உளவுத்துறை அறிக்கையை அடுத்து தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியான அண்ணாமலை தமிழக பா.ஜ.க-வின் தலைவராக பரபரப்பாக செயல்பட்டு வருகிறார். மாநிலத்தில் ஆளும் கட்சியைக் கடுமையாக விமர்சித்து வரும் அண்ணாமலையின் சமீபத்திய பத்திரிகையாளர்கள் சந்திப்பு சர்ச்சைகளும் வாங்குவாதங்களும் நிறைந்ததாக இருந்தது.
தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு ஏற்கெனவே மத்திய அரசின் ஒய் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வந்த நிலையில், உளவுத்துறை அளித்த அறிக்கையைத் தொடர்ந்து, அண்ணாமலைக்கு பாதுகாப்பை அதிகரித்து இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
மத அடிப்படைவாதிகள் மற்றும் மாவோயிஸ்ட்களிடம் இருந்து கொலை மிரட்டல் கடிதங்கள் வந்ததைத் தொடர்ந்து தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படும் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அண்ணாமலைக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்குவதன் மூலம் அவரைப் பாதுகாக்க 33 கமாண்டோக்கள் சுழற்சி முறையில் 24 மணிநேரமும் பாதுகாப்பு அளிப்பார்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”