தமிழக சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி எம்.ஜி.ஆர் பாடலை பாடி பதில் சொன்ன சம்பவம் அதிமுக தொண்டர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இன்றைய சட்டப்பேரவை கேள்வி நேரம் மற்றும் விவாதத்துடன் தொடங்கியது. எதிர்கட்சிகள் ஒவ்வொரு கேள்வியாக எழுப்ப அதற்கு அமைச்சர்கள் காரசாரமாக பதிலளித்துக் கொண்டிருந்தனர். அப்போது தான் யாரும் எதிர்பார்க்காத இந்த நிகழ்வு அரங்கேறியது.
சென்னையில் செயின் பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருவதால், சி.சி.டி.வி., காட்சிகளை பார்க்கும் பெண்கள் மிகவும் அச்சமடைகிறார்கள். எனவே செயின் பறிப்பு சம்பவங்களை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மானிய கோரிக்கை விவாதத்தில் பேசிய காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் ராமசாமி கோரிக்கை விடுத்தார்.
இதற்குப் பதில் அளித்த முதலமைச்சர் கூறியதாவது : குற்றசம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை பிடிக்கவும், செயின் பறிப்பு, கொலை, கொள்ளை குற்றங்களை தடுக்கவும் சென்னை முழுவது சுமார் 2 லட்சம் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டு அதனை காவலர்கள் கட்டுப்பாட்டு அறையில் இருந்து தொடர்ந்து கண்காணிப்பதாகவும் தெரிவித்தார்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்படுவதால் தான் முதலீடுகள் அதிக அளவில் தமிழகத்திற்கு வருவதாகவும் கூறினார். திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்று 58ஆண்டுகளுக்கு முன்னரே எம்.ஜி.ஆர் பாடல் வரிகள் மூலம் உலகிற்கு உணர்த்தியுள்ளார் என்பதை சுட்டிக்காட்டிய முதல்வர், செயின் பறிப்பு சம்பவங்களை தடுக்க தொடர் கண்கானிப்பு பணிகள் நடந்து வருவதாகவும் முதல்வர் விளக்கம் அளித்தார்.
பேரவையில் முதல்வர், எம்.ஜி. ஆர் பாடல் வரிகளை பாடும் போது அதிமுக அமைச்சர்கள் ஆதரவு தெரிவித்தனர்.