Tamil Nadu BJP chief Annamalai Tamil News: அடுத்தாண்டில் (2024) நடைபெற உள்ள மக்களவை தேர்தலை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை ராமேஸ்வரத்தில் இருந்து 'என் மண் என் மக்கள்' என்ற பெயரில் நடைபயணத்தை இன்று மாலை தொடங்க உள்ளார். இதையொட்டி, மாலை 5.45 மணிக்கு விழா நடைபெறும் திடலுக்கு வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அண்ணாமலையின் நடைபயணத்தை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
Advertisment
முன்னதாக, அங்கு நடைபெறும் பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் உரையாற்ற உள்ளார். அண்ணாமலையின் நடைபயணத் தொடக்க விழாவில் பங்கேற்க தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த நடைப்பயணம் 5 கட்டமாக திட்டமிடப்பட்டுள்ளது. அண்ணாமலை சுமார் 1,770 கி.மீட்டருக்கு நடைப்பயணத்தை மேற்கொள்ள உள்ளார்.
கிராமப்புறங்களில் எஞ்சிய தூரத்தை வாகனம் மூலமாகவும் கடந்து செல்ல உள்ளதாகவும், மாநிலத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய இந்த பாதயாத்திரையின் போது, திட்டமிடப்பட்டுள்ள 10 பெரிய பேரணிகளில் ஒவ்வொன்றிலும் குறைந்தது ஒரு மத்திய அமைச்சராவது உரையாற்றுவார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Advertisment
Advertisements
இதுதொடர்பாக அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசுகையில், "39 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் 5 கட்டங்களாக பிரச்சாரம் நடத்தப்படும், மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக ஜனவரி 11, 2024 அன்று பிரச்சாரத்தை முடிக்க திட்டமிட்டுள்ளோம். அமித் ஷாஜி வந்த பிறகு, ஜூலை 29 அன்று ராமேஸ்வரத்தில் பிரச்சாரம் தொடங்கும்.
பிரதமரின் சாதனைகளை எடுத்துரைத்து, மோடிஜி தொடர்ந்து மூன்றாவது முறையாக மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு மக்களின் ஆதரவைப் பெறுவோம். தொகுதி வாரியாக மக்களின் நலனுக்காக பா.ஜ.க என்ன செய்துள்ளது என்பதையும் விளக்குவோம். மோடி என்ன செய்தார் என்ற புத்தகத்தின் சுமார் ஒரு லட்சம் பிரதிகள் மக்களுக்கு விநியோகிக்கப்படும்." என்று அவர் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil