சென்னை ஆளுநர் மாளிகையில் நேற்று நடைபெற்ற உள்ளாட்சி அமைப்புகள் முறை மன்ற நடுவத்தின் அதிகாரி சோ.அய்யரின் பதவியேற்பு விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் தமிழக அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியின்போது ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை தமிழக முதல்வர் பழனிசாமி தனியாக சந்தித்துப் பேசினார். அப்போது தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து பேசப்பட்டது. முன்பே உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி மத்திய அரசு தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததால் விவசாயிகளும் தமிழகத்தில் விவசாயமும் பின்னடைவை சந்தித்துள்ளது.
காவிரி நதிநீர் பங்கீடு வழக்கில், kஅடந்த பிப்ரவரி 16ம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பில் தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி நீரை வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. மேலும் காவிரி விவகாரத்தை தீவிரமாக கண்காணிக்க தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு மார்ச் 29ம் தேதிக்குள் அமைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இருப்பினும் மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொள்ளாததால் தமிழகத்திற்கு இன்று வரை காவிரி நீர் வந்தடையவில்லை.
மேலும் உச்சநீதிமன்றத்தில் காலக்கெடு முடிவடையும் நேரத்தில், “ஸ்கீம்” என்ற வார்த்தைக்கு விளக்கம் கோரி மத்திய அரசு மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம், தீர்ப்பை பின்பற்றாத மத்திய அரசைக் கண்டித்தது. பின்னர், வரும் மே 3ம் தேதிக்குள் காவிரி குழுவுக்கான வரைவு திட்டத்தை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவு அளித்துள்ளது.
இவ்வாறு நாளை மறுநாள் உச்சநீதிமன்றம் இரண்டாவது முறையாக அளித்த கெடு முடிவடையும் வேளையில், மத்திய அரசு கூடுதல் அவகாசம் கோரியுள்ளது. இதனால் தமிழக அரசு உட்பட எதிர்க்கட்சிகள் அனைத்தும் கண்டனம் தெரிவித்துள்ளது. பொது மக்களும் அரசியல் தலைவர்கள் போராட்டக் களத்தில் குதித்துள்ளனர்.
இத்தகைய நெருக்கடியான சூழலிலும், மே 3ம் தேதிக்குள் தமிழகத்தில் காவிரி விவகாரத்திற்கு நிச்சயம் தீர்வு கிடைக்கும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து நேற்று நடைபெற்ற நிகழ்ச்சிக்குப் பின்னர் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து தீர்வு காணும் வகையில் பேச்சு வார்த்தை நடத்தினார்.
காவிரி ஸ்கீம் வரைவு திட்ட வழக்கு விசாரணை மே 3ம் தேதி மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இதுவரை காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு நிகழ்ந்து வரும் அநீதிகள் அனைத்திற்கும் நாளை மறுநாள் தீர்வு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.