தமிழ்நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதில் தி.மு.க தலைமையிலான கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்குப் பிறகு தி.மு.க ஆட்சி பொறுப்பேற்றது. மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்றார். அவருடன் 33 அமைச்சர்கள் பதவியேற்றனர். அதைத் தொடர்ந்து போக்குவரத்து, பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை உள்ளிட்ட 4 துறை அமைச்சர்களுக்கான இலாகா மாற்றம் செய்யப்பட்டது.
அதைத் தொடர்ந்து சமீபத்தில் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ, முதல்வர் ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் விளையாட்டுத் துறை அமைச்சராக பதவியேற்றார். இதைத் தொடர்ந்து தமிழக அமைச்சர்கள் எண்ணிக்கை 34-ஆக உயர்ந்தது. அப்போது சிறிய அளவில் இலாகா மாற்றம் நடைபெற்றது.
இந்நிலையில், கடந்த மே 7-ம் தேதியோடு தி.மு.க அரசு ஆட்சிப் பொறுப்பேற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து மீண்டும் அமைச்சரவை மாற்றம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அந்த வகையில் மன்னார்குடி எம்.எல்.ஏ டி.ஆர்.பி. ராஜா அமைச்சராக இன்று(மே 11) பதவியேற்கிறார். இவருக்கான இலாகா இன்னும் அறிவிக்கப்பட வில்லை. பால் வளத்துறை அமைச்சராக இருந்த நாசர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், நிதியமைச்சராக உள்ள பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் அத்துறையில் இருந்து நீக்கப்பட்டு தொழில்நுட்ப வளர்ச்சி துறை (ஐ.டி) வழங்கப்பட உள்ளதாக யூகங்கள், தகவல்கள் வெளியாகி உள்ளன. தங்கம் தென்னரசுக்கு நிதித்துறை வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நிதியமைச்சராக உள்ள பழனிவேல் தியாகராஜனை இலாகா மாற்றம் செய்யக் கூடாது என தெரிவித்து அவருக்கு ஆதரவாக #I_StandWithPTR என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டு செய்யப்பட்டு வருகிறது.
அண்மையில் உதயநிதி, சபரீசன் இருவரும் ஊழல் செய்யதாக கூறி பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக ஓர் ஆடியோவை பா.ஜ,க தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தி.மு.கவிலும் சலசலப்பை ஏற்படுத்தியது.
பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் இதற்கு மறுப்பு தெரிவித்தார். பொய்யான ஆடியோ என விளக்கம் அளித்தார். இந்நிலையில், அவரது இலாகா மாற்றப்படுவதாக தகவல்கள் கூறப்படுகிறது. நிதித்துறையில் சீர் திருத்தங்களை செய்தும், துறை ரீதியாக குறைகள் இல்லாத நிலையில் அவரை நிதித்துறையில் இருந்து மாற்றக்கூடாது என ட்விட்டரில் அவருக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“