தமிழ்நாடு ஆளுநர் மாளிகை வெளியிட்ட அழைப்பிதழில் இடம்பெற்ற திருவள்ளுவர் படம் காவி உடையில் இருந்தது பெரும் சர்ச்சையான நிலையில், ஆளுநருக்கு குல்லாவும், அவரது மனைவிக்கு பர்தாவும் அணிவித்தால் ஏற்பாரா என்று சபாநாயகர் அப்பாவு ஆளுநருக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக அரசின் அதிகாரப்பூர்வமான திருவள்ளுவர் படத்தில் திருவள்ளுவர் வெள்ளை ஆடை அணிந்திருப்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பொதுவான படமாக இருக்கிறது. ஆனால், பா.ஜ.க மற்றும் அதன் ஆதரவு அமைப்புகள் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்த படத்தை வெளியிட்டதன் மூலம் தமிழக அரசியலில் பெரும் சர்ச்சை வெடித்தது.
இந்நிலையில், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் திருவள்ளுவர் திருநாள் விழா வெள்ளிக்கிழமை மாலை நடைபெறுகிறது. இந்த விழாவை முன்னிட்டு ஆளுநர் மாளிகை தரப்பில் அழைப்பிதழ் வெளியிடப்பட்டுள்ளது. அந்த அழைப்பிதழில் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிக்கப்பட்டுள்ளது.
ஆளுநர் மாளிகை அழைப்பிதழில் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிக்கப்பட்டதற்கு தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இதைத் தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு ஆளுநர் ஆர்.என். ரவிக்கு இன்ஸ்டாகிராமில் கேள்வி எழுப்பியுள்ளார். அதில், “ஆளுநருக்கு குல்லா அணிவித்தால் ஏற்பாரா? அவரது மனைவிக்கு பர்தா அணிவித்தால் ஏற்பாரா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“