அமெரிக்கப் பயணத்தை முடித்து, சென்னை திரும்பிய பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு விமான நிலையத்தில் அக்கட்சி தொண்டர்கள் வரவேற்பளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: "இந்தி திணிப்பை முதலில் காங்கிரஸ் தான் செய்தது. அந்த காலத்தில் திமுக 10 ஆண்டுகள் அவர்களுடன் கூட்டணியில் இருந்தது.
மத்திய அரசு மூன்று மொழியை படிக்க வேண்டும் என்று மக்களுக்கு அறிவுறுத்துகிறது. வருகின்ற அக்டோபர் 15ஆம் தேதி திமுக இளைஞரணி, மாணவரணி போராட்டம் என அறிவித்துள்ளனர். ஆனால் அதற்கு அவசியமில்லை. ஏன் என்றால், மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் இந்தி திணிப்பு செலுத்தவில்லை. நானும் அங்கே தான் படித்தேன், நான் அப்படி அனுபவப் படவில்லை. ஒருவேளை இந்தி திணிப்பு என்று மத்திய அரசு செய்தால், நிச்சயம் தமிழக பாஜக அதனை எதிர்க்கும்", என்றார்.
மேலும், "அனைத்து கட்சித் தலைவர்களும் குருபூஜைக்கு தமிழகத்திற்கு வர வேண்டும் என்பது பிரதமர் நரேந்திர மோடியின் ஆசை.
தமிழகத்தில் குருபூஜையை கொண்டாடும் கலாச்சாரம் மிகப்பெரிய அளவில் இருக்கிறது. குருபூஜை அன்று விழா போல, ஆயிரக்கணக்கான மக்களைக் கொண்டு காவடி எடுப்பர்.
வருகின்ற அக்டோபர் 30ஆம் தேதி பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை விழா மிகப்பெரிய அளவில் தமிழகத்தில் நடக்கவிருக்கிறது. இதில் பா.ஜ.க. பங்கேற்று, பிரதமரையும் அழைக்கிறது.
ஆனால், தற்போது வரை அக்டோபர் 30- ஆம் தேதி அன்று நடக்கவிருக்கும் பூஜைக்கு பிரதமர் தமிழகம் வருகின்ற செய்தி எதுவும் இல்லை. பிரதமர் வருகை குறித்து பிரதமரின் அலுவலகத்தில் இருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதுவும் இதுவரை வரவில்லை" என்று கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil