தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வறுத்தெடுப்பதும், அ.ம.மு.க. துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனை துணை முதல்வர் ஓ.பி.எஸ். புரட்டி எடுப்பதும் என அவர்களுக்குள்ளேயே ஆளுக்கொருவரை குத்தகைக்கு எடுத்து விமர்சித்து வந்தனர். இதுவரையில், டி.டி.வி.யை பெரிதாக விமர்சித்து எங்குமே எடப்பாடியார் பேசியதில்லை. அண்மையில் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி, டி.டி.வி. தினகரனையும், அவரோடு கரம் கோர்த்துள்ள 18 முன்னாள் எம்.எல்.ஏ.க்களையும் வறுத்தெடுத்துவிட்டார்.
"தங்களது தொகுதிகளில் அரசின் பணிகள் முடங்கியுள்ளதாக 18 தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களும் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளார்களே?" என செய்தியாளர்கள் கேட்டதும் தான் தாமதம், "ஜெயலலிதாவின் உழைப்பால் இந்த 18 பேரும் எம்.எல்.ஏ. ஆனார்கள். ஜெயலலிதாவின் அரசுக்கு துரோகம் விழைவித்த காரணத்தால், அவர்களுக்கு தக்க பாடத்தை இறைவன் அளித்திருக்கின்றான். எங்கும் வளர்ச்சிப் பணிகள் தேக்கமடையவில்லை. 18 தொகுதிகள் மட்டுமல்லாது, 234 தொகுதிகளிலும் அரசின் பணிகள் நடைபெறுகிறது." என்று சீறிவிட்டார்.
"இரட்டை இலை துரோகிகளின் சின்னமாகிவிட்டது என்கிறாரே டி.டி.வி.?" என்றதற்கு, "அவர் தான் முதல் துரோகி. இருபெரும் தலைவர்கள் உருவாக்கிய இவ்வியக்கத்தை, எதிரிகளோடு சேர்ந்து உடைக்க வேண்டுமென சதி செய்கிறார். இது மக்களுக்கு மட்டுமல்ல, கட்சித் தொண்டர்களுக்கும் தெரியும்." என்று பொங்கிவிட்டார்.
மேலும், "பதவிக்காக பச்சோந்தி போல, பா.ஜ.க.விற்கும், காங்கிரஸுக்கும் தி.மு.க.வினர் நிறம் மாறுவார்கள். சந்திரபாபு நாயுடுவும் 2014-ல் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து, நான்கரை ஆண்டுகள் பதவி சுகத்தை அனுபவித்துவிட்டு, இன்று தேர்தல் நெருங்கியவுடன் தன் நிறத்தை மாற்றிக் கொண்டுள்ளார். இவர்களைப் போல கொள்கையை புறந்தள்ளிவிட்டு, நிறம் மாறுபவர்கள் நாங்கள் அல்ல. மாநிலத்தின் வளர்ச்சிக்காகத் தான் மத்திய அரசோடு இணக்கமாக இருக்கிறோமே தவிர, இது கூட்டணி அல்ல. இவ்வளவு பேசும் மு.க.ஸ்டாலின், பாலாற்றின் குறுக்கே ஆந்திரா தடுப்பணை கட்டுவது குறித்து சந்திரபாபு நாயுடுவிடம் ஏன் கேட்கவில்லை?" என ஸ்டாலினையும், சந்திரபாபு நாயுடுவையும் வறுத்தார்.
கழகத்திலிருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து இணைய வேண்டுமென ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். இருவரும் சில தினங்களுக்கு முன்னர் கூட்டாக அறிக்கை விட்டிருந்தனர். இதன் தொடர்ச்சியாக, டி.டி.வி. முகாமிலுள்ள சில முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடியார் பக்கம் தாவ இருப்பதாக செய்திகள் கசிந்தது. தற்போது எடப்பாடியார் அளித்திருக்கும் பேட்டியில், தகுதிநீக்கம் செய்யப்பட்ட அந்த 18 பேரும் துரோகிகள் என முத்திரை குத்தி, அவர்கள் மீண்டும் கட்சிக்குள் இணைவதை அவரே தடுத்துவிட்டார்.
முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் 18 பேரும் டி.டி.வி.யுடன் மேலும் சில காலமிருந்து குடைச்சல் கொடுக்கட்டும் என விரும்புகிறாரா?, அல்லது அவர்களை கைகழுவி விட்டுவிட்டாரா? என அ.தி.மு.க.விற்குள் பட்டிமன்றமே போய்க் கொண்டிருக்கிறது.