TN Assembly Session | Governor RN Ravi: தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் ஆண்டுதோறும் ஆளுநர் உரையுடன் தொடங்குவது மரபாக இருந்து வருகிறது. அந்த வகையில், ஜனவரி மாதம் 2-வது வாரத்தில் வழக்கமாக சட்டசபை கூடும். ஆனால், இந்த ஆண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாடு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஸ்பெயின் பயணம் போன்ற காரணங்களால், சட்டசபை கூடுவது தள்ளிப்போனது.
இந்த நிலையில், ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் இன்று தொடங்கி நடைப்பெற்றது. காலை 10 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் சட்டசபை கூட்டம் தொடங்கியது. இதனை தொடர்ந்து, உரையாற்றிய ஆளுநர் ஆர்.என். ரவி 2 நிமிடங்களில் தனது உரையை நிறைவு செய்தார். தேசிய கீதம் முதலிலும், இறுதியிலும் இசைக்கப்பட வேண்டும். உண்மைக்கு புறம்பான தகவல்கள் இருந்ததால் முழுமையாக வாசிக்க விரும்பவில்லை என்று கூறி உரையை 2 நிமிடங்களில் நிறைவு செய்தார்.
இதனையடுத்து, சட்டப்பேரவையில் ஆளுநர் ரவி வாசிக்க வேண்டிய உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். அப்போது அவர், அப்போது அவர், “ஆளுநர் ஒப்புதல் பெற்றபிறகே உரை தயாரிக்கப்பட்டது. சாவர்க்கர் வழியில் வந்தவர்களுக்கும், கோட்சே வழியில் வந்தவர்களுக்கும் சற்றும் குறைந்தவர்கள் அல்ல தமிழ்நாட்டு சட்டமன்றம்” என்று தெரிவித்தார்.
தனது உரையை முடித்த பின் பேசிய சபாநாயகர் அப்பாவு, “ஜனகனமன பாடியிருக்க வேண்டும் என ஆளுநர் சொன்னார். எல்லோருக்கும் நிறைய கருத்துகள் இருக்கிறது. அதையெல்லாம் பேசுவது மரபல்ல. உங்கள் மனதில் இருப்பதை நீங்கள் சொன்னீர்கள். எங்கள் மனதில் இருப்பதை நாங்கள் சொல்லலாம் அல்லவா. இவ்வளவு பெரிய புயல் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. ஒரு பைசா கூட நிதி கொடுக்கவில்லை. பல லட்சம் கோடி ரூபாய் பிஎம் கேர் ஃபண்டில் உள்ளது. ஒரு 50 ஆயிரம் கோடி ரூபாயை ஐயா வாங்கித் தந்தால் நன்றாக இருக்கும் என்று நான் கேட்கலாமே. சவார்க்கர் வழி வந்தவர்களுக்கும், கோட்சே வழி வந்தவர்களுக்கும் சற்றும் சளைத்தவர்கள் அல்ல தமிழ்நாட்டு சட்டமன்றம்” என்று கூறினார்.
இதையடுத்து ஆளுநருக்கு எதிராக பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனால் ஆளுநர் அங்கிருந்து புறப்பட்டு எழுந்து சென்றார். ஆளுநர் உரையை அப்படியே பதிவேற்றம் செய்ய வலியுறுத்தி பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தேசிய கீதம் குறித்து ஆளுநர் ரவி பேசியது அவை குறிப்பில் இடம் பெறாது என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“