"ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் கே.எஸ்.தென்னரசு வெற்றபெற பாடுபடுவோம்" - அண்ணாமலை அறிவிப்பு | Indian Express Tamil

அ.தி.மு.க-வுக்கு ஆதரவு; ஓ.பி.எஸ்-க்கு நன்றி: அண்ணாமலை அறிக்கை

“தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றி வேட்பாளராகக் களம் காணும் கே.எஸ்.தென்னரசு அவர்களுக்கு நல்வாழ்த்துக்களையும், பாஜகவின் நல்லாதாராவையும், தெரிவித்துக் கொள்கிறேன்” – கே.அண்ணாமலை

Tamil news
Tamil news Updates

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக உடன் கூட்டணியில் ஈடுபட்டிருக்கும் பாஜக, அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு வெற்றிபெற அனைவரும் உதவ வேண்டும் என்று அறிவிப்பு விடுத்துள்ளது.

இதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது, “தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில்,ஈரோடு- கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில், அதிமுக வேட்பாளராக, இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும், கே.எஸ்.தென்னரசுக்கு பாரதிய ஜனதா கட்சி, தனது முழு ஆதரவளித்த தெரிவித்துக் கொள்கிறது.

தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பாக, சட்டபூர்வ அதிமுக வேட்பாளரை முன்னிறுத்தி இருக்கும், இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கும், பொதுநலன் கருதி, கூட்டணியின் நன்மை கருதி, தங்களது வேட்பாளரை வாபஸ் பெற்றிருக்கும் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கும், நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஆளும் கட்சியின் அராஜகங்களை, ஊழல்களை அத்துமீறல்களை, மக்கள் விரோத போக்கை, கொடுத்த வாக்கில் எதையும் நிறைவேற்ற முடியாமல், திணறிக் கொண்டிருக்கும் திறனற்ற திமுக அரசை, வீழ்த்துவதற்காக ஓரணியில் திரண்டிருக்கும், நாம் அனைவரும், அதிமுகவின் அதிகாரபூர்வ வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு வெற்றிக்கு பாடுபட வேண்டும்.

குறிப்பாக,பாரதீய ஜனதா கட்சியின் தலைவர்களும், நிர்வாகிகளும், தொண்டர்களும், கூட்டணியின் வெற்றிக்காக கடுமையாக பாடுபட வேண்டும்.

இந்த இடைத்தேர்தல் வெற்றி, வருங்கால தேர்தல் வெற்றிகளுக்கு வரவேற்பு கூறும்வண்ணம் அமைக்க, கண்ணுறக்கம் இல்லாமல் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும்.

ஆட்சியின் பலம், அதிகாரத்தின் பலம் அளவின்றி குவிந்திருக்கும் பணபலம், என்று எதனை பலத்துடன் நம் எதிரி வந்தாலும், மக்கள் பலத்துடன், நாம் மனதார உழைக்க வேண்டும், என்று பாஜக சொந்தங்கள் அனைவரையும் அன்புடன் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றி வேட்பாளராகக் களம் காணும் கே.எஸ்.தென்னரசு அவர்களுக்கு நல்வாழ்ழ்த்துக்களையும், பாஜகவின் நல்லாதாராவையும், தெரிவித்துக் கொள்கிறேன்”, என்று தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tn bjp annamalai wishes admk candidate thennarasu for erode east byelection