தமிழகத்தில் வடகிழக்கு பருவழை பரவலாக பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்று, நாளை, மிக முதல் அதிகனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.
இந்த நிலையில், இந்த பருவமழை தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து துறை அலுவலர்கள் உடன் ஆலோசனை நடத்தினார்.
இதையொட்டி முன்னெச்சரிக்கையை நடவடிக்கையாக, இன்று செவ்வாய்க்கிழமை (அக்.15) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். விழுப்புரத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து ஆட்சியர் பழனி அறிவித்தார்.
தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை காரணமாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். அதன்படி, கோவையில் இன்று அனைத்து பள்ளிகளுக்கும் அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது மதியம் வரை மட்டுமே பள்ளிகள் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்திற்கும் இந்த விடுமுறை பொருந்தும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பள்ளி விடுமுறை இல்லை
சிவகங்கை, கன்னியாகுமரி, ராமநாதபுரம், வேலூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் இன்று வழக்கம் போல் இயங்கும். மழை இல்லாத காரணத்தால் விடுமுறை இல்லை என மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது மழை இல்லாத காரணத்தினால் விடுமுறை அளிப்பதற்கு வாய்ப்பு இல்லை என கரூர், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளனர். அதனால் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை எனக் கூறியுள்ளனர்.
அதே போல், திருச்சி, திருவாரூர் மாவட்டத்தில் மழை இல்லாத காரணத்தால் இன்று பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“