இந்துக்களுக்கு எதிராக வெறுப்பை பரப்பும் விதமாக பேசியதாக தி.மு.க எம்.பி ஆ. ராசா மீது மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் புகார் அளித்துள்ளதாகவும், ஆ. ராசா வரும் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்க வேண்டும் என்றும் தமிழக பா.ஜ.க மூத்த நிர்வாகி ஒருவர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
தமிழ்நாடு பா.ஜ.க தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் பிரிவு மாநிலத் தலைவர் சி.டி.ஆர் நிர்மல் குமார், ஆ. ராசாவின் நெறிமுறையற்ற செயலுக்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் புகார் அளித்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார்.
தி.மு.க துணைப் பொதுச் செயலாளரான ஆ. ராசா, அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, இந்து மதத்தில் இருக்கும் வரை நீங்கள் சூத்திரர்கள் என்று வர்ணாசிரம சனாதனம் குறித்து கூறியது கருத்து சர்ச்சையை கிளப்பியது. இதற்கு, மற்றவர்களை திருப்திப்படுத்த ஒரு சமூகத்தின் மீது வெறுப்புணர்வைத் பரப்புவதாக குற்றம் சாட்டி பா.ஜ.க-வினர் கொந்தளித்து வருகின்றனர்.
திராவிடர் கழக நிகழ்ச்சியில் பேசிய ஆ. ராசா, மனுஸ்மிருதியில் சூத்திரர்கள் அவமதிக்கப்பட்டதாகவும், சமத்துவம், கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் கோவில்களில் நுழைவு ஆகியவை மறுக்கப்பட்டுள்ளதாகவும் மனுஸ்மிருதியில் சூத்திரர்களைப் பற்றி குறிப்பிட்டுள்ளதை சுட்டிக் காட்டிப் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது: “இந்துமதத்தின் மனுஸ்மிருதிப்படி, நீ இந்துவாக இருக்கும் வரை நீ சூத்திரன். நீ சூத்திரனாக இருக்கும் வரை நீ ஒரு விபச்சாரியின் மகன். நீ இந்துவாக இருக்கும் வரை நீ பஞ்சமன் (தலித்). இந்துவாக இருக்கும் வரை நீ தீண்டத்தகாதவன்” என்று ஆ. ராசா கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"