இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் கலாச்சார மையத்தை மத்திய இணையமைச்சர் எல்.முருகன் திறந்து வைத்துள்ளார்.
அரசு முறை பயணமாக இலங்கை சென்ற மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று இன்று திரும்பியுள்ளார்.

குறிப்பாக யாழ்ப்பாணம் கலாசார மையத்தை திறந்து வைத்தார். இந்தியாவின் நிதி உதவியோடு கட்டப்பட்ட இந்த மையத்திற்கு, கடந்த 2015ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.
யாழ்ப்பாணம் கலாச்சார மையத்தில் அருங்காட்சியகம், 600 பேர் வரை அமரக்கூடிய நவீன திரையரங்கு உள்ளிட்ட வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இன்று அதிகாலை மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மற்றும் பாஜக தமிழக தலைவரான அண்ணாமலை ஆகியோர் சென்னை திரும்பினர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன், யாழ்ப்பாணம் மக்களின் நலனுக்காக யாழ்ப்பாணம் கலாசார மையம் தொடங்கப்பட்டது என்று குறிப்பிட்டார்.
தற்போது, இலங்கை சிறையில் தமிழக மீனவர்கள் யாரும் இல்லை என்று குறிப்பிட்ட அவர், தமிழக மீனவர்கள் தொடர்பாக விரைவில் இலங்கையுடன் ஆலோசனை நடைபெறும் என்று தெரிவித்தார்.