சென்னை:
வண்ணாரப்பேட்டை- விம்கோ நகர் மெட்ரோ ரெயில் திட்டம், காவிரி குண்டாறு இணைப்பு திட்டம், கல்லணை சீரமைப்பு திட்டம், பவானி கால்வாய் சீரமைப்பு திட்டம், நெய்வேலி என்.எல்.சி. 1,000 மெகாவாட் சூரிய மின்சக்தி திட்டம், ராமநாதபுரம்- தூத்துக்குடி கியாஸ் குழாய் திட்டம் ஆகிய 5 திட்டங்களை தொடங்கி வைப்பது தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வரும் 19-ந் தேதி பிரதமரை சந்திக்க உள்ளார்.
அதிமுக சார்பில் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி அதன்பிறகு டெல்லிக்கு செல்லும் முதல் பயணம் இதுவாகும். இந்த சந்திப்பில், சொத்துக்குவிப்பு வழக்கில், சிறை சென்ற சசிகலா வரும் ஜனவரி 27-ந் தேதி விடுதலையாக உள்ள நிலையில், அதற்கு முன் தமிழகத்தின் அரசியல் நிலைமை குறித்து ஆலோசனை செய்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இம்மாத இறுதியில், நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், தமிழகத்தில் தொடங்கவுள்ள 5 திட்டங்களையும், பிரதமர் வீடியோ கான்பிரஸிங் மூலம் திறந்து வைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில், அதிமுக மற்றும் பாஜக கட்சிகள் கூட்டணி சேர்ந்துள்ளதால், இந்த சந்திப்பில், தேர்தல் கூட்டணியைப் பற்றி ஆலோசனை நடத்தலாம் எனவும் கூறப்படுகிறது.
கட்சி தொடங்கும் அறிவிப்பை ரஜினிகாந்த வாபஸ் பெற்றதால், அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ள பாஜக, அதிமுக கூட்டணியில் எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு, ஒப்புதல் அளித்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் தேவர் வாக்கு எண்ணிக்கையை பலப்படுத்தவும், திமுகவுடன் போட்டி போடவும், சிறையில் இருந்து வெளிவரும் வி.கே.சசிகலாவை மீண்டும் கட்சிக்குள் இணைக்குமாறு ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தவாதி குருமூர்த்தி அதிமுகவுக்கு பரிந்துரை செய்துள்ளார்.
ஆனால் குருமூர்த்தியின் இந்த யோசனை அவருடையதா? அல்லது பாஜக தலைமையின் முடிவா என்பது குறித்து பெரும் சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால் சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்க்கலாமா வேண்டாமா என்பது உட்கட்சி விவகாரம். எங்களுக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை என்று தெரிவித்துள்ள பா.ஜ.க மாநில பொதுச் செயலாளர் ஆர்.சீனிவாசன் திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என்பதே எங்களது இலக்கு என்று தெரிவித்துள்ளார். "சசிகலாவின் 3% வாக்குகளைப் கணக்கிட்டு அவரை கட்சியில் சேர்த்தால், அவரது ஊழல் பின்னணி காரணமாக 15% வாக்குகள் பரிபோகும் என்பதால், அவரை கட்சியில் சேர்க்க வாப்பில்லை என்று அதிமுக தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சசிகலா விடுதலையாகும் அன்று, முதல்வர் பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் ஜெயலலிதா நினைவிடம் திறக்கப்படவுள்ளது குறிப்படத்தக்கது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
t.me/ietamil"