/indian-express-tamil/media/media_files/GHB6HrftyiF9hUHw7Zev.jpg)
'எல்லாவற்றிற்கும் எனக்கும் உறுதுணையாக இருப்பது என் மனைவி துர்கா தான்' என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
mk-stalin | tamil-nadu: 1 கோடி குடும்ப தலைவிகளுக்கு மாதம் தலா 1,000 ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை காஞ்சிபுரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். அறிஞர் அண்ணாவின் 115வது பிறந்தநாளான இன்று கலைஞர் மகளிர் உதவித்தொகை திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்.
பெண்கள் குறித்து இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியது பின்வருமாறு:-
"மதத்தின் பெயராலும், பழமையின் பெயராலும் பெண்கள் வீட்டுக்குள்ளேயே முடக்கப்பட்டனர். பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டு, அடிமையாக நடத்தப்பட்ட காலம் ஒன்று இருந்தது. பெண்கள் உடல்ரீதியாக எதிர்கொள்ளும் இயற்கை சுழற்சியை கூட 'தீட்டு' எனக்கூறி முடக்கி வைத்தனர்.
அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு எனக்கூறி பெண்களை முடக்கிவைத்தனர். உயர் வகுப்பை சேர்ந்த பெண்களும் இதுபோன்ற துன்பங்களை அனுபவித்தனர். குழந்தை திருமணத்தை ஆதரிக்கும் பிற்போக்குவாதிகள் இருக்கத்தான் செய்கின்றனர். சிறுமிகளுக்கு திருமணம் செய்துவைக்க முடியவில்லை என்பதால் திராவிட இயக்கத்தின் மீது சிலருக்கு கோவம். பெண்களை அனைத்து நிலைகளிலும் உயர்த்துவதே திராவிட மாடல் ஆட்சி. கைம்பெண் மறுமணம், பெண் குழந்தை கல்வி என சமூக சீர்திருத்தங்களை உருவாக்கியதே திராவிட இயக்கம்.
ஆண்களை விட பெண்களே அதிகம் படிக்கின்றனர். அதுவும் நன்றாக படிக்கின்றனர். ஆண்களை விடவும் உயர்ந்தவர்களாக பெண்கள் வளர்ச்சி அடைவது தான் திராவிட மாடலின் நோக்கம். வீட்டில் பிரதிபலன் பாராமல் உழைக்கும் பெண்களை 'ஹவுஸ் ஒய்ப்' என சாதாரணமாக கூறி விடுகின்றனர். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னும் ஒரு பெண்ணின் பல மணி நேர உழைப்பு மறைந்துள்ளது. மனைவி வேலைக்கு செல்லவில்லை வீட்டில் சும்மாதான் இருக்கிறார் என சிலர் கூறுவார்கள். பெண்கள் வீட்டில் பார்க்கும் வேலைகளை எந்த ஆணும் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. தாய்மையும், பெண்மையுமே உலகை வழிநடத்துகிறது.
தாயின் கருணை, மனைவியின் உறுதுணை, மகளின் பேரன்பே மிகப்பெரிய செல்வம். எல்லாவற்றிற்கும் எனக்கும் உறுதுணையாக இருப்பது என் மனைவி துர்கா தான். அடுத்ததாக என் மகள் செந்தாமரை எனக்கு மிகவும் உறுதுணையாக இருக்கிறார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.