தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை மேற்கொள்ள உள்ள பாத யாத்திரை தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு, சென்னை, மயிலாப்பூரில் நேற்று நடந்தது. அப்போது, பா.ஜ.க மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியது பின்வருமாறு:-
தமிழகத்தில் பல்வேறு காலகட்டத்தில் அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, 'என் மண் என் மக்கள்' என்ற பெயரில் பாத யாத்திரை மேற்கொள்கிறார். அதை வரும், 28ம் தேதி மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா, ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் துவக்கி வைக்கிறார். அன்று, ராமேஸ்வரத்தில் பொதுக்கூட்டம் நடக்கும். அதில், ராமேஸ்வர தீர்மானங்கள் வெளியிடப்படும். அதில், தமிழக பா.ஜ., வரும் ஆண்டுகளில் எந்த திசையை நோக்கி பயணிக்க வேண்டும் என்ற நோக்கம் இடம்பெறும்.
முதல் கட்டமாக, ராமேஸ்வரத்தில் துவங்கும் பாதயாத்திரை, சிவகங்கை, மதுரை, தேனி, விருதுநகர், துாத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி லோக்சபா தொகுதிகளில் ஆகஸ்ட் மாதம் வரை நடக்கும். ஐந்து கட்டங்களாக நடக்கும் யாத்திரை, ஜனவரியில் சென்னையில் முடிவடையும். தி.மு.க.,வின் ஊழல் நிறைந்த குடும்ப ஆட்சியின் அவலங்கள் மக்களிடம் சேர்க்கப்படும். பாத யாத்திரை, 39 லோக்சபா தொகுதிகளில் உள்ள, 234 சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கியதாக இருக்கும். அண்ணாமலை நடந்தும், வாகனத்தில் சென்றும் மக்களை சந்திப்பார்.
பிரதமர் நரேந்திர மோடி, தமிழகத்திற்கு செய்த சாதனைகள் அடங்கிய, 10 லட்சம் புத்தகங்கள் பொது மக்களுக்கு விநியோகம் செய்யப்படும். அண்ணாமலை எழுதிய கடிதம், 1 கோடி குடும்பங்களுக்கு வழங்கப்படும். யாத்திரையின் போது, 11 இடங்களில் பொதுக்கூட்டங்கள் நடக்கும். அதில் மத்திய அமைச்சர்கள், மேலிட தலைவர்கள் பங்கேற்பர்.
மேலும், 100 தெருமுனை கூட்டங்கள், கிராம சபை கூட்டங்களில் அண்ணாமலை பேசுவார். முக்கிய நகரங்களில் இருந்து புனித மண் சேகரித்து, அதில் தமிழ் தாய்க்கு முழு உருவ சிலை அமைக்கப்படும். பாத யாத்திரை நிறைவு நாளில் பிரதமர் மோடி பங்கேற்கவும் வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
'விடியல, முடியல' புகார் பெட்டி
அண்ணாமலை பாத யாத்திரையின் போது பொது மக்களிடம் இருந்து புகார் பெற, மக்கள் புகார் பெட்டி என்ற பெயரில் ஒரு பெட்டி எடுத்து செல்லப்பட உள்ளது. அதில் மக்கள் தங்களின் புகார்களை தெரிவிக்கலாம். புகார் பெட்டியின் மேல், 'விடியல, முடியல!' என்றும், நில அபகரிப்பு, ரவுடியிசம், மணல் கடத்தல், ஊழல், சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil