தமிழக சட்டசபையில் முதல் நாளே பரபரப்பு! தூத்துக்குடி துப்பாக்கி சூடுக்கு முதல்வர் அறிக்கை தாக்கல் ; எதிர்கட்சிகள் வெளிநடப்பு

போலீசார் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களைக் கூறி பேசுவார்கள்.

TN Assembly Session : மார்ச் மாதம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்ட தமிழக சட்டசபை கூட்டம் இன்று கூடுகிறது. 1500 க்கும் மேற்பட்ட போலீஸ் குவிப்பு.

TN Assembly Session: சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை 10.30 மணி அளவில் தமிழக சட்டசபை கூட்டம் கூடுகிறது. தமிழகத்தில் தற்போது பல்வேறு பிரச்சனைகள் நிலவி வரும் நிலையில், இன்று கூடும் சட்டசபை கூட்டத்திற்காக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற்காகத் தலைமை செயலகம் பகுதியில் 1500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

TN Assembly Sessions LIVE UPDATES உங்களுக்காக:

1.20 pm: பேரவைக்கு வெளியே டிடிவி.தினகரன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ‘‘முதல்வர் போட்டோவைக் காட்டி ஷோ காண்பிக்கிறார். டாஸ்மாக் அமைச்சர் கோபமாகிறார். படுகொலை என்று சொன்னால் அவர்கள் கோபப்படுகிறார்கள். அதனால் துப்பாக்கிச்சூடு என்று சொல்கிறேன். நாங்கள் அசந்திருந்த நேரத்தில் ஆர்.கே.நகரில் டிடிவி.தினகரன் ஜெயித்துவிட்டார் என்று துணை முதல்வர். அதே போல அரசாங்கம் அசந்து போய்விட்டதோ. அம்மா இருந்திருந்தால், இப்படியொரு சம்பவம் நடந்திருக்குமா? அமைச்சர்களுக்கு வெட்கமாக இருக்காதா? அமைச்சர்கள் நிதானத்திலேயே இல்லை. இந்த அரசியல் கட்சி தூண்டி விட்டது என்று குறிப்பிட்டு சொல்ல வேண்டியதுதானே? கோபப்படவும் தகுதி வேண்டும். பதவியில் இருந்தால் என்ன வேண்டுமானாலும் பேசலாமா? ஆலையை மூடும் போராட்டம் தற்காலிகமாக வெற்றி கிடைத்துள்ளது. அமைச்சரவையைக் கூட்டி தீர்மானம் போட்டு, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அப்போதுதான் முழு வெற்றி கிடைக்கும்.’’ என்றார்.

1.05 pm : தூத்துக்குடியில் மக்கள் 99 நாட்கள் அமைதியாக போராடினர். நூறாவது நாள் திமுக எம்.எல்.ஏ. கீதா ஜீவன் தூண்டுதலின் பேரில் கலவரம் நடந்தது. கலவரத்துக்கு திமுகவே காரணம் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது உரையின் போது குற்றம் சாட்டினார். ஐந்து தடுப்புகளைத் தாண்டி போராட்டக்காரர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்ததையும், தீ வைப்பு சம்பவங்கள் தொடர்பான புகைப்படங்களையும் முதல்வர் பழனிச்சாமி பேரவையில் வெளியிட்டார்.

12.50 pm : தூத்துக்குடி மக்களின் 22 ஆண்டுகால போராட்டத்துக்கு தீர்வு கிடைத்துள்ளது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேரவையில் தெரிவித்தார்.

12.40 pm : பேரவைக்கு வெளியே திமுக தலைவர் ஸ்டாலின் பேட்டி அளித்தார். அப்போது அவர், ‘‘ஆலையை மூடுவதாக அறிவித்து இருப்பது கண்துடைப்பு. அமைச்சரவையை கூட்டி தீர்மானம் நிறைவேற்றியிருக்க வேண்டும். ஆனால் ஆலை அதிபருக்கு சாதகமாக நீதிமன்றம் செல்ல இப்படியொரு ஆணை வெளியிட்டுள்ளார்கள். பேரவையில் பேசும் போது, படுகொலை, கையாலாகதா அரசு என்று சொன்னார் சபை குறிப்பில் இருந்து நீக்கிவிட்டார்கள். துப்பாக்கிசூடுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதவி விலக வேண்டும். அதுவரையில் நாங்கள் சபையை புறக்கணிக்கிறோம். உரிய நடவ்டிக்கை எடுக்கவில்லை என்றால் திமுக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வைப்போம்’’ என்றார்.

12.35 pm : சட்டபேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு செய்தது. முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் துப்பாக்கிசூடு என்ற வார்த்தையே இல்லை. துப்பாக்கிசூடுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்கும் வரையில் திமுக சட்டப்பேரவை கூட்டதொடரை புறக்கணிக்கப் போவதாகவும் அறிவிப்பு. பேரவைக்கு வெளியே கூடிய திமுக உறுப்பினர்கள், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ராஜினாமா செய்யக் கோரி கோஷம் எழுப்பினர்.

12.10 pm : கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பேசிய சுயேட்சை எம்.எல்.ஏ. டிடிவி.தினகரன், ‘சிலர் கலவரத்தை தூண்டினர்’ என்று சொல்வது முதல்வர் பதவிக்கு அழகா? என்ற கேள்வியை எழுப்பினார். இதற்கு ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டுள்ளனர்.

12.05 pm : தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி அறிக்கை தாக்கல் செய்தார்.

12.00 pm : எதிர் கட்சியினர் கடும் அமளியைத் தொடர்ந்து, ஸ்டாலின் பேச சபாநாயகர் அனுமதி வழங்கினார்.

11.55 am : திமுக கொண்டு வந்த ஒத்திவைப்பு தீர்மானம் நிராகரிப்பு. தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக திமுக சார்பில் அளிக்கப்பட்ட ஒத்திவைப்பு தீர்மானத்தை சபாநாயகர் நிராகரித்தார். மூன்று உறுப்பினர்கள் தீர்மானத்தை கொண்டுவந்ததால், விவாதிக்க முடியாது என தெரிவித்தார். இதற்கு திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

11.30 am : “மின் ஊழியர்கள் சிறப்பான பணியால் மின்வாரியத்திற்கு வரும் புகார்கள் வெகுவாக குறைந்துள்ளது. மத்தய அரசு மற்ற மாநிலங்களுக்கு காட்டிலும் தமிழகத்திற்கு கூடுதலான நிலக்கரி வழங்கி உள்ளது. மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்துக்கு மத்திய அரசு நன்கு உதவுகிறது” என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

10.40 am : மறைந்த முன்னாள் எம்.எல்.ஏக்களுக்கு இரங்கல் தெரிவித்து 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

10.31 am : தமிழக சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியது. சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் தலைமையில் கூட்டம் துவக்கம்.

10.07 am : சட்டசபைக்கு கருப்பு சட்டையில் வந்தார் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்.

9.47 am : பேரவையில் திமுக ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர நோட்டீஸ். திமுக செயல் தலைவர் ஸ்டாலின் இந்த நோட்டீஸை சபாநாயகரிடம் அளித்தார். பேரவை நிகழ்வுகள் அனைத்தையும் ஒத்திவைத்து ஸ்டெர்லைட் தூப்பாக்கி சூடு பற்றி விவாதம் செய்ய வேண்டும் என்று நோட்டீஸ்

9.37 am : ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் இன்று கவன ஈர்ப்பு தீர்மானம் நிறைவேற்றம்.

ttv dinakaran - assambly

டிடிவி.தினகரன் எம்.எல்.ஏ. சட்டசபைக்கு வந்த போது…

9.34 am : மறைந்த முன்னாள் எம்.எல்.ஏக்கள் 7 பேருக்கு இன்று இரங்கல் வாசிப்பு நடைபெறுகிறது. செ.மாதவன், முத்தையா, கணேசன், ஆர்.சாமி, பூபதி, மாரியப்பன் உள்பட 7 பேர் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்க உள்ளனர்.

9.26 am : திமுக எம்.எல்.ஏக்கள் கருப்பு சட்டை அணிந்து சட்டசபைக்கு வருகை. தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து திமுக எம்.எல்.ஏக்கள் கருப்பு சட்டை அணிந்து வருகை.

2018 – 19 ஆண்டிற்கான பட்ஜெட் கடந்த மார்ச் மாதம் 15ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட் மீதான விவாதம் மார்ச் 19ம் தேதியில் இருந்து 22ம் தேதி வரை நடைபெற்றது. பின்னர் தேதி குறிப்பிடாமலேயே தமிழக சட்டசபை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இன்று மீண்டும் இந்தக் கூட்டம் கூடுகிறது. இன்று தொடங்கும் இந்தக் கூட்டம் ஜூலை 9ம் தேதி நடைபெறும் எனச் சபாநாயகர் தனபால் தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெறும் இந்தக் கூட்டத்தில், துறை ரீதியான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடத்தப்பட உள்ளது. இன்று காலை 10.30 மணிக்குச் சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியதும், மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவத்தில் உயிரிழந்த 13 பேருக்கு இரங்கல் தெரிவிக்கப்படும். இதைத்தொடர்ந்து கேள்வி நேரம் எடுத்துக் கொள்ளப்படும்.

இதற்கிடையே, எதிர்க்கட்சியான திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி சார்பில், கடந்த வாரம் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி நடந்த பேரணியின்போது, போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவத்தை எழுப்பி, விவாதம் நடத்த வலியுறுத்தத் திட்டமிட்டுள்ளனர். அப்போது எதிர்க்கட்சிகள், முன் அறிவிப்பு இன்றி துப்பாக்கி சூடு நடத்திய போலீசார் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களைக் கூறி பேசுவார்கள்.

இதற்கு, போலீஸ் துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்துப் பேசுவார். தமிழகம் முழுவதும் பொதுமக்களிடம் கொந்தளிப்பான நிலையை ஏற்படுத்தியுள்ள இந்த பிரச்சினை குறித்து சட்டப்பேரவையில் இன்று பேசும்போது அதில் விவாதங்களில் அனல்பறக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அதையடுத்து நாளை (புதன்) பள்ளிக் கல்வி துறை, உயர் கல்வி துறை, 31ம் தேதி எரிசக்தி, மதுவிலக்கு, ஜூன் 4ம் தேதி உள்ளாட்சி, 7ம் தேதி தொழில்துறை, 11ம் தேதி நெடுஞ்சாலை, 19ம் தேதி மக்கள் நல்வாழ்வு, 22ம் தேதி காவல் ஆகிய துறைகள் மீது விவாதம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

×Close
×Close