/indian-express-tamil/media/media_files/G9MoLNgR3nohIHHYCnrw.jpg)
TN Assembly Today Session
தமிழக சட்டப்பேரவையில் கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த கோரி அமளியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். மேலும் இன்று ஒரு நாள் பேரவை நடவடிக்கைகளில் கலந்து கொள்ள அதிமுக உறுப்பினர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
நேற்று தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் கள்ளக்குறிச்சி விவகாரத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. இதனால் அதிமுகவினர் யாரும் சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்கவில்லை
இந்நிலையில், தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 5-ம் நாள் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. கள்ளக்குறிச்சி சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அதிமுக நிர்வாகிகள் இன்றும் கருப்பு உடையில் சட்டப்பேரவைக்கு வருகை தந்தனர்.
கூட்டத்தொடர் தொடங்கியதும் கேள்வி நேரத்தை ஒத்திவைத்து கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த கோரி அதிமுக உறுப்பினர்கள் அமளி செய்தனர்.
அதற்கு, கேள்வி நேரத்துக்கு பிறகு பேச அனுமதிப்பதாகவும், அதற்கான நேரம் வழங்குவதாகவும் சபாநாயகர் தெரிவித்தார். இருப்பினும் எடப்பாடி பழனிசாமி முதலில் கள்ளச் சாராய மரணங்கள் தொடர்பாக பேசுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுத்தி கொண்டிருந்தார்.
தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அதிமுகவினர் அனைவரையும் பேரவையிலிருந்து வெளியேற்ற சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.
இந்நிலையில், சட்டப்பேரவையில் தொடர்ந்து அதிமுக அமளியில் ஈடுபட்டு வருவதால் நகராட்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, நடைபெற்று வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடர் முழுவதும் அதிமுகவுக்கு தடைவிதிக்க வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்தார்.
ஆனால், முதல்வர் ஸ்டாலின், அதிமுகவுக்கு இன்னொரு வாய்ப்பு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து, இன்று ஒரு நாள் மட்டும் பேரவை நடவடிக்கைகளில் கலந்து கொள்ள அதிமுக உறுப்பினர்களுக்கு தடை விதித்து சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.
மேலும் இந்த விவகாரம் குறித்து பேரவையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “தேவையற்ற பிரச்சினையை அதிமுக சட்டப்பேரவையில் ஏற்படுத்துகிறது. விஷச்சாராய உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதியரசர் கோகுல்தாஸ் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
திட்டமிட்டு கலவரத்தை உருவாக்குவதற்காக அதிமுகவினர் அமளியில் ஈடுபடுகின்றனர். 40 தொகுதிகளிலும் திமுக பெற்ற வெற்றி அதிமுக கண்களை உறுத்துகிறது. அதை திட்டமிட்டு திசை திருப்ப இதுபோன்ற பிரச்சினைகளை கிளப்பி வருகின்றனர்.
கள்ளச்சாராய பலி தொடர்பாக தீவிரமாக விசாரிக்கபட்டு வரும்போது எதிர்க்கட்சி தலைவர் சிபிஐ விசாரணை வேண்டும் என வலியுறுத்துகிறார். ஆர்பாட்டம் நடத்துகின்றனர். அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்துவது ஜனநாயக உரிமை.
எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது அவர் மீது போடப்பட்ட வழக்கில் சிபிஐ மீது நம்பிக்கையில்லை எனக் கூறி தடை உத்தரவு வாங்கிய வீராதிவீரர் தான் இவர். அப்படிப்பட்டவர் இன்று சிபிஐ விசாரணை வேண்டும் என பேசுகிறார். ஆகையால் சிபிஐ விசாரணை குறித்து சபாநாயகரே முடிவு செய்யலாம்” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.