தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று வெள்ளிக்கிழமை தொடங்கியது. சட்டசபையில் இன்று கூடிய முதல் நாள் கூட்டத்தில் 2025-2026 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.
அப்போது அவர் மகளிருக்கான திட்டங்கள் குறித்து அறிவித்ததாவது:-
மகளிர் நலனுக்காக இந்த அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. முதல்வர் கையெழுத்திட்ட முதல் கோப்பு, விடியல் பயண திட்டம். இத்திட்டத்தின் மூலம் பெண்கள் பயணம் மேற்கொள்வது 40ல் இருந்து 60 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. 642 கோடி முறை பெண்கள் பயணம் செய்துள்ளனர்.
இந்த திட்டத்தால் பெண்கள் 888 ரூபாய் சேமிக்க முடிகிறது. இத்திட்டத்திற்காக மானிய தொகை 3,600 கோடி ரூபாயை 2025-26ஆம் ஆண்டில் வரவு செலவு திட்ட மதிப்பீடுகளில் அரசு ஒதுக்கியுள்ளது.
மகளிர் நலத் திட்டங்களுக்கெல்லாம் மகுடம் வைத்தது போல் அறிவிக்கப்பட்ட 'கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின்' மூலம் ஒவ்வொரு மாதமும் ஒரு கோடியே பதினைந்து லட்சம் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் அவர்களுடைய வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தினால் பயன்பெறும் இல்லத்தரசிகளுக்கு, மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் என்பது, அவர்களுடைய அன்றாட வாழ்க்கைக்குப் பேருதவியாக இருப்பது மட்டுமன்றி, அவர்கள் கணிசமாக சேமிக்கவும் வழிவகுக்கிறது. இதுவரை, மகளிர் உரிமைத்தொகை பெற்றிடாத தகுதிவாய்ந்த இல்லத்தரசிகள், இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்திட உரிய வாய்ப்புகள் விரைவில் வழங்கப்படும். மகளிர் நலன் காக்கும் இத்திட்டத்திற்காக இந்த வரவு-செலவுத் திட்டத்தில் 13,807 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மகளிர் விடியல் பயணம் திட்டத்திற்கு ரூ.3,600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் தற்போது 4 லட்சத்துக்கு 6 ஆயிரம் பெண்கள் பயன்பெறுகின்றனர். உயர்க்கல்விக்கு செல்லும் மாணவிகளின் எண்ணிக்கை 19 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. வரும் நிதியாண்டில் இத்திட்டத்தை செயல்படுத்த 420 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
மகளிர் சுய உதவிக்குழு திட்டத்தில் புதிதாக 10,000 சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்படும். மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் ரூ.37,000 கோடி வங்கிக் கடன் வழங்கிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
புதிதாக, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் ரூ.77 கோடியில் மேலும் 10 இடங்களில் 800 பணிபுரியும் பெண்கள் பயனடையும் வகையில் தோழி விடுதிகள் அமைக்கப்படும். மாவட்டம்தோறும் இவ்வகை விடுதிகள் அமைக்கும் இலக்கை நோக்கி அரசு செல்கிறது. சென்னை, கோவை, மதுரையில் தலா 1,000 மாணவிகள் பயன்பெறும் வகையில் ரூ.275 கோடியில் மாணவியர் விடுதிகள் அமைக்கப்படும்.
மூன்றாம் பாலினத்தவரின் சமூக மேம்பாட்டை உறுதி செய்ய, உயர்கல்வி செல்லும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு மாதம் ரூ. 1000 வழங்கப்படும். ஊர்க்காவல் படையில் மூன்றாம் பாலினத்தவர்களை இணைக்க நடவடிக்கை.
இவ்வாறு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.