Annamalai | Coimbatore | Lok Sabha Election 2024: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
இந்நிலையில், கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் அறிக்கையை தமிழக பா.ஜ.க தலைவரும், அந்தத் தொகுதியின் வேட்பாளருமான அண்ணாமலை இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டார். அதில், கோவை தொகுதியில் 500 நாட்களில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்றும், 250 மக்கள் மருந்தகங்கள், முதியோருக்கு மருத்துவ மையம், 3 உணவு வங்கிகள் அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணாமலை வெளியிட்டுள்ள கோவை மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது பின்வருமாறு:-
* கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி பணிகள் தணிக்கைக்கு உட்படுத்தப்படும்.
* ஸ்மார்ட் சிட்டி திட்டங்களில் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்தால் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்படும்.
* கோவையில் என்.ஐ.ஏ கிளை அமைக்கப்படும், காமராஜர் பெயரில் கோவையில் நடமாடும் உணவகங்கள்.
* மத்திய அரசு உதவியுடன் கோவையில் உயர்தர புற்றுநோய் சிகிச்சை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* கோவை தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற அலுவலகங்களிலும் மக்கள் குறைதீர் மையங்கள் அமைக்கப்படும்.
* கோவையில் 250 மக்கள் மருந்தகங்கள், முதியோருக்கு மருத்துவ மையம், 3 உணவு வங்கிகள் அமைக்கப்படும்.
* நாடு முழுவதும் உள்ள ஆன்மீகத்தலங்களுக்கு கோவையில் இருந்து 10 ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* கோவையில் ஐ.ஐ.எம். கொண்டு வர வலியுறுத்துவோம்.
* பல்லடத்தை ஆயத்த ஆடை உற்பத்தி மையமாக அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்.
* கோவை எப்போதும் பசுமையாக இருக்க மரங்கள் நட்டு பசுமை பரப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* சரவணப்பெட்டியில் மக்களின் பொழுதுபோக்குக்காக பொதுப்பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* சரவணப்பெட்டியில் மத்திய அரசின் அம்ருத் திட்டத்தின் கீழ் பேருந்து நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 ஆண்டுகள் முடிவில் சர்வதேச தரமுள்ள நகராக கோவை மாற்றத்தை சந்தித்திருக்கும் என்றும் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“