தஞ்சை, திருவாரூர், நாகை உள்பட டெல்டா மாவட்டங்களில் 4 நாள் அரசு முறை பயணம் மேற்கொள்ளும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்டா பகுதிகளை ஆய்வு செய்ய புறப்பட்டார். சென்னையில் இருந்து விமான மூலம் புறப்பட்டு நண்பகல் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார்.
முதல்வர் ஸ்டாலினை மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், அமைச்சர்கள் கே.என் நேரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் தி.மு.க நிர்வாகிகள் பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்தனர். அதன் பின்னர் சாலை மார்க்கமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுர கல்லூரி பவள விழாவில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார்.
நாளை மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த ஊரான நாகை மாவட்டம் திருக்குவளையில் பள்ளி குழந்தைகளுக்கான காலை உணவு திட்டத்தை தொடங்கி வைக்கிறார். அதன் பின்னர், நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சட்டம் ஒழுங்கு கூட்டத்தில் பங்கேற்கிறார்.
தொடர்ந்து 26ம் தேதி நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளின் ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டு திருவாரூர் செல்லும் அவர், 27ம் தேதி நாகை கம்யூனிஸ்ட் கட்சி எம்பி செல்வராஜ் மகள் திருமணம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, பின்னர் மதியம் திருச்சியில் இருந்து விமானம் மூலமாக சென்னை செல்கிறார்.
இன்று முதல்வர் திருச்சி வந்ததை முன்னிட்டு முதல்வர் செல்லும் திருச்சி தஞ்சை பாதையில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil