் சட்டப்பேரவைக்கு வருகை தந்தார்.
சட்டப்பேரவையில் இன்று காவல்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது.
காவல் துறை மானியக் கோரிக்கையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “அமைச்சர் உதயநிதி, தனது துறையின் சார்பில் நடைபெற்ற மானியக் கோரிக்கை விவாதத்திற்கு பதிலளித்துப் பேசியபோது தலைவர் கருணாநிதி பேசிய ஒன்றைச் சுட்டிக் காட்டினார். பேரறிஞர் அண்ணாவின் அமைச்சரவையில் இருந்த அமைச்சர்களின் ஒவ்வொரு துறையையும் குறிப்பிட்ட தலைவர் கருணாநிதி, நாம் வகிக்கக் கூடிய துறைகள் வேறுபட்டிருந்தாலும் நாம் அனைவரும் ‘அண்ணாத்துரை’-யைச் சேர்ந்தவர்கள் என்று தலைவர் கருணாநிதி குறிப்பிட்டதாகச் இங்கே எடுத்துச் சொன்னார். உண்மைதான். எனக்கு தலைவர் கருணாநிதி முதலில் வைக்க நினைத்த பெயர் என்னவென்றால், அய்யாத்துரை! எனவே, அமைச்சர்கள் அனைவரும் தனித்தனி துறையை வகித்தாலும் நீங்கள் அனைவரும் இந்த அய்யாத்துரையின் ரத்த நாளங்கள்தான்” என்று பேசினார்.
சட்டப்பேரவையில், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள், காவல்துறை மானிய கோரிக்கை விவாதத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிலுரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.
சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “தமிழகத்தில் சாதி, மத சண்டைகள் இல்லை. காவல் நிலைய மரணங்கள் இல்லை. எவ்வித குறுக்கீடும் இன்றி காவல்துறையை செயல்பட அனுமதித்துள்ளோம்.” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய மு.க. ஸ்டாலின், “திமுகதான் நிரந்தரமாக ஆள வேண்டும் என்று மக்கள் முடிவெடுக்கும் வகையில், 2 ஆண்டு காலமாக ஆட்சியை நடத்தி வருகிறோம். ஆட்சிக்கு வந்தபோது கடும் நிதி நெருக்கடி இருந்த நிலையிலும், பல மக்கள் நலத்திட்டங்களை கொண்டு வந்து மகத்தான சாதனை புரிந்துள்ளோம். நாங்கள் தேர்தலில் மட்டும் வெல்லவில்லை, மக்களின் மனங்களையும் வென்று அவர்களின் மனங்களில் குடியிருக்கின்றோம். ஸ்டாலின் அரசாகவோ, திமுக அரசாகவோ இல்லாமல், ஒரு இனத்தின் அரசாக, கொள்கையின் அரசாக இருக்கிறது.
தமிழ்நாட்டில் சாதி, மதச்சண்டைகள் இல்லை, கூட்டு வன்முறை இல்லை, கலவரங்கள் இல்லை, துப்பாக்கிசூடு இல்லை; இதன் அடையாளமாகத்தான் தொழிற்சாலைகள், தொழில் முதலீடுகள் இங்கே வருகின்றன.
பிற மாநிலங்களில் நடந்த சம்பவங்களை தமிழ்நாட்டில் நடந்தது போல சித்தரித்து புலம் பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்திகள் பரபப்பட்டன; உடனடியாக ஆலோசனை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு அறிவுறுத்தினேன். பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரை தொடர்புகொண்டு புலம் பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து உறுதி அளித்தேன்.
தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பிய விவகாரத்தில், 88 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பா.ஜ.க செய்தித்தொடர்பாளர் பிரசாந்த் உம்ராவ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பீகார் யூடியூபர் மணிஷ் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்” என்று தெரிவித்தார்.
மேலும், “தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டது யார்? அதை மட்டும் எதிர்க்கட்சி தலைவர் ஏன் சொல்லவே மறுக்கிறார்? முதலமைச்சராக இருந்த போதும் சொல்லவில்லை, இப்போதும் சொல்லவில்லை.
கடந்த ஆட்சியுடன் ஒப்பிடும் போது இந்த ஆட்சியில் காவல் நிலைய மரணங்கள் வெகுவாக குறைந்துள்ளது; காவல் நிலைய மரணங்களே இல்லை என்ற நிலையை அடைய நடவடிக்கை எடுக்கப்படும்.
கோவை உக்கடத்தில் கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டனர்.
இவ்வழக்கில் மாநிலம் தாண்டிய பரிமாணங்கள் இருந்ததால், என்.ஐ.ஏ. விசாரணைக்கு மாநில அரசு பரிந்துரை செய்தது.
நிதி நிறுவனங்களில் முதலீடு செய்யும் போது பொதுமக்கள் எச்சரிக்கையுடனும், கவனத்துடனும் இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன.” என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார்.
அப்போது, அ.தி.மு.க-வினர் சட்டப்பேரவையில் நேரலை செய்வது தொடர்பாக அமளியில் ஈடுபட்டனர். நேரலை தொடர்பாக சபாநாயகர் அப்பாவு விளக்கம் அளித்தார்.
தொடர்ந்து பேசிய மு.க. ஸ்டாலின், “பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் பொதுமக்கள், அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தியபிறகே அதிமுக அரசு வழக்குப்பதிவு செய்தது. குற்றப்பிரிவு விசாரணை முறைப்படி நடக்காததால் மீண்டும் போராடி அவ்வழக்கை சிபிஐக்கு கொண்டு சென்றோம். இவ்வழக்கில் கைதானவர்களில் அ.தி.மு.க இளைஞரணி நிர்வாகியும் ஒருவர்; திமுக ஆட்சிக்கு வந்ததும் சி.பி.ஐ.க்கு உதவ பெண் எஸ்.பி.யை அரசு நியமித்தது.
ஜெயலலிதா அம்மையாரின் கோடநாடு பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை சம்பவங்களை அவரின் கட்சியின் முதலமைச்சராக இருந்தவரே மறைக்க முற்படுகிறார்.
அப்படி நடக்கும் போது திமுக எப்படி சும்மா இருக்க முடியும்?; உறுதியாக சொல்கிறேன் சி.பி.சி.ஐ.டி விசாரணையில் உண்மை வெளிவரும்.” என்று கூறினார்.
மேலும், “தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டது யார்? அதை மட்டும் எதிர்க்கட்சி தலைவர் ஏன் சொல்லவே மறுக்கிறார். முதலமைச்சராக இருந்தபோதும் சொல்லவில்லை. இப்போதும் சொல்லவில்லை” என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை நோக்கி கேள்வி எழுப்பினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “10 ஆண்டு காலமாக வேரூன்றி இருந்த போதைப்பொருள் சாம்ராஜ்யம், அரசு எடுத்த நடவடிக்கைகளால் சரிந்துள்ளது. அ.தி.மு.க விட்டுச் சென்ற் படு பாதகங்களில் ஒன்று போதைப் பொருட்கள், அதனால்தான், தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் ‘ஆபரேஷன் கஞ்சா வேட்டை’யில் போதை பொருட்களைக் கண்டுபிடித்தோம்.” என்று கூறினார்.
க்ரிப்டோ கரன்சி மோசடிகளைக் கண்டுபிடிக்க செயின் பகுப்பாய்வு ரியாக்டர் கருவி வாங்கப்படும். க்ரிப்டோ கரன்சியின் மூலத்தையும், சேரும் இடத்தையும் கண்டுபிடிக்க இக்கருவி பயன்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.
குற்றவாளிகளை கைது செய்யும்போது பலத்தைப் பிரயோகிக்காமல் பாதுகாப்பாகவும் சட்ட ரீதியாகவும் அவர்களைக் கட்டுப்படுத்த 25 ரிமோட் மூலம் விலங்கிடும் Remote Restraint Wrap கருவி வாங்கப்படும் என்று கூறினார்.
மேலும், தாம்பரம் காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் மற்றும் மேடவாக்கம் பகுதியில் புதிய காவல் நிலையங்கள் அமைக்கப்படும். விழுப்புரம் மேல்மலையனூர், கரூர் நங்கவரம், வேலூர் பிரம்மபுரம் மற்றும் பெரம்பலூர் தாலுகா ஆகிய 5 இடங்களில் புதிய காவல் நிலையங்கள் அமைக்கப்படும். சென்னை பெருநகர காவல் பகுதியில் வானகரம், ஆவடி காவல் ஆணையரக பகுதியான புதூர் ஆகிய இடங்களில் புதிய காவல் நிலையங்கள் அமைக்கப்படும்.
தீவிரவாத நடவடிக்கைகளை திறமையாக எதிர்கொள்ள காவல்துறை நுண்ணறிவுப் பிரிவில் புதிதாக தீவிரவாத தடுப்புப்பிரிவு (Anti Terrorism Squad) ஒன்று 383 பணியாளர்களைக் கொண்டு சுமார் 5751.61 லட்சம் செலவில் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.
சென்னை மாநகரில் பொதுமக்கள் பாதுகாப்பிற்காக மேலும், 2000 சிசிடிவி கேமராக்கள் நிறுவப்படும்.
ஒருங்கிணைந்த வாகன சொதனை மையங்களில் மடிக்கக்கூடிய பேரிகாட், ANPR கேமராக்கள் வாங்கப்படும்.
போக்குவரத்து விதிமீறல் செய்யும் வாகன எண்களை கண்டறிய 300 நவீன கேமராக்கள் வாங்கப்படும்.
சென்னையில் 10 ஆண்டுகளைக் கடந்த 57 போக்குவரத்து சிக்னல்களை மாற்றம் செய்து புதிய சிக்னல்கள் நிறுவப்படும். சென்னை போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த 3 துறை சார் வல்லுநர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார்.
சென்னை காவல்துறையில், செயற்கை நுண்ணறிவு எனும் AI-ஐ அடிப்படையாகக் கொண்டு ChatBot, VoiceBOt, Video Chat மூலம் பொதுமக்களுக்கு தேவையான தகவல்கள் வழங்க கணினி இயந்திரங்கள் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வைக்கப்படும் என்று கூறினார்.
சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி, காரிப்பட்டி காவல் நிலையங்கள், சேலம் மாநகர காவல் ஆணையரகத்துடன் இணைக்கப்படும்.
கோவை மாவட்டம் துடியலூர், கவுண்டம்பாளையம், வடவள்ளி காவல் நிலையங்கள் கோவை மாநகர காவல் ஆணையரகத்துடன் இணைக்கப்படும்.
திருப்பூர் மாவட்டம் மங்கலம் காவல் நிலையம் திருப்பூர் மாநகர காவல் ஆணையரகத்துடன் இணைக்கப்படும்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, திருப்பாலைவனம் காவல் நிலையங்கள் ஆவடி மாநகர காவல் ஆணையரகத்துடன் இணைக்கப்படும்.
சேலம் மாவட்டம் அணைக்கட்டு, கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி ஆகிய மூன்று புதிய காவல் உட்கோட்டங்கள் உருவாக்கப்படும் என்று காவல்துறை மானியக்கோரிக்கையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
தென்காசி மாவட்டம் புளியரை, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி, தஞ்சை மாவட்டம் நாச்சியார்கோவில், சோழபுரம், தாம்பரம் மாநகரம் பெரும்பாக்கம், ஓட்டேரி ஆகிய காவல் நிலையங்களுக்கு புதிய கட்டடங்கள் கட்டப்படும். சென்னை மாநகர காவலர்களுக்கு வழங்குவது போலவே, தாம்பரம் மற்றும் ஆவடி மாநகர காவலர்களுக்கும் மாதம் 26 நாட்கள், நாளொன்றுக்கு ரூ.300 உணவுப்படியாக வழங்கப்படும். காவல்துறையில் மற்ற பிரிவுகளில் உள்ள காவல் பணியாளர்களைப் போலவே, சிறப்பு காவல் அணிகளில் உள்ள காவலர்களுக்கும் வார விடுமுறை அளிக்கப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து, சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் தா.மோ. அன்பரசன், “தீப்பெட்டி தொழிலை பெரிதும் பாதித்துள்ள சீன பிளாஸ்டிக் லைட்டரை தடை செய்வதற்கு அரசு தக்க நடவடிக்கை எடுக்கும்” என்று கூறினார்.
தனியார் நிறுவனங்களில் வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக உயர்த்துவது தொடர்பான சட்ட மசோதா சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகளுடன், தி.மு.க கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ம.தி.மு.க, வி.சி.க உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. சி.பி.எம், வி.சி.க உள்ளிட்ட தி.மு.க கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு செய்தன. இதனைத் தொடர்ந்து குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதா தொடர்பாக விளக்கம் அளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, “வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீட்டிற்காக தமிழகத்தை நோக்கி வருகின்றன. தொழிற்சாலைகளில் நெகிழ்வுத் தன்மை வரவேண்டும் என்பதற்காக, இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. எந்த தொழிலாளர்கள் விரும்புகிறார்களோ, அவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும். இது தொடர்பாக உயர்மட்ட குழு அமைக்கப்படும்" என்று தெரிவித்தார்.
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கணேசன் பேசுகையில், "வாரத்திற்கு 48 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும்; இந்த நேரத்தை 4 நாட்களில் முடித்துவிட்ட பிறகு 5-வது நாளாக தொழிலாளர் வேலை செய்ய விரும்பினால், அவர்களுக்கு சம்பளம் வழங்கும் வகையில் சட்டம் உள்ளது; அனைத்து நிறுவனங்களுக்கும் இந்த சட்டம் இல்லை; விரும்பக்கூடிய தொழிற்சாலைகள், தொழிலாளர்களுக்கு மட்டுமே இந்தச் சட்டம் கொண்டுவரப்படும்" என்று தெரிவித்தார்.
வெளிநடப்பும் எதிர்வினையும்: தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 12 மணி வேலை நேர மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கூட்டணிக் கட்சிகள் வெளிநடப்பு செய்தனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியது:
வி.சி,க எம்.எல்.ஏ சிந்தனைசெல்வன்: “ஆலை முதலாளிகளுக்கான சட்டமாக இது உள்ளது. அனைத்து கூட்டணிக் கட்சிகளும் எதிர்த்து குரல் கொடுத்தோம். யார் மீதும் திணிக்கப்படாது என்கிறார்கள். ஆனால், இது உழைப்புச் சுரண்டலுக்கு வழிவகுக்கும்.” என்று கூறினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ நாகை மாலி: “கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவான சட்டத்தை தமிழக அரசு நிறைவேற்றியிருக்கிறது. தொழிற்சங்க உரிமையை நசுக்கும் சட்டம் பற்றி காலையிலேயே முதல்வரை சந்தித்து பேசினோம். முதல்வர் உறுதியளித்த பின்னரும் நிறைவேற்றப்பட்டுள்ளது.” என்று பேசினார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ தளி ராமச்சந்திரன்: “நூற்றாண்டு காலமாக போராடி பெற்ற சம்பள உயர்வு, நிரந்தர வேலை எல்லாவற்றையும் நீர்த்துப் போகும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது. அதை எதிர்த்து வெளிநடப்பு செய்தோம்.” என்று பேசினார்.
இதனிடையே, "மின்னணுவியல் துறை, தோல் அல்லாத காலணிகள் உற்பத்தி, மென்பொருள் துறையில் பணியாற்றக் கூடியவர்களுக்கு 12 மணி நேர வேலை மசோதா பொருந்தும் வாய்ப்புள்ளது" என்று தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.