தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறையில் சார்பில் சென்னை, ஆலந்தூர் வட்டம், நந்தம்பாக்கத்தில் 116 கோடி ரூபாய் மதிப்பீட்டில், நிதிநுட்ப நகரம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினார்.
நந்தம்பாக்கத்தில் ரூ.116 கோடி மதிப்பீட்டில் நிதிநுட்ப நகரம் மற்றும் ரூ.254 கோடி மதிப்பீட்டில் நிதிநுட்ப கோபுரம் கட்டும் பணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
இதைப்பற்றி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, "மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (17.06.2023) தொழில், முதலீடு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறையின் சார்பில் சென்னை, நந்தம்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தால் சென்னை, ஆலந்தூர் வட்டம், நந்தம்பாக்கத்தில் 116 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 56 ஏக்கர் நிலப்பரப்பில், நிதிநுட்ப நகரம் அமைப்பதற்கும், அங்கு முதற்கட்டமாக 254 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5.6 லட்சம் சதுர அடி கட்டட பரப்பளவில் சர்வதேச தரத்திலான நிதிநுட்ப கோபுரம் என்ற அடுக்குமாடி கட்டடம் கட்டுவதற்கும் அடிக்கல் நாட்டினார்.
நிதிநுட்ப நகரத்திற்கு அடிக்கல் நாட்டுதல்:
தகவல் தொழில்நுட்ப துறையில் ஏற்படக்கூடிய அதிவேக வளர்ச்சியை கருத்தில் கொண்டு, கடந்த 2000-ஆம் ஆண்டு சென்னை ராஜிவ் காந்தி சாலையில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் தொலைநோக்குப் பார்வையோடு டைடல் பார்க் அமைக்கப்பட்டது.
இதன்மூலம் அந்த சாலை மட்டுமின்றி, அப்பகுதி முழுவதும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அமையப்பெற்று, தற்போது தமிழ்நாட்டின் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் அடையாளமாக விளங்கி வருகின்றது.
அதேபோன்று, டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி உலகம் நகர்ந்து கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில், நிதிநுட்ப துறை சார்ந்த வேலைவாய்ப்புகளை உருவாக்கி, நிதிநுட்ப துறையின் சிறந்து விளங்கும் மாநிலமாக தமிழ்நாட்டினை உருவாக்க வேண்டும் என்பது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உயரிய நோக்கமாகும்.
அதை நிறைவேற்றும் வகையில், 2021- 2022 ஆம் ஆண்டிற்கான திருத்த வரவு- செலவுத் திட்ட அறிக்கையில், நிதிநுட்பத் துறை வளர்ச்சிக்கு தமிழ்நாட்டில் மாபெரும் வாய்ப்புகள் உள்ளதால் அதனை முன்னெடுக்கும் வகையில் சென்னை நந்தம்பாக்கத்தில் நிதிநுட்ப நகரம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அந்த அறிவிப்பிற்கிணங்க, தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தால் சென்னை, ஆலந்தூர் வட்டம், நந்தம்பாக்கத்தில் 116 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 56 ஏக்கர் நிலப்பரப்பில் நிதிநுட்ப நகரம் அமைக்கப்படவுள்ளது. இந்த நிதிநுட்ப நகரம், நிதித்துறை சார்ந்த உள்நாட்டு மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் கிளைகளை அமைப்பதற்கு எதுவாக சாலைகள், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், திடக்கழிவு மேலாண்மை, மழைநீர் வடிகால் போன்ற உள்கட்டமைப்பு வசதிகளுடன் அமைக்கப்படும். மேலும், அங்கு பணிபுரிபவர்களுக்கு அந்நகரத்திலேயே குடியிருப்பு வசதி ஏற்படுத்தப்படுவதுடன், வணிக வளாகங்கள், நட்சத்திர விடுதிகள், பூங்காக்கள் மற்றும் உணவகங்கள் போன்ற அணைத்து வசதிகளையும் கொண்டிருக்கும். இந்நகரம் அமைவதால் மூலம் 12,000 கோடி ருபாய் அளவிற்கு முதலீடுகள் ஈர்க்கப்படுவதுடன், சுமார் 80,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திட வழிவகை ஏற்படும்.
நிதிநுட்ப கோபுரம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டுதல்:
நிதிநுட்ப நகர திட்டத்தின் ஒரு பகுதியாக 254 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 5.6 கோடி சதுர ஆதி கட்டட பரப்பளவில் சர்வதேச தரத்திலான ஒரு நிதிநுட்ப கோபுரம் என்ற அடுக்குமாடிக் கட்டடம் கட்டப்படவுள்ளது.
நிதி மற்றும் நிதிநுட்ப நிறுவனங்கள் தங்கள் செயல்பாடுகளை தொடங்குவதற்கு தேவையான அணைத்து வசதிகளுடன் தயார் நிலையில் உள்ள அலுவலகங்கள் இங்கு அமைக்கப்படும்.
இதில் 250 இருக்கைகள் மற்றும் 50 இருக்கைகள் கொண்ட கூட்ட அரங்கங்கள், குழந்தைகள் காப்பகம், உடற்பயிற்சி கூடம், உணவகங்கள் போன்றவை அமைக்கப்படும்.
இந்த நிதிநுட்ப கோபுரம் அமைவதால் மூலம், 1000 கோடி ரூபாய் அளவிற்கு முதலீடுகள் ஈர்க்கப்படுவதுடன் சுமார் 7000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திட வழிவகை ஏற்படும்.
இந்நிகழ்ச்சியில் நிதி, மின்சாரம் மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், தொழில், முதலீடு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி, தொழில், முதலீடு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ச.கிருஷ்ணன், இ.ஆ.ப., தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் ஜெயஸ்ரீ முரளிதரன், இ.ஆ.ப., செயல் இயக்குனர் டாக்டர் வி.ஜெயச்சந்திர பானு ரெட்டி, இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்", என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.