க.சண்முகவடிவேல்
Annamalai | tamilnadu-bjp | cuddalore: கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள மேல்புளியங்குடியை சேர்ந்தவர் வீரமணி. இவரது மகன் ஜீவா (17) விருத்தாச்சலத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். இன்று காலை வழக்கம் போல பள்ளி செல்ல பேருந்துக்காக காத்திருந்தார். அப்போது தற்காலிக ஊழியராக மின்வாரியத்தில் பணியாற்றி வரும் ஆனந்த் என்பவர் அங்கு வந்து, தான் வைத்திருந்த கத்தியால் ஜீவாவை சரமாரியாக குத்தியுள்ளார்.
ஜீவா உடலில் 8 இடங்களில் கத்திக்குத்து விழுந்த நிலையில், ரத்த வெள்ளத்தில் சரிந்த ஜீவா உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இதையடுத்து அப்பகுதியினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த போலீஸார் ஜீவாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து முன்விரோதம் காரணமாக கொலை நடைபெற்றதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பேருந்து நிறுத்தத்தில் 12ம் வகுப்பு மாணவன் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், ஜீவாவுக்கு ஆனந்த் பாலியல் ரீதியாக அடிக்கடி தொல்லை தந்ததாகவும், இதனால் ஏற்பட்ட பிரச்னையில்தான் கொலை நிகழ்ந்திருக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், இந்த கொலை தொடர்பாக, பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள மேல் புளியங்குடி என்ற கிராமத்தைச் சேர்ந்த ஜீவா என்ற 17 வயது மாணவர், பேருந்து நிறுத்தத்தில் வைத்து, கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது.
தி.மு.க ஆட்சிக்கு வந்ததில் இருந்து, கொலையாளிகளும், குற்றவாளிகளும் சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருக்கின்றனர். கொலை என்பது தினசரி வாடிக்கையாகிவிட்டது. முதலமைச்சரின் கவனம் சட்டம் ஒழுங்கை நோக்கித் திரும்ப, இன்னும் எத்தனை உயிர்ப்பலிகள் வேண்டும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“