கன்னியாகுமரி விவேகானந்தர் ஜெயந்திவிழா பள்ளி–கல்லுாரி மாணவர்கள்–இளைஞர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் தமிழக பாஜக தலைவர் கு. அண்ணாமலை
கன்னியாகுமரியில் விவேகானந்தர் நல்லோர் வட்டம் சார்பில் விவேகானந்த கேந்திராவில் நடைபெற்ற விவேகானந்தர் ஜெயந்திவிழா பள்ளி–கல்லுாரி மாணவர்கள்–இளைஞர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், தமிழ்நாடு பாரதிய ஜனதா தலைவர் கு. அண்ணாமலை, மக்களவை முன்னாள் எம்.பி.யும் அமைச்சருமான பொன். இராதாகிருஷ்ணன், பாஜக அமைப்பு செயலாளர் கேசவவிநாயகம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Advertisment
அப்போது பேசிய அண்ணாமலை, “ 100 இளைஞர்களை கொடுங்கள் என்று விவேகானந்தர் சொன்னார். 125 ஆண்டுகளுக்கு பின்னர் 1200 பேரை இங்கு அழைத்து வந்துள்ளோம். இந்த நிகழ்ச்சி மூலம் தீபத்துக்கு திரி ஏற்றியுள்ளோம். விவேகானந்தர் கனவை நாம் நிறைவேற்ற வேண்டும். 1983–ல் நாம் உலககோப்பையை வெல்வோம் என்று கபில்தேவ் சொன்ன போது சிரித்தார்கள்.
அது போல வென்றோம். அது போன்ற துணிவு வேண்டும். இன்னும் 15 ஆண்டுகளில் இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் பொருளாதார போட்டி வந்துவிடும். 2047 உலகின் விஸ்வரூப நாடாக இந்தியா மாறும். வீடியோ பார்ப்பதில் உலகில் நாம் ஐந்தாவது நாடாக இருக்கிறோம். பிரேசில், இந்தோனேசியா, தென் கொரியா, மெக்சிகோ ஆகியவை முதல் நான்கு இடத்தில் இருந்தது.
கடந்த மாதம் ஒரு இந்தியன் ஒரு நாளுக்கு சராசரியாக 21 மணி நேரம் வாட்ஸ்ஆப் பயன்படுத்தியுள்ளார். 70 கோடி இந்தியர்கள் இண்டர்நெட் பயன்படுத்துகிறார்கள். வாட்ஸ்அப்பில் மெசேஜ் வராவிட்டாலும் அதை திறந்து பார்ப்பதில் ஒரு ஆனந்தம். வாரிசு படத்தக்கு டிரெய்லர் வந்து ஒரு மணி நேரத்தில் ஐந்து மில்லியன் பேர் அதை பார்த்துள்ளனர். பாதி இஞ்ஜினியர்கள் வேலை இல்லாமல் சுத்திகிட்டு இருக்கிறார்கள்.
யாரோ சொல்வதை படிக்காதீர்கள். உங்களுக்கு விரும்பியதை படியுங்கள். நீங்கள் வாழும் வாழ்க்கை பிரஷர் மிகுந்த வாழ்க்கை. இலக்கை அடைய துணிவு வேண்டும். எம்.ஆர்.காந்தி அரசியலில் 50 ஆண்டுகள். 75 வயதில் வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். அவர் பணியை செய்துகொண்டிருந்தார். மக்கள் தயாராகி ஓட்டுப்போட்டார்கள் எம்.எல்.ஏ ஆகிவிட்டார். மற்றொருவர் பொன். இராதாகிருஷ்ணன்.
மாணவர்கள்–இளைஞர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி
பிரதமருடன் அமைச்சராக இருந்தவர் இப்போது அமைச்சராக இல்லாமல் இருந்தாலும் நம்முடன் சாதாரண இருக்கையில் அமர்ந்து இருக்கிறார். 1995-ல் அணுகுண்டு வெடிக்க இந்தியா ஆசை பட்ட போது அமெரிக்கா மிரட்டியதால் நரசிம்மராவ் அதை கைவிட்டார். மூன்று ஆண்டுகளுக்கு பிறகு அப்துல்கலாம் மூலம் 3 அணுகுண்டை வெடித்தோம். அதற்கு வாஜ்பாயிடம் துணிவும், சமயோஜிதமான புத்தியும் இருந்தது.
அமெரிக்காவுக்கே தெரிந்தது. பிரதமர் மோடி 2016 நவம்பர் 8-ம் தேதி பணமதிப்பிழப்பு விஷயத்தை சொன்னார். அதன்பிறகு டிஜிட்டல் பணவர்த்தனையில் இந்தியா உலகில் முதல் நாடாக உள்ளது.
பண மதிப்பிழப்புக்கு பிறகு 74 பில்லியன் முறை இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனை செய்திருக்கிறோம். மாதம் 10 லட்சம் கோடி பணபரிவர்த்தனை செய்திருக்கிறோம்.
விவேகானந்தரை கெட்டியாக பிடித்துக்கொள்ளுங்கள். விவேகானந்தருக்கு குரு ராமகிருஷ்ணர் இருந்ததுபோன்று நீங்களும் ஒரு குருவை கண்டுபிடியுங்கள். விவேகானந்தர் ராமகிருஷ்ணரை சோதனை செய்தார். அதுபோல ராமகிருஷ்ணரும் விவேகானந்தரை பரீட்சித்தார். குரு யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.
குரு இல்லாமல் வாழ்வது கடலை எதிர்த்து நீச்சலடிப்பது போன்றது. குருவோடு வாழ்வது கடலுடன் சேர்ந்து நீச்சலடிப்பதுபோன்றது. விவேகானந்தருக்கும் ராமகிருஷ்ணருக்கும் 4 ஆண்டுகள்தான் தொடர்பு. உங்கள் வாழ்க்கை நேராக முன்மாதிரியாக இருக்க வேண்டும்” என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/