Advertisment

அரசியல்வாதியாக பேசுவதா? வேடிக்கை பார்க்க மாட்டோம்; ஆளுநருக்கு எதிராக தீர்மானம் தாக்கல் செய்த ஸ்டாலின்

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு அறிவுரை வழங்க மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தனித் தீர்மானம் தாக்கல் செய்தார்.

author-image
WebDesk
New Update
stalin

சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின்

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் விரைந்து ஒப்புதல் வழங்க அவருக்கு ஜனாதிபதியும், மத்திய அரசும் அறிவுரை வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (ஏப்ரல் 10) முதல்வர் ஸ்டாலின் தனித் தீர்மானம் தாக்கல் செய்தார். இந்த தீர்மானத்திற்கு பேரவை உறுப்பினர்கள் எழுந்து நின்று ஆதரவு தெரிவித்தனர். அவையில்
146 உறுப்பினர்கள் இருந்த நிலையில், 144 பேர் ஆதரவு தெரிவித்தனர். முன்னதாக அ.தி.மு.கவினர் வெளிநடப்பு செய்தனர். பா.ஜ.க உறுப்பினர்கள் 2 பேர் இருந்த நிலையில் அவர்கள் ஆளுநரின் செயல்பாடுகளுக்கு எதிரான தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

Advertisment

ஆளுநர் ஆர்.என். ரவிக்கும், அரசுக்கும் இடையேயான மோதல் போக்கு நீட்டித்து வருகிறது. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்துவதாகவும், நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாவும் தி.மு.க அரசு தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது. குறிப்பாக ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா உள்ளிட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் வைத்துள்ளார்.

இந்தநிலையில் அண்மையில் ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய ரவி, "ஆளுநர் ஒரு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலதாமதம் செய்தால், அது நிராகரிக்கப்பட்டதாக அர்த்தம்" என்று கூறினார். இதற்கு முதல்வர் ஸ்டாலின் உள்பட அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து, இன்று ஆளுநரின் செயல்பாடுகள் மற்றும் அவருக்கு அறிவுரை வழங்க வலியுறுத்தி சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தனித் தீர்மானம் தாக்கல் செய்தார். தீர்மானத்தை தாக்கல் செய்து பேசிய அவர், மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் பொறுப்பு மாநில அரசுக்கு உண்டு. மக்கள் நலனுக்கு கொண்டு வரும் மசோதாக்களை கிடப்பில் போடுவதால் வருத்தம் ஏற்படுகிறது.

வகுப்புவாத சக்திகளுக்கு ஊதுகுழல்

நாட்டுக்கு ஆளுநர் தேவையில்லை என்ற போதும், பதவிக்கான மரியாதையை கொடுக்க தவறவில்லை. மக்களுக்கும் அரசுக்கும் வழிகாட்டியாக, நண்பராக ஆளுநர் இருக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற தீர்ப்பு உள்ளது. ஆனால் ஆளுநர் அரசியல் கட்சி கண்ணோட்டத்தில் செயல்பட்டு வருகிறார். ஆளுநர் என்ற நிலையை தாண்டி அரசியல்வாதியாக பேசுகிறார். தமிழக அரசுக்கு எதிராக பேசுவதை நோக்கமாக கொண்டுள்ளார். ஆளுநர் பற்றற்ற அடையாளம் உள்ளவராக இருக்க வேண்டும்.

சட்டசபையில் இயற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். ஆளுநர் என்ற நிலை மாறி அரசியல்வாதியாக ஆளுநர் பேசுகிறார். தமிழக மக்களின் நலனுக்கு குறுக்கே நிற்கிறார். மதச்சார்பின்மைக்கு எதிராக பேசுகிறார். சட்டசபையை அவமதிக்கிறார். வகுப்புவாத சக்திகளுக்கு ஊதுகுழலாக உள்ளார். ராஜ்பவனை அரசியல்பவனாக மாற்றி வருகிறார்.

மக்கள் ஏமாளிகள் அல்ல

ஆளுநர் பேசி வந்த கருத்துகளுக்கு பதிலுக்கு பதில் சொல்ல சட்டசபையை அரசியல்மன்றமாக மாற்ற விரும்பவில்லை. சட்டசபைக்கு அரசியல்நோக்கத்தோடு இடைஞ்சல் கொடுக்க நினைத்தால், வேடிக்கை பார்த்து கொண்டு இருக்க மாட்டோம். ஆளுநர் கூறுவதை நம்பும் அளவுக்கு தமிழக மக்கள் ஏமாளிகள் அல்ல.

மாநில மக்களின் குரலாக விளங்கும் சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க குறிப்பிட்ட காலக்கெடுவை ஜனாதிபதி, மத்திய அரசு நிர்ணயம் செய்ய வேண்டும். சட்டசபையில் நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க ஆளுநருக்கு உரிய அறிவுரைகளை, ஜனாதிபதியும் , மத்திய அரசும் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்" என்றார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Mk Stalin Tamilnadu Assembly Governor Rn Ravi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment