கரூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை கேலி செய்யும் விதமாக பாஜகவினர் போஸ்டர் ஒட்டி இருந்தனர். அந்த போஸ்டரில், "திருடர் குல திலகமே. ஊழலின் மறு உருவமே. அணிலுக்கு அடிச்ச ஜாக்பாட். 5,000 கோடிக்கு அதிபதியாக்கிய பிஜிஆர் ஊழல்" என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது.
Advertisment
மேலும் அந்த போஸ்டரில், தராசு தட்டில் ஒரு பக்கம் பணக்கட்டுகளும், மறுபக்கம் அமைச்சர் செந்தில் பாலாஜி அமர்ந்திருப்பது போல் காட்சிப்படுத்தி இருந்தது. செந்தில் பாலாஜி பணத்தை விட பலமானவர் என்பதை போல், தராசு தட்டு அமைச்சர் பக்கத்தில் சாய்ந்திருப்பது போன்று சித்தரித்து போஸ்டர்கள் ஒட்டி இருந்தனர். இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தநிலையில், கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மாநகரின் பல்வேறு இடங்களில் பாஜகவை விமர்சித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அந்த போஸ்டர்களில், "நோட்டா கிட்ட வச்சுக்கோ. எங்க ஏட்டா கிட்ட வேண்டாம்…" என்ற வாசகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. கோவை ரயில் நிலையம், உப்பிலிபாளையம் மேம்பாலம், கோட்டைமேடு பகுதிகளில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
எண்ணூர் அனல் மின் நிலைய திட்ட விரிவாக்கத்திற்காக, தமிழ்நாடு மின்சார வாரியம் பிஜிஆர் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தது. இந்த ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்ததாக பாஜக தலைவர் அண்ணாமலை, தற்போதைய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக குற்றஞ்சாட்டினார். இது தொடர்பாக இருவருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன் ட்விட்டரில் கருத்து மோதல் ஏற்பட்டது. இந்நிலையில் இதை குறிப்பிட்டு கரூரில் செந்தில் பாலாஜிக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.
செய்தி: பி.ரஹ்மான், கோவை
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil