மின்சார திருத்தச் சட்டம் 2022ஐ ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும் என தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில், மாநில முதலமைச்சர்கள் கலந்துகொள்ளும் தென் மண்டல கவுன்சில் கூட்டம் உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெற்றது.
கடந்த ஆண்டு இந்தக் கூட்டம் திருப்பதியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எல்லை, சட்டம் ஒழுங்கு, சாலை மற்றும் எரிசக்தி, சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்படும்.
இதில் கேரள முதலமைச்சர் பினராய் விஜயன், கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, ஆந்திரா மற்றும் தெலங்கானா முதலமைச்சர்கள் மற்றும் புதுச்சேரி மற்றும் அந்தமான், லட்சத்தீவு பிரதேசங்களின் துணை நிலை ஆளுநர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
இந்தக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “சரக்கு மற்றும் சேவை வரி அமலாக்கப்பட்டுள்ளதால் மாநில வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இழப்பீடு தொகை காலத்தை நீட்டிக்க வேண்டும்.
மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்பதில் தமிழ்நாடு உறுதியாக உள்ளது. நாம் திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். எங்கள் மொழிக் குடும்பத்துக்கு நீண்ட வரலாறு உண்டு. அடுத்த முறை கூட்டத்தை தமிழ்நாட்டில் நடத்த வேண்டும்.
புதுப்பிக்க எரிசக்தி விவகாரத்தில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது. அண்டை மாநிலங்களை இணைக்கும் வகையில் அதிவிரைவு ரயில் திட்டங்கள் தொடங்கப்பட வேண்டும்” என்றார்.
மேலும், “மின்சார திருத்தச் சட்டம் 2022-ஐ ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும்” என்றும் வலியுறுத்தினார். தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் கலந்துகொள்ள மு.க. ஸ்டாலின் ஒரு நாள் முன்னதாகவே திருவனந்தபுரம் சென்றுவிட்டார்.
அங்கு மாநி்ல முதலமைச்சர் பினராய் விஜயனை சந்தித்து திராவிட மாடல் புத்தகத்தை வழங்கினார். தொடர்ந்து, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”