பிரதமர் மோடி கடந்த 20 ஆம் தேதி ஒடிசாவில் பரப்புரை செய்யும்போது, “பூரி ஜெகந்நாதர் கோவில் கருவூல அறையின் சாவி தமிழ்நாடு சென்றுவிட்டதாக மக்கள் கூறுகின்றனர். அதைத் தமிழ்நாட்டுக்கு அனுப்பியது யார்?” என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
இந்நிலையில், பிரதமர் மோடி 3 நாள் பயணமாக தமிழகம் வருகை தந்துள்ள நிலையில்,“மூன்று நாள் தியானம் முடிந்து பிரதமர் திரும்பி செல்லும் போது ஜெகந்நாதர் கருவூல சாவியுடன்தான் திரும்பி செல்வார்” என்று தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறியதாக குறிப்பிட்ட தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இந்நிலையில், சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் இந்தத் தகவலின் உண்மைத் தன்மையை குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்யப்பட்டது.
வலைதளத்தில் வைரலாகும் நியூஸ்கார்டு ஆனது தினமலரின் நியூஸ்கார்டு டெம்ப்ளேட்டை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருப்பதால் அந்த நிறுவனம் இவ்வாறான நியூஸ்கார்டை வெளியிட்டதா? என அதன் சமூக வலைதள பக்கங்களில் தேடப்பட்டது. இந்தத் தேடலில், அந்த நிறுவனத்தின் சமூக ஊடக பக்கங்களில், வைரலாகும் நியூஸ்கார்டில் குறிப்பிட்டுள்ள மே 28, 2024 அன்று அவ்வாறான நியூஸ்கார்டு பகிரப்படவில்லை.
தொடர்ந்து தேடுகையில் “தமிழக அமைச்சர்கள் 11 பேர் மீது ஊழல் வழக்கு உள்ளது. மேலும் 3 பேர் சிறை செல்லப்போவது உறுதி” என்று அண்ணாமலை பேசியதாக ஜனவரி 10, 2024 அன்று தினமலர் நியூஸ்கார்டு ஒன்றை வெளியிட்டிருந்ததை கண்டறிந்துள்ளனர். அந்த நியூஸ்கார்ட்டை எடிட் செய்தே மேற்கண்ட போலி நியூஸ்கார்டு உருவாக்கப்பட்டுள்ளது என்பதையும் கண்டறிந்துள்ளனர்.
வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான நியூஸ்கார்டையும், எடிட் செய்யப்பட்ட போலி நியூஸ்கார்டையும் ஒப்பிட்டுள்ளனர். சமூக வலைதளத்தில் வைரலாகும் நியூஸ்கார்டு குறித்து விசாரிக்கையில், அது போலியானது என பா.ஜ.க தரப்பு உறுதி செய்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக பா.ஜ.க-வின் சமூக ஊடக அணியின் தலைவர் எம்.எஸ்.பாலாஜியை தொடர்புக் கொண்டு பேசியுள்ளனர். அவர் “இந்தத் தகவல் தவறானது, அண்ணாமலை இவ்வாறு பேசவே இல்லை” என்றும் பதிலளித்துள்ளார்.
இந்த நிலையில், தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி பூரி ஜெகந்நாதர் கோவில் கருவூல அறையின் சாவியுடன்தான் திரும்ப செல்வார் என்று அண்ணாமலை கூறியதாக சமூக ஊடகங்களில் பரவும் தகவல் தவறானது என கிடைக்கப் பெற்ற ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது என்றும், எனவே, இது போன்ற தகவலை யாரும் நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“