குட்காவை தொடர்ந்து நெடுஞ்சாலை ஊழல்: அடுத்தடுத்து சிபிஐ பிடியில் சிக்கும் எடப்பாடி அரசு

TN CM Edappadi K Palaniswami: குட்கா ஊழல் வழக்கில் உலுக்கி வரும் சிபிஐ, நெடுஞ்சாலை ஊழல் வழக்கிலும் அதிரடி காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிரான சிபிஐ நெருக்கடி அதிகரிக்க ஆரம்பித்திருக்கிறது. ஏற்கனவே குட்கா ஊழல் வழக்கில் பலரையும் உலுக்கி வரும் சிபிஐ, நெடுஞ்சாலை ஊழல் வழக்கிலும் அதிரடி காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக நெடுஞ்சாலைத்துறை டெண்டரில் ரூ.4 ஆயிரத்து 800 கோடி அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தக்கோரி தி.மு.க. அமைப்பு செயலாளரும், எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தனர். இதற்கிடையே, முதல்வர் கையில் இருக்கும் லஞ்ச ஒழிப்பு துறை இதனை முறையாக விசாரித்து இருக்காது என மனுதாரர் கூடுதல் மனுதாக்கல் செய்தனர். இதையடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் புகாரை சிபிஐ விசாரிக்க ஐகோர்ட் உத்தரவிட்டது.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா பிறப்பித்த இந்த உத்தரவின் முக்கிய அம்சங்கள் இங்கே:

ஒரு குற்ற வழக்கை விசாரிக்கும் புலன் விசாரணை அமைப்பிடமிருந்து மற்றொரு அமைப்புக்கு மாற்ற நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது. அதேநேரம் வழக்கமான முறையில் இந்த அதிகாரத்தை பயன்படுத்த முடியாது. இந்த வழக்கில் மாநில காவல்துறை மீது மனுதாரர் பாரதி தரப்பில் குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார். அப்படிப்பட்ட சூழலில் உயர் நீதிமன்றத்தின் அதிகாரத்தை எச்சரிக்கையுடனும், கவனத்துடனும் செயல்படுத்த வேண்டும். குற்றச்சாட்டுகள் குறித்த நேர்மையான விசாரணை நடக்கிறது என்ற நம்பிக்கையை மக்கள் மனதில் ஏற்படுத்த வேண்டும்.

இந்த வழக்கை பொறுத்தவரை உயர்ந்த பதவியில் உள்ள நபரின் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளாதால், மனுதாரர் அளித்த புகாரை லஞ்ச ஒழிப்பு துறையிடமிருந்து வேறு அமைப்புக்கு மாற்ற முடிவெடுக்கப்படுகிறது.

பொது வாழ்வில் அனைவரும் நேர்மையுடன் இருக்க வேண்டும். அரசியலில் இருப்பவர்கள் மீதான நேர்மையை நிரூபிக்கும் வகையில் வேறு விசாரணைக்கு உத்தரவிடுவதை வெறுப்பின் காரணமாக உத்தரவிடுவதாக கருதக்கூடாது.

உயர் பதவியில் இருக்கும் நபர் மீது தீவிரமான குற்றச்சாட்டு உள்ளதால் தானாக முன்வந்து, தன்னிச்சையாக விசாரிக்க கூடிய சுதந்திரமான விசாரணை அமைப்பிடம் ஒப்படைக்க வேண்டும். அப்போதுதான் சம்பந்தப்பட்ட நபரின் மீதான சந்தேகங்கள் கலைந்து நம்பிக்கை உண்டாகும்.

புகாரில் முகாந்திரம் உள்ளதா இல்லையா என்ற முடிவுக்கு தற்போதைய சூழ்நிலையில் வரமுடியாது. இந்த புகாரை லஞ்ச ஒழிப்புதுறை விசாரித்தால் முறையாக இருக்காது. புகாரை விசாரிக்கும் புலனாய்வு அமைப்பு முதல்வரின் கட்டுப்பாட்டிலேயே இருப்பதால் விசாரணை நேர்மையாக இருக்காது என்ற முடிவுக்கு வருகிறேன். அதனடிப்படையில், மனுதாரர் அளித்த புகாரை சிபிஐ விசாரிக்க உத்தரவிடப்படுகிறது.

