CM MK Stalin Chennai Kilambakkam bus terminus: சென்னை கோயம்பேடு மற்றும் புறநகர் பகுதியில் உள்ள ஜி.எஸ்.டி. சாலைகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், தென் மாவட்டங்களுக்கு செல்லும் பொதுமக்கள் எளிதாக பயணத்தை மேற்கொள்வதற்காகவும் வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் 88.52 ஏக்கரில், சுமார் 88.52 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.400 கோடி மதிப்பீட்டில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் புறநகர் பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. இந்த பேருந்து நிலையத்திற்கு கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த பேருந்து நிலையத்தில் கடந்த 12-ம் தேதி 100-க்கும் மேற்பட்ட பேருந்துகளை இயக்கி முதற்கட்ட சோதனை ஓட்டம் நடைபெற்ற நிலையில் இன்று திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார். பேருந்து நிலைய கல்வெட்டு மற்றும் அங்கு அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி சிலையையும் முதலமைச்சர் திறந்து வைத்தார். பின்னர் பேட்டரி காரில் அமர்ந்தபடி பேருந்து நிலையத்தை பார்வையிட்டார்.
கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் புதிய வசதிகள் என்ன?
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் 130 அரசுப் பேருந்துகள் மற்றும் 85 ஆம்னி பஸ்கள் நிறுத்தும் வசதிகள் உள்ளது. தினமும் 2,310 பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் நாளைக்கு ஒரு லட்சம் பயணிகள் பயன்பெறுவர்.
இந்த பேருந்து நிலையத்தில் 4 உணவகங்கள், 100 கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.12 இடங்களில் குடிநீர் வசதியும், 540 கழிவறைகள் அமைப்பும் உள்ளது.
260 கார்கள், 568 பைக்குகள் நிறுத்தும் வகையில் முதல்தளமும், 84 கார்கள், 2230 பைக்குகள் நிறுத்தும் வகையில் 2வது தளமும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பேருந்து நிலையத்தை ஏரளமான மக்கள் எளிதாக பயன்படுத்தும் வகையில் போக்குவரத்து வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சிசிடிவி கேமராக்கள், முழுவதும் குளிர்சாதன வசதி, மழை நீர் வடிகால்கள், சூரிய தகடுகள், ஓட்டுநர், நடத்துனர்களுக்காக ஓய்வு அறைகள் அமைப்புகள் உள்ளன.
இந்த பேருந்து நிலையத்தில் இருந்து ஊரப்பாக்கம் ரயில் நிலையம் 1 கிலோமீட்டர் தொலைவில் தான் அமைந்துள்ளது. விமான நிலையம்- கிளாம்பாக்கம் வரை சென்னை மெட்ரோவை நீட்டிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
ஊரப்பாக்கம் ரயில் நிலையத்தை அடையும் வகையில் நடைமேம்பாலம் எனப்படும் ஸ்கைவாக் அமைக்கப்படுகிறது. கண் பார்வையற்றவர்களும் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் பிரெய்லி பலகைகள் வைக்கப்படுகின்றன. கியூஆர் கோடு டிக்கெட்டுகள் வழங்கப்படும்.
இந்த பேருந்து நிலையத்தில் பாலூட்டும் தாய்மார்களுக்கான அறை, ஏ.டி.எம் மையங்கள், காவல் கட்டுப்பாட்டு அறைகள், போக்குவரத்து அலுவகலகங்கள் உள்ளிட்டவை உள்ளன. தனியாக காவல் நிலையமும் அமைக்கப்பட்டு வருகிறது. முக்கியமாக புயல் வெள்ளக் காலங்களில் மழை நீர் தேங்காமல் வெள்ள நீர் வடிகால் அமைக்கப்பட்டு உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“