Tamilnadu Voters List: நாடாளுமன்ற மக்களவையின் பதவிக்காலம் ஜூன் மாதம் 16-ந் தேதி முடிவடைகிறது. 18-வது நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வருகிற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெற உள்ளது. இதையொட்டி தேசிய, மாநில கட்சிகள் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை தற்போதே தொடங்கி உள்ளன. மேலும் நாடாளுமன்ற தேர்தலுக்கான ஆயத்த பணிகளில் இந்திய தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் ஒருங்கிணைந்த இறுதி வாக்காளர் பட்டியலை சென்னை தலைமை செயலகத்தில் இருந்து தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாகு இன்று வெளியிட்டார். அதன்படி, தமிழ்நாட்டில் மொத்தம் 6.18 கோடி வாக்காளர்கள் உள்ளனர். 3.14 கோடி பெண்கள், 3.03 கோடி ஆண்கள் மற்றும் 8,294 மூன்றாம் பாலின வாக்காளர்கள் உள்ளனர். இதனைத் தொடர்ந்து இறுதி வாக்காளர் பட்டியலை ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் வெளியிட்டனர்.
தமிழ்நாட்டில் அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதியாக சோழிங்கநல்லூர் ( 6,60,419 வாக்காளர்கள்) முதல் இடத்திலும், கோவையில் உள்ள கவுண்டம்பாளையம் தொகுதி (4,62,612 வாக்காளர்கள்) 2-வது இடத்திலும் உள்ளன. குறைந்தபட்ச வாக்காளர்கள் உள்ள தொகுதியாக நாகப்பட்டிணம் மாவட்டம் கீழ்வேளூர் தொகுதி உள்ளது. அந்த தொகுதியில் 1.72 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.
தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், "கடந்த அக்டோபர் மாதம் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலை விட தற்போது கூடுதலாக 7 லட்சம் வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வாக்காளர் பட்டியலில் 13.61 லட்சம் பேர் புதிதாக பெயர் சேர்த்துள்ளனர். மேலும், 6.02 லட்சம் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. 3.23 லட்சம் வாக்களர் திருத்தம் செய்துள்ளனர்." என்று கூறினார்.
தமிழ்நாடு வாக்காளர்கள் எண்ணிக்கை பின்வருமாறு:-
மொத்த வாக்காளர்கள்: 6,18,90,034
பெண் வாக்காளர்கள்: 3,14,85,724
ஆண் வாக்காளர்கள்: 3,03,96,330
3-ம் பாலின வாக்காளர்கள்: 8,294
மாற்றுத்திறனாளி வாக்காளர்கள்: 4,32,805
18-19 வயது வாக்காளர்கள்: 5,26,205.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“