கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே தனியார் பள்ளியில் நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகியும், போலி பயிற்சியாளருமான சிவராமன் கடந்த சில நாட்களுக்கு முன்பு போலி என்.சி.சி பயிற்சி முகாம் நடத்தி இருக்கிறார். அதில் 19 மாணவிகள் கலந்து கொண்ட நிலையில், அதிலிருந்த ஒரு மாணவியை சிவராமன் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக தெரிகிறது.
இந்நிலையில், போலி என்.சி.சி. முகாம் நடத்தி, அங்கு வந்த 8-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த போலி பயிற்சியாளர் சிவராமன் கைது செய்யப்பட்டார். அவர் மீது போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், அவரது குற்றத்திற்கு உடந்தையாக இருந்த பள்ளி நிர்வாகிகள் ஆசிரியர்கள் உள்ளிட்ட 11 பேரை கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இதனிடையே, இந்த வழக்கில் சிவராமன் போலீசிடம் இருந்து தப்ப முயன்றபோது அவரது வலது கால் முறிந்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும், நேற்று முன்தினம் அவர் சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டார்.
அங்கு சிவராமன் தற்கொலைக்கு முயன்றதாகவும், அதனால் அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டதாக நேற்று காலை தகவல்கள் வெளியானது. இந்நிலையில், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிவராமனுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் இன்று வெள்ளிக்கிழமை காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதேபோல், காவேரிப்பட்டினம் நடேசா திருமண மண்டபம் அருகே மதுபோதையில் கீழே விழுந்ததில் சிவராமனின் தந்தை அசோக்குமார் (61) படுகாயம் அடைந்தார். தலையில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவரும் இன்று உயிரிழந்துள்ளார்.
சந்தேகம்
இந்த நிலையில், சிவராமன் மற்றும் அவரது தந்தை அசோக்குமாரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பரபரப்பை கிளப்பியுள்ளார் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை. மாணவி பாலியல் வழக்கில் யாரையோ காப்பாற்ற முயற்சியாக சிவராமன் மற்றும் அவரது தந்தை அசோக்குமாரின் மரணமா? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அண்ணாமலை தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், "கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே, தனியார் பள்ளியில் போலி என்சிசி முகாம் நடத்தி, பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான, நாம் தமிழர் கட்சி நிர்வாகி சிவராமன், காவல்துறை சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணைக்கு முன்பாகவே, எலி மருந்து சாப்பிட்டு, இன்று காலை உயிரிழந்துள்ளதாகக் கூறுகின்றனர். மேலும், அவரது தந்தை அசோக் குமார் என்பவரும், நேற்று இரவு சாலை விபத்தில் மரணமடைந்துள்ளதாகத் தெரிய வருகிறது.
இந்த இரண்டு மரணங்களுமே, சந்தேகத்திற்கிடமானவையாக இருக்கின்றன. சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணையில், சிவராமன் இந்த பாலியல் குற்றத்தில் தொடர்புடைய வேறு யாரேனும் முக்கியப் புள்ளிகளின் பெயர்களை வெளியில் கூறிவிடுவாரோ என்ற அச்சத்தில், சிவராமன் கொல்லப்பட்டிருக்கலாமோ என்ற கேள்வி எழுகிறது. உண்மையில் இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனரா அல்லது யாரையோ காப்பாற்றும் முயற்சியாக, தந்தை, மகன் இருவரின் மரணங்களும் நிகழ்ந்துள்ளனவா என்ற பலத்த சந்தேகம் எழுகிறது.
பள்ளி மாணவிகள் பாலியல் வன்முறை தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் புலனாய்வுக் குழு, இது தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தி, இந்த கேள்விகளுக்கான உண்மையான பதில்களை வெளிக்கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்." என்று அவர் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே, தனியார் பள்ளியில் போலி என்சிசி முகாம் நடத்தி, பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான, நாம் தமிழர் கட்சி நிர்வாகி சிவராமன், காவல்துறை சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணைக்கு முன்பாகவே, எலி மருந்து சாப்பிட்டு, இன்று காலை…
— K.Annamalai (@annamalai_k) August 23, 2024
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.