மனுதாரர் அளித்த புகார் மனு, அதனடிப்படையில் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் கிடைத்த ஆவண ஆதாரங்களை லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனர் ஒரு வாரத்தில் சென்னை சிபிஐ இணை இயக்குனரிடம் ஒப்படைக்க வேண்டும். ஆவணங்கள் கிடைத்தவுடன் ஆரம்பகட்ட விசாரணையை தொடங்கி அதை மூன்று மாதத்தில் முடிக்க வேண்டும்.

ஆரம்பகட்ட விசாரணையில் முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்து சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மனுதாரர் கூறும் குற்றச்சாட்டுகள் மீது எவ்வித கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை என்பதை மீண்டும் தெளிவு படுத்துகிறேன். வெளிப்படையான நேர்மையான விசாரணை நடப்பதை உறுதி செய்ய வேண்டும் என்ற நீதியின் மீதான அக்கறையுடன் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், டெண்டர் விவகாரம் தொடர்பான சிபிஐ விசாரணையை எதிர்த்து மேல் முறையீடு செய்யவுள்ளோம் என அதிமுக தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் பொன்னையன், அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் கூறியதாவது:

முதலமைச்சர் மீதான புகார் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம். நெடுஞ்சாலைத்துறை டெண்டர் வழங்கியதில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை. முதலமைச்சர் மீதான புகாரை விரைவுப்படுத்தவே எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.

லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கை முழுவதும் முடித்துவிட்டது. லஞ்ச ஒழிப்புத்துறை விசாரித்து முடித்துவிட்ட நிலையில் சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது தவறு. நீதிமன்றத்தின் மீது நாங்கள் எந்த குற்றச்சாட்டையும் கூறவில்லை. 2009-ல் திமுக ஆட்சியில் சாலை பணிக்கு ஒரு கிலோ மீட்டருக்கு 33 கோடி ரூபாய் டெண்டர் விடப்பட்டுள்ளது. தற்போதைய அதிமுக ஆட்சியில் சாலை பணிக்கு ஒரு கிலோ மீட்டருக்கு 10 கோடி ரூபாய் மட்டுமே டெண்டர் விடப்பட்டுள்ளது. தற்போது டெண்டர் வழங்கப்பட்டுள்ள நிறுவனத்திற்கு, திமுக ஆட்சியில் 10-க்கும் மேற்பட்ட டெண்டர்கள் வழங்கப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலை ஒப்பந்த முறைகேட்டில் அப்போதைய திமுக அரசு ஈடுபட்டதற்கு ஆதாரம் உள்ளது. விரைவில் திமுக மீது வழக்கு தொடருவோம்’. இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஏற்கனவே குட்கா ஊழல் வழக்கில் தமிழக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், மத்திய கலால் அதிகாரிகள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். விழுப்புரம் எஸ்.பி ஜெயகுமார் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகளையும் சிபிஐ விசாரித்து வருகிறது. மேலும் உயர் போலீஸ் அதிகாரிகள், சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோருக்கு அந்த வழக்கு நெருக்கடி கொடுக்கும் என தெரிகிறது.

குட்கா ஊழலுக்கு எதிராக முதலில் வருமான வரித்துறையினர்தான் களத்தில் இறங்கி நடவடிக்கையை ஆரம்பித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் எடுத்துக் கொடுத்த ஆதாரங்கள் அடிப்படையில் சிபிஐ துருவி வருகிறது.

நெடுஞ்சாலைத்துறை ஊழலைப் பொறுத்தவரை கடந்த சில மாதங்களாகவே நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தாரர்களை வருமான வரித்துறை தனது ரெய்டு மற்றும் விசாரணையால் உலுக்கிக் கொண்டிருக்கிறது. அதே விவகாரம் தற்போது நீதிமன்ற உத்தரவு மூலமாகவே சிபிஐ வசம் வந்து சேர்ந்திருக்கிறது. எனவே இந்த வழக்கையும் சிபிஐ சீரியஸாக விசாரிக்க ஆரம்பித்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எடப்பாடி பழனிசாமி உள்பட அதிமுக அமைச்சர்கள் பலரையுமே சிபிஐ தனது விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரும் வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close