சென்னை அருகே 2,000 ஏக்கர் பரப்பளவில் புதிய நகரம்!
நாட்டிலேயே அதிக நகரமயமாக்கல் சவாலை தமிழ்நாடு சந்தித்து வருகிறது. மக்கள் தொகையை சமாளிக்கும் நோக்கில் சென்னைக்கு அருகே 2,000 ஏக்கர் பரப்பளவில் புதிய நகரம் உருவாக்கப்படும். நகர்ப்புற சதுக்கங்கள், பூங்காக்கள் போன்ற கட்டமைப்பு வசதிகள் புதிய நகரில் அமையும். சென்னையை புதிய நகருடன் இணைத்திட போக்குவரத்து, மெட்ரோ வழித்தட நீட்டிப்பு ஆகியவை மேற்கொள்ளப்படும். இதற்கேற்ற குடிநீர், சாலை, போக்குவரத்து உள்ளிட்ட வசதிகளை உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்கின்றன. எனினும் புதிய நகரங்கள் அமைக்கும் தேவை உள்ளது
சென்னை வேளச்சேரியில் புதிய மேம்பாலம்:
சென்னை வேளச்சேரி பிரதான சாலையில் இருந்து குருநானக் கல்லூரி வரை 3 கிலோமீட்டர் தூரத்திற்கு ரூ.310 கோடி செலவில் புதிய மேம்பாலம் அமைக்கப்படும்.
சென்னையின் அனைத்து பகுதிகளுக்கும் சமமான குடிநீர்:
சமச்சீரான குடிநீர் விநியோகத்திற்காக சென்னை மாநகரப்பகுதியில் முதன்மை சுற்றுக்குழாய் திட்டம் ரூ.2423 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு செயல்படுத்தப்படும். இதன்மூலம் ஒரு பகுதியில் உபரியாக உள்ள தண்ணீரை, மற்றொரு பகுதிக்கு கொண்டு செல்லப்படும். மேலும், ரூ.602 கோடியில் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும். சென்னை பெருநகரப் பகுதிகளில் மழைநீர் உறிஞ்சும் 7 மழைநீர் உறிஞ்சு பல்லுயிர் பூங்கா அமைக்கப்படும்.
சென்னையில் அறிவியல் மையம்!
1,308 மாணவர்கள் பயன்பெறும் வகையில் ரூ.152 கோடி மதிப்பில் 10 புதிய அரசுத் தொழிற்பயிற்சி நிலையங்கள் அமைக்கப்படும். சென்னையில் ரூ.100 கோடி மதிப்பில் அறிவியல் மையம். சென்னை, கோவையில் ரூ.100 கோடி செலவில் அடிப்படை அறிவியல் மற்றும் கணித ஆராய்ச்சிப் படிப்புகள் மையம் அமைக்கப்படும்
தாம்பரத்தில் திடக்கழிவு மின்சாரம் தயாரிக்கும் ஆலை:
திடக்கழிவில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் ஆலை தாம்பரத்தில் நிறுவப்படும். அடையாறு நிதி சீரமைப்பு பணியில் சைதாப்பேட்டை முதல் திரு.வி.க பாலம் பணிகள் முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ளப்படும் என்று தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.