சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றிட மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜனவரி 12) அரசினர் தனித்தீர்மானம் கொண்டார். இதையடுத்து அனைத்து கட்சி ஆதரவோடும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. முன்னதாக பேசிய ஸ்டாலின், இத்திட்டம் அரசியல் காரணங்களால் நிறைவேற்றப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் நிறைவேறினால் 50 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று பேசினார். தொடர்ந்து. அரசியல் காரணமாக சேது சமுத்திர திட்டத்திற்கு பா.ஜ.க முட்டுக்கட்டை போட்டது என்றும் கூறினார். அதன் பின் தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்றது.
அப்போது பேசிய பா.ஜ.க எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன், "அரசினர் தனித்தீர்மானத்தின் மீது ஆதரவா இல்லையா என்று மட்டுமே பேச வேண்டும். உறுப்பினர்கள் ராமாயணத்தை பற்றி எல்லாம் பேசி வருகிறார்கள். கட்டுக்கதை என்று எல்லாம் கூறுகிறார்கள். உறுப்பினர்கள் விமர்சித்து பேசியதை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று சபாநாயகர் அப்பாவு மற்றும் ஸ்டாலினிடம் கேட்டுக்கொண்டார். அப்போது ஸ்டாலின், மதத்தையோ, தெய்வத்தையோ விமர்சித்து யாரும் பேசவில்லை" என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய நாகேந்திரன், சேது திட்டம் வருமேயானால் எங்களை விட மகிழ்ச்சியடைபவர்கள் யாரும் இல்லை. ராமர் பாலத்தை சேதப்படுத்தாமல் திட்டத்தை நிறைவேற்றினால் ஆதரிக்கிறோம் என்று கூறினார். தொடர்ந்து அனைத்து கட்சிகளும் ஆதரவு அளித்தபின், தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.
சேது சமுத்திரத் திட்டம் என்றால் என்ன?
சேது சமுத்திரத் திட்டம் ராமர் பாலத்துடன் தொடர்புடையது. சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் ராமர் பலம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, 'இந்த பாலம் இருந்ததற்கான உறுதியான சான்றுகள் இல்லை' என்று மத்திய அரசு கூறியிருந்தது. ஹரியானா எம்.பி கார்த்திகேய ஷர்மா "ராமர் பாலம் குறித்த பல ஆண்டுகளாக ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆய்வின் முடிவு என்ன சொல்கிறது?" என்று கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் பதிலளித்தார்.
சுமார் 18,000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரான வரலாறு கொண்டது இந்த ராமர் பாலம் என்பதால் இது குறித்து ஒரு இறுதி முடிவுக்கு எங்களால் வர இயலவில்லை. ராமேஸ்வரத்திற்கும், தலை மன்னாருக்கும் இடையே 56 கி.மீ இருக்கிறது. இவ்வளவு தொலைவில் ஏற்கெனவே கட்டப்பட்டதாக நம்பப்படும் பாலத்தின் சில எச்சங்கள் மட்டுமே தற்போது மீதமிருக்கிறது. மிகச் சரியாக சொல்வதெனில் இங்குள்ள கட்டுமானம் எந்த மாதிரியான கட்டுமானம் என்பது தெரியவில்லை. எனவே இங்கு இருந்தது ராமர் பாலம்தான் என்பதை சரியாக கூறமுடியாது" என்று விளக்கமளித்திருந்தார்.
மேலும், ராமர் பாலம் ஆய்வு காரணமாகவே 'சேது சமுத்திர திட்டம்' கிடப்பில் போடப்பட்டதாக எதிர்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். கடல் போக்குவரத்து பயண தூரம் அதிகமாகிறது என்றும் கூறிவருகின்றனர். இந்தியாவின் ராமேஸ்வரத்திற்கும், இலங்கையின் தலை மன்னார் பகுதிக்கும் இடையே சுமார் 56 கி.மீ தொலைவு வெறும் கடல் பரப்பு மட்டுமே இருக்கிறது. இந்த கடல் பரப்பில் ஒரு குறிப்பிட்ட தொலைவுக்கு சுண்ணாம்பு பாறைகள் இருக்கின்றன.
இந்த பாறைகள் தொடர்ச்சியாக இல்லாமல் சிறிது தூரத்திற்கு தொடர்ச்சியாகவும், சிறிது தூரத்திற்கு இடைவெளி விட்டும் இருக்கிறது. இந்த பாறைகளை தான் பா.ஜ,கவினர் ராமர் பாலம் என்று அடையாளப்படுத்துகின்றனர். இந்த 56 கி.மீ தொலைவில் உள்ள சுண்ணாம்பு கற்களை அகற்றி கடலை ஆழப்படுத்துவதன் மூலம் இந்த வழியில் சரக்கு கப்பல் போக்குவரத்தை தொடங்க முடியும். இதுதான் சேது சமுத்திர திட்டமாகும்.
இந்த திட்டம் வெற்றிகரமாக முடிந்தால் தூத்துக்குடி, சென்னை, விசாகப்பட்டினம் என வங்க கடல் ஓரத்தில் இருக்கும் துறைமுகங்கள் சிறப்பான வளர்ச்சி பெறும். தற்போது வரை அரபு நாடுகள் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து வரும் கப்பல்கள் சென்னைக்கு வரவேண்டும் எனில் இலங்கையை சுற்றிக்கொண்டுதான் வருகிறது. ஆனால் 'சேது சமுத்திர' திட்டம் நிறைவு பெற்றால் இப்படி இலங்கையை சுற்ற வேண்டிய அவசியமில்லை. பயண நேரமும் சுமார் 30 மணி நேரம் குறையும். எரிபொருளும் மிச்சமாகும். இந்த பாதையை சர்வதேச அளவில் பயன்படுத்தும்போது இந்தியாவின் அந்நிய செலாவணியும் அதிகரிக்கும் என்று கூறுகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/