/indian-express-tamil/media/media_files/5dNV0QHGpNoNnvjbkWWw.jpg)
சென்னை தி. நகர் பகுதியில் தமிழக பா.ஜ.கவின் தலைமை அலுவலகமான கமலாலயம் உள்ளது. இங்கு இடப் பற்றாக்குறை காரணமாக புதிய அலுவலகம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்காக இடம் வாங்க 2014 முதல் முயற்சி செய்யப்பட்டு வந்தது. குறைந்தது 1 ஏக்கர் பரப்பளவில் அடுத்து 50 ஆண்டுகளுக்குப் பயன்படுத்தக் கூடிய வகையில் அலுவலகம் கட்ட பா.ஜ.க தலைமை அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
அதன்படி திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி அருகே சென்னீர்குப்பத்தில் தமிழக பா.ஜ.க தலைமை அலுவலகம் புதிதாக கட்டப்பட இருப்பதாக, அக்கட்சியின் மாநில துணை தலைவரும், புதிய அலுவலகங்கள் கட்டுவதற்கான குழுவின் தலைவருமான சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார். சென்னீர்குப்பத்தில் 1 ஏக்கர் பரப்பளவில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 1 ஏக்கர் அளவுக்கு சென்னை மாநகரில் இடம் கிடைக்காததால் சென்னீர்குப்பத்தில் புதிய அலுவலகம் கட்டப்படுகிறது.
விரைவில் பத்திரப்பதிவு செய்யப்பட உள்ளது. பத்திரப்பதிவு முடிந்ததும் கட்டுமான பணி தொடங்கும். நவீன வசதிகளுடன், தமிழக கட்டட பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் புதிய அலுவலகம் கட்டப்படும் என்று கூறினார்.
தொடர்ந்து வரும் ஜனவரி மாதம் 3 மாவட்டங்களில் பா.ஜ.க அலுவலகம் திறக்கப்படும். 5 மாவட்டங்களில் பணிகள் நடந்து வருகிறது. மீதமுள்ள 16 மாவட்டங்களில் இடம் வாங்க முயற்சி நடந்து வருகிறது என்றார்.
முன்னதாக, பா.ஜ.க தேசிய தலைமை நாடு முழுவதும் கட்சியை வலுப்படுத்த அனைத்து வருவாய் மாவட்டங்களிலும், சொந்தமாக அலுவலகம் அமைக்க வேண்டும் எனக் கூறியது. இதற்காக மாநில அளவில் குழு அமைக்கப்பட்டது. அதன்படி தமிழகத்திலும் இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அண்மையில் 10 புதிய பா.ஜ.க அலுவலக கட்டிடம் திறக்கப்பட்டது. பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி நட்டா திறந்து வைத்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.