/indian-express-tamil/media/media_files/vptoPR0qq4207hFtzkBB.jpg)
தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தஞ்சாவூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார் உடன் சந்திப்பு Image source: screenshot from Annamalai's facebook video
தமிழ்நாட்டில் இந்த மக்களவைத் தேர்தலில் 39 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19-ம் தேதி முதலில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
2019 பொதுத் தேர்தலில், தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி, காங்கிரஸ், வி.சி.க, ம.தி.மு.க., சி.பி.ஐ., சி.பி.ஐ.(எம்), ஐ.யு.எம்.எல்., ம.ம.க, கே.எம்.டி.கே.,டி.வி.கே, மற்றும் ஏ.ஐ.எஃப்.பி. கட்சிகள் இடம்பெற்றிருந்தன. 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தி.மு.க கூட்டணி தமிழ்நாட்டில் உள்ள மொத்தம் 39 தொகுதிகளில் 38 இடங்களில் வெற்றி பெற்று அபார வெற்றியைப் பதிவு செய்தது.
தமிழ்நாட்டில், கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க 33.2 சதவீத வாக்குகளுடன் 23 மக்களவைத் தொகுதிகளையும், காங்கிரஸ் 12.9 சதவீத வாக்குகளுடன் 8 இடங்களையும், சி.பி.ஐ, சி.பி.எம் தலா 2 இடங்களையும் வெற்றி பெற்றது.
இந்தியாவில் உள்ள மொத்தம் 543 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இந்த பொதுத் தேர்தலில் கிட்டத்தட்ட 97 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
தமிழ்நாட்டில் இந்த மக்களவைத் தேர்தலில், தி.மு.க கூட்டணி, அ.தி.மு.க கூட்டணி, பா.ஜ.க கூட்டணி என மும்முனைப் போட்டி நிலவுகிறது. தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கோவை தொகுதியில் போட்டியிடுகிறார்.
இந்நிலையில், தமிழக பா.ஜ.க தலைவரும் கோவை வேட்பாளருமான அண்ணாமலை, தேர்தல் பிரசாரத்திற்காக தஞ்சாவூருக்கு வந்தபோது, தஞ்சாவூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையாரை சந்தித்தார்.
காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார் உடனான சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பா.ஜ.க தலைவர்அண்ணாமலை கூறுகையில், “கிருஷ்ணசாமி வாண்டையாரின் குடும்பம் பாரம்பரியம் மிக்கது. காங்கிரஸ் கட்சியில் மூத்த மாவட்ட தலைவர். அவர் குடும்பத்திற்கு தமிழகத்தில் பெயர் உண்டு. இது மரியாதை நிமித்தமான சந்திப்பு” என்று கூறினார்.
மேலும், இந்த சந்திப்பில் எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை என்று அண்ணாமலை தெளிவுபடுத்தினார்.
முன்னதாக வெள்ளிக்கிழமை, ஆளும் தி.மு.க.வையும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினையும் கடுமையாக சாடிய அண்ணாமலை, தி .மு.க தமிழகத்தின் எதிரிகள் மற்றும் மாநில மக்களின் எதிரிகள் என்று கூறினார்.
இந்தியா கூட்டணிக்கு தலைமை தாங்க பிரதமர் வேட்பாளர் இல்லை என்று எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியை அண்ணாமலை தாக்கினார்.
தி.மு.க தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினின் தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் கடந்த 33 மாதங்களில் அவர் என்ன செய்தார் என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.