தமிழகம் முழுவதும் 9 இடங்களில் தொழில்பேட்டைகள் அமைக்கப்படும் என தமிழக பட்ஜெட்டில் அறிவித்திருக்கும் நிலையில், அதில் கோவை இடம்பெறாதது வருத்தம் அளிப்பதாக கோவை தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தமிழக சட்டமன்றத்தில் நிதிநிலை அறிக்கையினை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்தார். இதில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கு என ஏராளமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இது தொழில் முனைவோர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அதே வேளையில் கோவையில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் முனைவோருக்கு தொழில்பேட்டைகள் அமைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு பூர்த்தி செய்யப்படாதது வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. நிதி நிலை அறிக்கையில் தமிழகத்தில் 366 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 9 இடங்களில் தொழில்பேட்டைகள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், அந்த பட்டியலில் கோவை இடம்பெறவில்லை.
நிதிநிலை அறிக்கை தொடர்பாக பேசிய கோவை கொடிசியா அமைப்பின் தலைவர் கார்த்திகேயன்,
தமிழக அரசு இந்த நிதி நிலை அறிக்கையில் மோட்டார் பம்ஃப் உற்பத்தியை மேம்டுத்த நடவடிக்கைகள் எடுத்துள்ளது வரவேற்கதக்கது எனவும், சூலூரில் 100 ஏக்கர், பல்லடத்தில் 100 ஏக்கர் என செமி கண்டன்டர் துறைக்கான பூங்கா அமைக்க இருப்பதும், புதிய துறையான செமி கன்டெக்டர்துறை கோவையில் நுழைவதற்கு அரசு வாய்ப்பு ஏற்படுத்தி இருக்கிறது என்றார்.
இந்த நிதி நிலை அறிக்கை உற்பத்தி துறைக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளது எனவும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கு ரூ.10 ஆயிரத்து 980 கோடி ஒதுக்கீடு செய்து இருக்கின்றனர் எனவும், 9 தொழில்பேட்டைகளில் கோவை இடம் பெறவில்லை என்பது சற்று வருத்தம் என்றார்.
கோவைக்கு ஒருசில தொழில் பேட்டைகள் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என இவ்வாறு தெரிவித்தார்
தமிழ்நாடு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் முனைவோர் சங்கத்தின்(டாக்ட்) தலைவர் ஜேம்ஸ் கூறியதாவது.
9 மாவட்டங்களில் தொழில்பேட்டைகள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி. ஆனால் கோவைக்கு தொழில் பேட்டைகள் குறித்த எந்த அறிவிப்பும் இல்லாதது சற்று வருத்தம் எனவும் தெரிவித்தார். குறுந்தொழில்களுக்கு என தனியாக அறிவிப்பு இல்லாதது வருத்தம். நிதி நிலை அறிக்கையில் இவற்றை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் இருக்கக்கூடிய அறிவிப்புகள் குறுந்தொழில்களுக்கு போதுமானதாக இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதேபோல சோலார் மின் உற்பத்திக்கு மானியம், நிலை கட்டணம் ரத்து, மூலதன மானியம் வழங்க நடவடிக்கை என்ற குறு , சிறு மற்றும் நடுத்தரத் தொழில் முனைவோர் எதிர்பார்த்த பல்வேறு அம்சங்கள் நிறைவேற்றப்பட வில்லை எனவும் கோவை தொழில்முனைவோர் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி: பி.ரஹ்மான்